திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை 5) தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் AI
மனிதர்களை போன்று கணினியை செயல்பட வைப்பதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற ஏஐ. பல்வேறு துறைகளில் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் ஏஐ தொழில்நுட்பம், தற்போது திரைத்துறையிலும் படிப்படியாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர், நடிகைகளின் முகத்தோற்றத்தை அப்படியே உருவாக்கம் செய்து நடிக்க வைப்பது, அவர்களின் குரலை பயன்படுத்தி பேச வைப்பது, கதை, திரைக்கதை, பாடல்கள் எழுத வைப்பது போன்றவை சாத்தியம் என்று ஏஐ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தி கோட் படத்தில் விஜயகாந்த்
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் “தி கோட்”. இந்தப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஸ்நேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “தி கோட்” படத்தில் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
மேலும், விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் “படைத்தலைவன்” படத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
இந்நிலையில், திரைப்படங்களில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று (ஜூலை 5) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
விஜயகாந்தை எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை.
எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் குறித்து வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்
கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்!