‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். விரைவில் படம் பார்க்க உள்ளேன் என்று நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய பின்னர் வெளிவரும் முதல் படம் ‘தி கோட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த விஜயகாந்த் முகத்தை ஏஐ தொழிநுட்பம் மூலம் பயன்படுத்தி தொடக்க காட்சியில் நடிக்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படம் குறித்து விஜய பிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது “கோட் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். அதை பார்க்கும் போது உண்மையிலே எனக்கு புல்லரித்துவிட்டது. விரைவில் படம் பார்க்கவுள்ளேன்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய் அண்ணன் ஸ்டார். இன்னும் முழுமையாக அவர் அரசியலில் இறங்கவில்லை. அவர் மாநாட்டிற்கு பல பிரச்சினைகள் எழுந்திருக்கிறது. அவர் என்ன கொள்கையை பின்பற்றுகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு எந்த அளவு இருக்கிறது என்பதை வைத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். மக்களுக்கு நல்லது செய்ய அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என பார்ப்போம்” என்றார்.
விஜய் திரையுலக வாழ்க்கையில் அவரை குக்கிராமம் வரை கொண்டு சேர்த்த படம் செந்தூரப்பாண்டி. இந்த படத்தில் நட்புக்காக முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அவரது அரசியல் வாழ்க்கையும் செந்தூரப் பாண்டி வெற்றி பெற்றது போல தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற வேண்டும் என்ற சென்டிமெண்ட்டாக இருக்க கூடும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்தியப் பிரதேச முதல்வர் தொகுதியில் பாலியல் வன்கொடுமை… கொதிக்கும் காங்கிரஸ்!
யானை உள்பட 150 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு… நமீபியாவில் நடக்கும் கொடூரம்!