‘பிக் பாஸ் – 8’: முதல் நாளே இப்படியா? – விஜய் சேதுபதி செய்த ‘தக் லைஃப்’ மொமண்ட்ஸ்!

Published On:

| By Selvam

வந்து விட்டது ‘பிக் பாஸ் – 8’. “எட்டு எட்டா மனுஷன் வாழ்வ பிரிச்சிக்கோ…” என ’பாட்ஷா’ ரஜினி சொல்வது போல் பிக் பாஸ் சீசன்களை பிரித்துக் கொண்டால், இது தமிழ் பிக் பாஸின் முதல் எட்டு.

இந்த முதல் எட்டில் நிறைய பரிணாம மாற்றங்கள் நடந்தேறியுள்ளது. குறிப்பாக, இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நடிகர் விஜய் சேதுபதி.

கமல் ஹாசன் இடத்தில் எப்படி விஜய் சேதுபதி பொருந்துவார்? எப்படி போட்டியாளர்களை சமாளிப்பார்? இவரது தொகுப்பு முறை சுவாரஸ்யமாக இருக்குமா? எனப் பல்வேறு கேள்விகள் இந்த அறிவிப்பு தொட்டே பிக் பாஸ் ரசிகர்கள் இடத்தில் இருந்து வந்தது. ஆனால், தனக்கே உரிர்த்தான பாணியில் மிக எதார்த்தமாக முதல் எபிசோடிலேயே தொகுத்து வழங்கினார் விஜய் சேதுபதி என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக தன் மனதுக்கு பட்டதை அப்படியே பேசும் அவரது ஸ்டைல் பிக் பாஸுக்கு நிச்சயம் தேவையான ஒன்று. ஆனால், அதுவே அவருக்கு ஹேட்டர்ஸையும் உருவாக்கலாம். அது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது ஸ்டைல் நிச்சயம் தமிழ் பிக் பாஸுக்கு புதிய பரிணாம மாற்றத்தைத் தருகிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் பேசும் அந்த செயற்கையான அறிமுக பேச்சை அவர் வைத்து செஞ்ச விதம் மாஸ். இதே போன்று பல செயற்கையான கேரக்டர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து செய்தால் ’மக்கள் செல்வன்’ நிச்சயம் பிக் பாஸ் வீட்டின் செல்வன் ஆகலாம். முதல் எபிசோடிலேயே விஜய் சேதுபதி செய்த ‘தக் லைஃப்’ மொமண்ட்களைப் பற்றி எழுதத் தோன்றியது.

பால் – 1 ; சிக்சர் – 1 :

பிக் பாஸ் தொகுப்பாளராக அறிமுகமாகுற விஜய் சேதுபதி, முதல் போட்டியாளர அறிமுகப்படுத்தும் போதே தன்னோட ஸ்டைலை படு பலமாக பதிவு செய்ததைப் பார்க்க முடிந்தது.

தயாரிப்பாளர் ரவீந்திரன் தான் பிக் பாஸ் சீசன் 8ல் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர். ‘ஃபாட் மேன்’ என அறியப்படும் இவரை பிக் பாஸ் விமர்சகராக பல பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரிட்சயம். இம்முறை தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிக் பாஸ் விமர்சகர் போட்டியாளராக களமிறங்குகிறார்.

ரவீந்தரிடம் ‘ நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்துட்டா…? வெளிய யாரு விமர்சனம் பண்ணுவா…?’ என சேதுபதி கேட்ட கேள்விக்கு ‘எங்கெங்கோ சுற்றி சற்று ஆண்டவர் மோடில் பதிலளித்த ரவீந்தரை, ‘நான் கேட்டது சிம்பிள் கேள்வி, அதுக்கு ஏன் இவ்வளவு சுத்றீங்க’ என முதல் பந்தை பவுண்ட்ரிக்கு தட்டும் சேவாக்கை போல் அடித்து தன் தக் லைஃப் கணக்கைத் தொடங்கினார் விஜய் சேதுபதி.

’விமர்சகரா இருந்தா நல்ல காசு வருமா…?’ எனக் கேட்டது, ‘இவர் என்கிட்டயே ரொம்ப உருட்டுறாருல..?’ எனக் கேட்டது வரை படு தீர்மானத்துடன் தான் விஜய் சேதுபதி இந்த தொகுப்பாளர் வேலையை அணுகப் போகிறார் என்கிற நம்பிக்கை நமக்கு வந்தது. அதை விட முக்கியமான விஷயம், இந்த எபிசோடில் எந்த ஒரு தருணத்திலும் மக்களைப் பார்த்து பேசுவது, அவர்களது கைதட்டல்களுக்கு தீனி போட பேசுவது போன்ற எந்த ஒரு போலித்தனமும் சற்றும் இல்லாது விஜய்சேதுபதி பேசியது மிகச் சிறப்பு.

”இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுப் பா….!”;

இந்த ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமான விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்து நுழைந்த போட்டியாளர். சற்று பதற்றமாக இருந்த அவரை சேதுபதி கூல் செய்து பேச வைத்ததை பார்க்க முடிந்தது.

படத்தில் மட்டும் அவருக்கு அப்பாவாக நடிக்காமல், நிஜத்திலும் அப்பா என்கிற உணர்வோடு விஜய் சேதுபதி இருக்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது.

ஆனால், ‘ நீ என்ன அப்பான்னு கூப்டலாம், சார்ன்னு கூப்டலாம். ஆனா ஒரு வாரம் முழுக்க கேவலமா விளையாண்டுட்டு அப்புறம் வார கடைசியில அப்பான்னு என்கிட்ட வந்து நிக்காத’ என விஜய் சேதுபதி அவரை எச்சரித்தது, ’இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா’ என எண்ணத் தோன்றியது. அதுமட்டுமின்றி, ‘இதுல நான் ஏதாவது டென்சனாகி பேசிட்டேன்னா கோபப்படாத’ எனப் பேசியபோது அவர் கண்களில் இருந்த அன்பையும் நம்மால் பார்க்க முடிந்தது.

’இதுல என்ன பெருமை..?’ :

இந்த ஒட்டுமொத்த எபிசோடிலேயே நிகழ்ந்த உச்சக்கட்ட தக் லைஃப் மொமெண்ட் நடிகர் ரஞ்சித்தை அறிமுகப்படுத்தும் போது தான் நிகழ்ந்தது. தற்போது அதுவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியும் வருகிறது.

‘நீங்க ஒரு படம் டைரக்ட் பண்ணீங்களே..?’ என சேதுபதி கேட்க, ‘ கவுண்டம்பாளையமா’ எனக் கேட்டார் இரஞ்சித். அதற்கு , ‘இல்ல அதுக்கு முன்னாடி பீஷ்மர்ன்னு ஒரு படம் பண்ணீங்களே..? அது நல்ல படம் ‘ என சரியாக சிதறிய தேங்காய் போல் உடைத்துப் பேசியது சேதுபதி செய்த உச்சக்கட்ட தக் லைஃப் மொமெண்ட்.

‘உங்கள ரொம்ப நம்பிக்கையான ஆளா, அண்ணனா நாங்க பார்த்திருக்கோம். ஆனா கவுண்டம்பாளையம் படத்தை நீங்க டைரக்ட் பண்ணப்போ அது அப்படியே மாறுன ஒரு ஆளா பார்க்க முடிஞ்சிது. ஏன் ?” எனக் சேதுபதி கேட்டது அவரது சமூக அக்கறையையும், போட்டியாளர்கள் பற்றி அவருக்கு இருக்கும் தீர்க்கமான புரிதலையும் காட்டியது.

பத்தாத குறைக்கு அவர் கூட வந்த நண்பர் சேதுபதியிடம், ‘எங்க ஊர்க்காரங்க (கோயம்புத்தூர்) எல்லாரையும் சாப்டீங்களான்னு தான் முதல கேட்போம்’ என சொல்ல, ‘எங்க ஊர்ல மட்டும் என்ன வெளிய போங்கன்னா சொல்லுவோம்?. எல்லா ஊர்க்காரங்களும் அப்படித் தான். இதுல என்ன ஊர் பெருமை வேண்டிக் கிடக்குது’ என அடித்த கவுண்ட்டர் நச்.

ஆம்பளைன்னா என்ன இப்போ? :

இந்த பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கும் விஜய்சேதுபதி தொடர்ந்து ஒரு வேலையை மிக அழுத்தமாக செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.

அது, ரொமாண்டிசைசிங்(romanticize) ஐ தவிர்த்தல். பெரும்பாலும், திரைத்துறையினரிடமும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி அதிகமாகக் காணப்படும் ஒரு போக்கு அதீத ரொமாண்டிசைசிங். அதாவது, ‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் தெரியுமா..?’ ‘நான் சந்தித்த அவமானங்கள்’, ‘உங்கள மாதிரி ஒரு லெஜெண்ட பார்க்குறதே பெருமை’ போன்ற சொல்லாடல்களை தொலைக்காட்சிகளில் நிறைய கேட்டுப் பழகியிருப்போம்.

