தமிழ் திரையுலகில் எல்லோருக்கும் பிடித்தமான மனிதராக மிளிர்ந்தவர் விஜயகாந்த். அவரது எளிமையும் ஈகைக்குணமும் அவரால் வாழ்வில் ஒரு நிலையை அடைந்த, அவருடன் பழகிய, அவரது படங்களில் பணியாற்றிய, அவரைத் தெரிந்த மனிதர்கள் நினைவில் நிற்கும் வகையில் எத்தனையோ சம்பவங்களை விட்டுச் சென்றிருக்கிறது. திரையுலக வரலாற்றைப் பொறுத்தவரை, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ரஜினி, கமலுக்கு இணையான ஒரு இடத்தையே அவருக்குத் தந்திருந்தனர் ரசிகர்கள். வெற்றிப்படங்கள் தருவதில் மட்டுமல்லாமல், மிக வேறுபட்ட திரையனுபவத்தை வழங்குவதிலும் அவர் சமர்த்தராக இருந்தார்.
‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார் விஜயகாந்த். அதில் நடிப்பதற்கு முன்னரே, பல தயாரிப்பு நிறுவனங்களைத் தேடிச் சென்று வாய்ப்பு கேட்ட அனுபவங்கள் அவரிடம் ஏராளம் உண்டு. அந்த படத்திற்குப் பிறகும் கூட, அவரைத் தேடிப் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம் வரை இதே கதைதான்.
ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம், விஜயகாந்த் எனும் புதிய நட்சத்திரத்தைத் திரையில் காட்டியது. ‘ரஜினிகாந்துக்கு போட்டியாக வருவேன்’ என்று அவர் தன்னம்பிக்கையுடன் சில பத்திரிகைகளில் அளித்த பேட்டிகள் வெறும் வார்த்தை ஜாலமல்ல என்பதை நிரூபித்தது.
ஏனென்றால், அதற்குச் சில காலம் முன்னதாக, ’முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருந்தார் விஜயகாந்த். அது தவறு என்று ‘ஹேஷ்யம்’ சொன்னவர்கள் உண்டு. ஆனால், அதே விஜயகாந்தின்‘சட்டம் ஒரு இருட்டறை’யை இந்தியில் ‘அந்தா கானூன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தபோது, அதில் நாயகனாக நடித்தவர் ரஜினிகாந்த்.
இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே திரையுலகம் சிவப்புக்கம்பள வரவேற்பைத் தந்திருக்கிறது. விஜயகாந்தின் வாழ்விலும் அதுவே நிகழ்ந்தது. அதன்பிறகு, அவர் தனது தனித்துவமான நடிப்பினால் திரையுலகில் முத்திரை பதித்தார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 17 படங்களும், இயக்குனர் ராம.நாராயணன் நடிப்பில் 17 படங்களும் நடித்துள்ளார் விஜயகாந்த். பின்னாட்களில் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குனராக அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்குண்டு.
அவரை இயக்காத இயக்குனர்களே இல்லை எனும் அளவுக்குத் தான் சார்ந்த காலத்தில் இருந்த அத்தனை இயக்குனர்களோடும் இணைந்து படங்கள் தந்திருக்கிறார் விஜயகாந்த். அவற்றில் பெரும்பாலானவை பி, சி செண்டர்களை பிரமிக்க வைத்த வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன.
அப்படி ரசிகர்கள் மனதில் நிற்கும் விஜயகாந்த் படங்கள் என்னென்ன?
வைதேகி காத்திருந்தாள்!
’பழிக்குப் பழி’ வாங்கும் கதைகள், சண்டைக்காட்சிகள், கிளப் டான்ஸ் என்று ஆண்கள் மட்டுமே விஜயகாந்த் படங்களைப் பார்க்கத் திரண்ட காலகட்டத்தில், பெண்கள் கூட்டமும் தியேட்டருக்கு வரும் என்று முதன்முறையாக நிரூபித்தது ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். காதலியின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரது நினைவாகவே வாழும் வெள்ளைச்சாமி பாத்திரத்தைக் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.
கரிமேடு கரிவாயன்!
1984, 1985ஆம் ஆண்டுகளில் மட்டும் விஜயகாந்த் நடிப்பில் 35 படங்கள் வெளியாகின. விஜயகாந்த் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ‘ராமன் ஸ்ரீராமன்’ படமும், அவர் காமெடியில் கலக்கிய ‘நானே ராஜா நானே மந்திரி’ படமும் அந்த காலகட்டத்தில் வந்தவைதான். அப்போது வந்த படங்கள் சுமாரான வெற்றிகளாக அமைந்தபோது, மீண்டும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தது ராம.நாராயணன் இயக்கிய ‘கரிமேடு கரிவாயன்’. ’மலையூர் மம்பட்டியான்’ வெற்றியானது, அதேபோல உண்மை வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட கதைகளைத் தேடித் திரையுலகினரை திரியச் செய்தது. அப்படித் தயாரானவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய படம் இது.
அம்மன் கோயில் கிழக்காலே!
விஜயகாந்த் படங்களில் ரொமான்ஸ், குடும்ப சென்டிமெண்ட் குறைவு என்று ரசிகர்கள் கருத ஆரம்பித்தபோது, மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை அந்த வகைமையில் தந்தார் ஆர்.சுந்தர்ராஜன். அந்த திரைப்படம் தான் ‘அம்மன் கோயில் கிழக்காலே’. இந்த படத்தில் இருந்து விஜயகாந்த் – ராதா ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஊமை விழிகள்!
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்ததும் நேராக விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்று இயக்குனர் வாய்ப்பு கேட்கும் வழக்கம் தொண்ணூறுகளில் உருவானது. அதற்குக் காரணமானவர் ஆபாவாணன் மற்றும் அவரது நண்பர்கள். அக்கூட்டணி தந்த ‘ஊமை விழிகள்’, இன்றும் தமிழ் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும். இதில், அக்காலகட்டத்தில் இருந்த தனது இமேஜுக்கு மாறாக வயதான தோற்றத்தில் டிஎஸ்பி தீனதயாளன் ஆக நடித்திருந்தார் விஜயகாந்த்.
உண்மையைச் சொன்னால், இப்படத்திற்கு முன்னரே ‘ராமன் ஸ்ரீராமன்’ படத்தில் திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த டி.கே.பிரசாத்தை இயக்குனர் ஆக்கியிருந்தார் விஜயகாந்த்.
கூலிக்காரன்!
ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனை காரசாரமான அம்சங்களை நிறைத்து, விஜயகாந்த் படங்களுக்கான சந்தை மதிப்பை பல படிகள் மேலே உயர்த்திய படம் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கிய ‘கூலிக்காரன்’. இந்த படத்தில் இருந்தே ‘புரட்சிக்கலைஞர்’ எனும் அடைமொழி விஜயகாந்தைச் சென்று சேர்ந்தது.
உழவன் மகன்!
விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து பெருவெற்றியை ஈட்டிய படம் ‘உழவன் மகன்’. ஆபாவாணன் – அரவிந்தராஜ் கூட்டணி இதிலும் பிரமாண்டப் படம் என்பதற்குத் திரையில் அர்த்தம் சொன்னது. இசையமைப்பாளர்கள் மனோஜ் – கியானுக்கு பெரிய அங்கீகாரத்தைத் தந்த படம் இது.
பூந்தோட்டக் காவல்காரன்!
அடி கான கருங்குயிலே, சிந்திய வெண்மணி, பாராமல் பார்த்த நெஞ்சம் என்று துள்ளல் பாடல்களைக் கொண்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் இயக்குனராக செந்தில்நாதன் அறிமுகமானார். இதில் அந்தோணி என்ற பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார்.
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்!
திரையில் ஆக்ரோஷத்துடன் தோன்றிய பழக்கப்பட்ட விஜயகாந்தை அமைதியின் திருவுருமாகக் காட்டிய படம், மனோபாலா இயக்கிய ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’. இதில் மாமனார் – மருமகனாக வி.கே.ராமசாமியும் விஜயகாந்தும் நடித்த காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருந்தன.
புலன் விசாரணை!
1989ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் படங்கள் பெரிய வெற்றிகளாக அமையவில்லை. அந்தச் சூழலில், அவரை இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்தது ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘புலன் விசாரணை’. ’ஆட்டோ சங்கர்’ வழக்கை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது இதன் கதை. இதில் டிசிபி ஹானஸ்ட் ராஜ் எனும் பாத்திரத்தில் நடித்தார் விஜயகாந்த். பின்னாளில், இதே டைட்டிலில் கே.எஸ்.ரவி இயக்கத்தில் அவர் ஒரு படம் தந்தார். அதுவும் வித்தியாசமானதொரு ஆக்ஷன் படம் தான்.
சத்ரியன்!
மணிரத்னத்தோடு விஜயகாந்த் கைகோர்த்த ஒரே படம் இது. அவர் கதை திரைக்கதை எழுதித் தயாரித்த இப்படத்தை கே.சுபாஷ் இயக்கினார். விஜயகாந்தை மிக ஸ்டைலிஷாக காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் அவர் ஏற்ற ‘அசிஸ்டெண்ட் கமிஷனர் பன்னீர்செல்வம்’ எனும் பாத்திரம், இன்றுவரை ‘மீம்களில்’ இடம்பெற்று வருகிறது.
கேப்டன் பிரபாகரன்!
விஜயகாந்த் நடித்த 100வது படம் இது. இப்படத்தில் அவர் வன இலாகா அதிகாரியாகத் தோன்றியிருந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பனை நினைவூட்டும் கதையைக் கொண்ட இப்படம், விஜயகாந்தின் திரை வாழ்வில் மாபெரும் வெற்றியாக அமைந்தது. இதற்கு முன்னரே, ‘செந்தூரப்பூவே’ படத்தில் கேப்டன் சௌந்தர பாண்டியன் எனும் பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்தார். அப்போது, அந்த படக்குழுவினர் அவரை ‘கேப்டன்’ என்று அழைத்தாலும், ரசிகர்கள் அவரை கேப்டன் என்று சொல்லி அழைக்கத் தொடங்கியது இப்படத்தில் இருந்துதான்.
சின்ன கவுண்டர்!
என்னதான் ஆக்ஷன் படங்களில் இடதுகாலைச் சுவற்றில் வைத்து வலதுகாலால் பைட்டர்களை உதைத்தெடுத்தாலும், திரும்பத் திரும்ப கிராமத்து ரசிகர்கள் கொண்டாடும்விதமாகத் தொடர்ந்து படங்கள் தருவதே விஜயகாந்தின் வழக்கமாக இருந்தது. அதிலொன்று, ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சின்ன கவுண்டர்’. இந்த படத்தில் விஜயகாந்த் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ‘தவசி’. அந்த காலகட்டத்தில், இப்படத்தில் அப்பெயரைக் கண்டறிய ரொம்பவே சிரமப்பட்டார்கள் ரசிகர்கள். 2001ஆம் ஆண்டு இதே பெயரில் கே.ஆர்.உதயசங்கர் இயக்கிய படத்தில் நடித்தார் விஜயகாந்த். அதுவும் வெற்றிப்படமானது.
பெரியமருது!
இனிக்கும் இளமை, ஓம்சக்தி என்று இரு படங்களில் மட்டுமே விஜயகாந்த் வில்லனாக நடித்துள்ளார். அந்த வகையில், அவரை ‘ஆன்ட்டி-ஹீரோவாக’ காட்டியது ’பெரிய மருது’. என்.கே.விஸ்வநாதன் இதனை இயக்கினார். ‘வீரா’வில் நடித்த மகேஷ் ஆனந்த் இதில் வில்லனாக நடித்திருந்தார். அவரது அடியாளாக இதில் விஜயகாந்த் தோன்றியிருப்பார். 1994 தீபாவளிக்கு இப்படம் வெளியானபோது, கமலின் ‘நம்மவர்’, சரத்குமாரின் ‘நாட்டாமை’, பிரபுவின் ‘ஜல்லிக்கட்டு காளை’, பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’, சத்யராஜின் ‘வீரப்பதக்கம்’ உட்பட மொத்தம் 8 படங்கள் வெளியாகின. அவற்றில் ஒன்றாக அமைந்த இப்படம் விஜயகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
வல்லரசு!
1995 முதல் 1999 வரை விஜயகாந்த் நடித்த படங்கள் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தந்தாலும், அவரது ரசிகர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. அவை சுமாரான வெற்றிகளாகவே அமைந்து, அவர்களிடத்தில் ஏக்கத்தை உண்டாக்கின. 2000ஆவது ஆண்டு விக்ரமன் இயக்கிய ‘வானத்தை போல’ அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் தொடர்ச்சியாக, என்.மஹராஜன் இயக்கிய ‘வல்லரசு’, மீண்டும் விஜயகாந்தை ‘ஆக்ஷன் ஹீரோ’வாக நிலைநிறுத்தியது.
ரமணா!
2கே கிட்ஸ்களை பொறுத்தவரை, அவர்களுக்குத் தெரிந்த ஒரு விஜயகாந்த் படமென்று ‘ரமணா’வைச் சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம், அவரை அதுவரை காட்டாத கோணத்தில் வெளிக்காட்டியது. அரசியலில் நுழைய அவர் ஈடுபாடு காட்டிய காலகட்டத்தில், இப்படம் அதற்கேற்ற சூழலை உருவாக்கும் வகையில் திரையில் மலர்ந்தது.
விஜயகாந்தின் 150வது படமாக அமைந்தது, ஆர்.மாதேஷ் இயக்கிய ‘அரசாங்கம்’. அப்படிப் பார்த்தால், தனது 153ஆவது படமாக அமைந்த ‘விருதகிரி’யை அவரே இயக்கி நடித்தார். அதன் பிறகு, அவரது மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதுவே அவரது இறுதியான திரைப்பங்களிப்பு!
’பாட்டுக்கு ஒரு தலைவன்’, ‘பொன்மனச்செல்வன்’ போன்ற படங்களின் வழியாகவே, திரையில் எனக்கு விஜயகாந்த் அறிமுகமானார். அந்த வகையில், 2006இல் வெளியான ‘பேரரசு’ கூட இந்த பட்டியலில் இடம்பெறத்தக்க ஒரு படம் தான். மேற்சொன்ன படங்கள் தவிர்த்து, விஜயகாந்த் நடித்த வேறு சில படங்கள் கூட உங்களால் கொண்டாடப்பட்டிருக்கும். தனிப்பட்ட ரசனை பொறுத்து, படங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் மாறலாம். ஆனாலும், அவற்றின் வழியே பதிந்த விஜயகாந்தின் பிம்பம் என்றென்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
”மத்திய, மாநில அரசு மரியாதை சும்மா வராது”: விஜயகாந்த் மறைவு குறித்து பார்த்திபன்