”பவர் சீட்ல இருக்காது சார்”: வாரிசு டிரெய்லர்!
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 4) வெளியானது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
பொங்கல் கொண்டாட்டமாகத் திரைக்கு வரவுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு (soul of varisu) என மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விஜய் பட இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் டிரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வாரிசு படம் குடும்பப்படம் என்று அறிவிக்கப்பட்டபடியே டிரெய்லர் தொடங்கும் போதே, “வீடு என்றது வெறும் கல்லும் மண்ணும் மட்டும் தான், குடும்பம் அப்படியா?” என்ற வசனத்தோடு ஒரு பெரிய வீடு திரையில் தெரிகிறது.
வாரிசு படத்தில் விஜய் குடும்பத்தின் கடைசி மகனாக நடித்துள்ளார். ”அம்மா எல்லா இடமும் நம்ம இடம் தான், நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் கண்ணு தொறந்தே தான் இருக்கணும், பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உட்காருரான் இல்ல அவன் கிட்டத்தான் இருக்கும்” போன்ற வசனங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்தில் செண்டிமெண்ட், ஆக்ஷன், காதல், நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குடும்பக் கதைகளில் எப்போதும் போல, ஒரு குடும்பம் ஒன்றாக இருந்து இடையில் பிரச்சனைகளால் பிரிந்து செல்வது. பின்னர் அந்த பிரச்சனையை சரி செய்வது போன்ற காட்சிகளே வாரிசு டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.
இறுதியாக “குடும்பம்னா குறை இருக்கும் தான், ஆனா நமக்குனு இருக்கறது ஒரே ஒரு குடும்பம் மட்டும் தான்” என்ற விஜய் வசனத்துடன் டிரெய்லர் முடிவடைகிறது.
வாரிசு டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
மோனிஷா
உயிர்களை பலி வாங்கும் மதுரவாயல் சாலை: அரசு கவனிக்குமா?
எட்டு வழிச்சாலையை எதிர்க்கவில்லை : டெல்லியில் மீண்டும் எ.வ.வேலு