விஜயின் ’வாரசுடு’ நேற்று வெளியான நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழ் பதிப்பு ஜனவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வாரசுடு நேற்று (ஜன. 14) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷியாம், சம்யுக்தா, சங்கீதா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, யோகிபாபு, சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
தமிழில் வெளியான மூன்று நாட்களில் வாரிசு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர்.
அதேவேளையில் வாரிசு முழுமையான தமிழ் படமாக இல்லை. தெலுங்கு வாடை தூக்கலாக உள்ளது என சினிமா விமர்சகர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் நேற்று வெளியான வாரசுடு திரைப்படத்தினை தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், வாரசுடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்கிற அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ஆந்திரா-தெலங்கானா மாநிலங்களில் சுமார் 5.25 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு உரிமை ரூ.17 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு என்று தெலுங்கில் பெரிய அளவில் ரசிகர் வட்டாரம் இல்லை. தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வந்த விஜய் படங்கள் ஆந்திராவில் மொழி மாற்றம் செய்யப்படுவது இல்லை. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, அர்ஜூன் படங்களுக்கு இருப்பது போன்று வணிக மதிப்பும், வசூலும் விஜய்க்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் வாரசுடு திரைப்படம் அந்த நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் தில்ராஜ், மற்றும் இயக்குநர் வம்சி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் முக்கியமானவர்கள். இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரசுடு படம் 375 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி உள்ளது. இத்துடன் படத்தின் கதையும் குடும்பங்களை கவர்துள்ள நிலையில், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இராமானுஜம்