யூடியூப் டாப் 10 டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளன.
இந்தாண்டு பொங்கலுக்கு வெளிவந்த நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நெகிழ்ச்சியூட்டும் சென்டிமென்ட் கதை, துள்ளலான பாடல்கள், அசர வைக்கும் நடனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாரிசு திரைப்படம் பெற்றது.
இதற்கிடையே படத்தின் வசூல் உலகளவில் ரூ.300 கோடியை தாண்டிவிட்டதாக தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கேஷ்வரா படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #VarisuHits300Crs என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் யூடியூப் டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் வீடியோக்களே டாப் 10 இடங்களை ஆக்கிரமித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதன்படி கடந்த 3ம் தேதி வெளியான தளபதி 67 டைட்டில் புரோமோ வீடியோ தொடர்ந்து நான்காவது நாளாக யூடியூப் டிரெண்டிங்கில் 39 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ பாடல் 2ம் இடத்தில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து தீ தளபதி, செலிப்ரேசன் ஆஃப் வாரிசு, சோல் ஆஃப் வாரிசு என்று விஜயின் வீடியோக்களே 3,4 மற்றும் 6 இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் மற்றொரு பாடலான ‘வா தலைவா’ பாடலும் யூடியூபில் இன்று வெளியாகி உள்ளது. இதுவும் டாப் 5 டிரெண்டிங்கில் விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் யூடியூபில் சக்கை போடு போட்டு டிரெண்டிங்கில் பொதுவாக வந்துவிடும். எனினும் டிரெண்டிங்கில் முதல் 10 இடங்களில் பெரும்பாலானவை வாரிசு படத்தின் வீடியோக்கள் ஆக்கிரமித்து இருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தென்காசி கடத்தல் வழக்கு: இளம்பெண்ணை காப்பகத்தில் வைத்து விசாரிக்க உத்தரவு
ஆளுநர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் – நாடாளுமன்றத்தில் கனிமொழி