ஆனால், எதார்த்தத்தில் அனைத்து வேலைகளிலும் அவ்வளவு கஷ்டங்களும், சிரமங்களும் உள்ளது. சொல்லப்போனால் சினிமா, மீடியா துறைகளை விட பிற துறைகளில் நிறையவே பிரச்சனைகளும், சிரமங்களும் உள்ளது.

ஆனால், அதிக மக்கள் கவனத்தை ஈர்க்கும் துறைகளாக இருப்பதால் மட்டுமே இந்தத் துறைகளின் கஷ்டங்களை, ஆளுமைகளை அதீதமாகப் போற்றிப் பாடுவது மாபெரும் கும்பல் நிலை போக்கு. மேலும், பலர் பிம்பச் சிறைக்குள் சிந்தை இன்றி கிடக்கவும் அதுவே காரணமாகிறது.

இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளரான சீரியல் நடிகர் அர்ணவை அறிமுகப்படுத்தும் போது ‘நீங்க சந்தித்த மறக்க முடியாத அவமானம் எது?’ என ஒரு வழக்கமான கேள்வியை சேதுபதியிடம் அவர் கேட்க, ’இந்த மாதிரியான கேள்வியே ரொம்ப கிளிசே என நினைக்கிறேன். நான் கஷ்டப்பட்டது எல்லாம் எனக்காகத் தான். அது எல்லாமே என் அனுபவம் தான். ஒவ்வொரு அனுபவமும் எனக்கு நிறையா கற்றுத்தந்துருக்கு. அதைப் பத்தி பெருசா பேச ஒன்னும் இல்லன்னு நினைக்கிறேன்’ என மிக ஆழமான புரிதலுடன் பேசினார். அதைத் தொடர்ந்து, ‘ யாரா இருந்தாலும் நான் மோதிப் பார்த்திருவேன். ஆம்பள சார் நானு’ என அர்ணவ் பேச ‘தைரியத்துல என்ன ஆம்பள, பொம்பள வித்தியாசம் எல்லாம்?’ என சரியாக அடித்த கவுண்ட்டர் பளார்.

இதில் குறிப்பிட்டதைத் தாண்டி பல இடங்களில் குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளராக வந்த மாடல் சவுந்தர்யாவின் குரல் குறித்து அவருக்கே இருந்த தாழ்வு மனப்பான்மையை மாற வைத்த விஜய்சேதுபதியின் பேச்சு மிகுந்த பாராட்டுகளுக்கு உரியது. அரசியல் தெளிவுடன் பேசினார் விஜய்சேதுபதி. நிச்சயம் பிக் பாஸின் இந்த சீசன் தமிழ் பிக் பாஸின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கும் என்பது முதல் எபிசோடிலேயே தெரிய வந்தது.

மேலும், இம்முறை ஆண்கள் vs பெண்கள் என்கிற தீமில் பிக் பாஸ் நடக்கவுள்ளது கொஞ்சம் பழைய ஃபார்மெட் என்றாலும் மிக சுவாரஸ்யமான ஒரு உலகளாவிய கண்டெண்ட். அதில் எந்த அளவிற்கு அரசியல் தெளிவு , சுவாரஸ்யம், முக்கியமாக எதார்த்தம் இருக்கப் போகிறது என்பது இனி வரும் எபிசோட்களிலேயே நமக்கு தெரிய வரும்.

மேலும், பிக் பாஸ் என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, அதில் உள்ள மனிதர்களே ஒரு வகையில் நம் சமுதாயத்தின் கண்ணாடிகளின் சிறு துகள்கள். அதை அவ்வாறே அணுகுவது மிக ஆரோக்கியமான ஒன்றாக இருக்கக் கூடும், மேலும், பல சுவாரஸ்ய பிக் பாஸ் நிகழ்வுகள், நகர்வுகள் பற்றி ஆழமாக புரிந்துகொள்ளவும் எழுதவும் ஆர்வமாக உள்ளோம்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு!

பிக் பாஸ் வீட்டில் கழுதை… போட்டியாளர்களுடன் தங்க ஏற்பாடு!

’மகாராஜா ‘ நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share