வசூலில் துணிவை முந்தும் வாரிசு!

சினிமா

ஜனவரி 11 அன்று வெளியான துணிவு, வாரிசு இரண்டு படங்களில் வசூல் அடிப்படையில் எந்தப்படம் முதல் இடத்தில் என்கிற தகவல்களை சமூக வலைதளங்களில் அவரவர் வசதிக்கு ஏற்ப வெளியிட்டு வருகின்றனர்.

அடிப்படையில் இரண்டு படங்களின் வசூலை ஒப்பிட முடியாது, காரணம் இரண்டு திரைப்படங்களும் சம அளவு இருக்கை எண்ணிக்கை கொண்ட திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்பதுடன் தமிழ்நாட்டில் அதிகமான திரைகளில் துணிவு திரையிடப்பட்டுள்ளது.

அதே போன்று தெலுங்கில் வாரிசு படத்திற்கு அதிகமான திரைகளிலும் துணிவு குறைவான திரைகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் உண்மையான வசூல் கணக்கை குறிப்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பொதுவெளியில் அறிவிப்பது இல்லை.

ஆனால் வெளிநாடுகளில் வசூல் விபரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்ப் படங்கள் வெளியாகும் முக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

அங்கு விஜய் நடித்த ‘வாரிசு’, அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய படங்கள் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவில் இரண்டு படங்களையும் வெளியிட்ட வினியோக நிறுவனங்கள் படங்களின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளன.

‘துணிவு படம் 7 லட்சம் யுஎஸ் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. (இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடியே 70 லட்சம் ) அஜித்குமார் திரையுலக வரலாற்றில் அமெரிக்க திரையரங்குகளில் அதிகம்வசூல் செய்த படம் துணிவு என்கிறது படத்தை வெளியிட்டுள்ள சரிகம சினிமாஸ் வினியோக நிறுவனம்.

துணிவு படத்தை காட்டிலும் குறைவான வசூல் கணக்கில் இருந்த தமிழ் வாரிசு, அதன் தெலுங்கு பதிப்பு வெளியான பின்பு துணிவு படத்தை முந்தியுள்ளது.

வாரிசு, வாரசுடு இரண்டும் சேர்த்து 9 லட்சத்து 50 ஆயிரம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. (இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 69 லட்ச ரூபாய்).

துணிவு படத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ‘வாரிசு’ படம் வசூலில் முந்தி வருகிறது.

இந்நிலையில் வாரிசு படக்குழு நன்றி தெரிவிப்பதற்காக இன்று 12 மணியளவில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் படத்தின் வசூல் கணக்கு விபரங்கள் வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராமானுஜம்

வேலைவாய்ப்பு : காசநோய் கட்டுப்பாட்டு மையத்தில் பணி!

அவசரமாக ஸ்கூட்டியில் புறப்பட்ட எடப்பாடி : ஏன்?

+1
2
+1
5
+1
1
+1
4
+1
5
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *