விக்ரம் – ஜோதிகாவின் காஸ்ட்லி மிஸ்… தளபதி விஜய்க்கு அடிச்ச ஜாக்பாட்… சொல்லி அடிச்ச கில்லிக்கு 2௦ வயசாச்சு..!
ஒரு திரைப்படம் என்பது அதில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; திரையில் முதல்முறை ஓடத் தொடங்கியபிறகு அது எல்லோருக்குமானதாக மாறும். அதனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தன்னைப் பிணைத்துக் கொள்ளும்போது, அது மாபெரும் வெற்றியைப் பெறும்.
‘சினிமாவின் மாயாஜாலம் அதுதான்’ என்று இன்றுவரை பல ஜாம்பவான்கள் சொல்லி வருவதற்கான காரணமும் அதுவே. அப்படியொரு மாயாஜாலத்தை நிகழ்த்திய திரைப்படங்களில் ஒன்று ‘கில்லி’. விஜய்யின் திரை வரலாற்றில் மிக முக்கியமான படம் அது.
விஜய்யின் திரைப்பயணம்
’நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமான நடிகர் விஜய், ‘ரசிகன்’ படம் வழியாகப் பெரிய வெற்றியைச் சுவைத்தார். அதன்பிறகு வெளியான படங்களில் பெரிய மைல்கல்லாக அமைந்தது விக்ரமனின் ‘பூவே உனக்காக’. விஜய்யின் நடிப்பு பாணியை லேசாக மாற்றி, அவரது திரைப் பயணத்தைத் திசை திருப்பிய படம் அது.
1997-ல் வெளியான பாசிலின் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம், விஜய்யின் தோற்றத்தை முழுமையாக மாற்றிக் காட்டியது. கூடவே, ஒரு காதல் நாயகனாகவும் அவரை மடைமாற்றியது. 2000-ல் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் ‘குஷி’யும், 2002-ல் வந்த வெங்கடேஷின் ‘பகவதி’யும், கமர்ஷியல் வெற்றிக்கான அளவுகோல்களைத் தாண்டி நின்றன.
மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு?
அதன்பிறகு ‘திருமலை’ வெற்றியால் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த விஜய், இயக்குனர் தரணியோடு சேர்ந்து சொல்லியடித்த படமே ‘கில்லி’. இந்தப் படம் வெளியாவதற்குச் சரியாக 20 நாட்கள் முன்னதாக அழகம்பெருமாளின் ‘உதயா’ ரிலீஸ் ஆனது. 1998-ல் தொடங்கிய அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறைவுறாமல் இருந்தது.
2003 ஆம் ஆண்டு சிம்ரன் திருமணத்திற்குப் பிறகு, அவசர அவசரமாக மீதமிருந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் படம் ரசிகர்களைக் கவரவில்லை.
அந்த நிலையில், மீண்டும் விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்தை ரசிகர்கள் காணச் செய்தது ‘கில்லி’.
வெறுமனே ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் காமெடி, சென்டிமெண்ட், ரொமான்ஸ் என்று பல அம்சங்கள் சரியான விகிதத்தில் ஒன்றிணைந்திருந்த காரணத்தால் அது ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றியைப் பெற்றது.
கில்லியின் உள்ளடக்கம்
குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா நடித்த ‘ஒக்கடு’வின் ரீமேக் என்றபோதும், ‘கில்லி’ அப்படியே தமிழில் படமாக்கப்படவில்லை. முக்கியமாக, விஜய் ஏற்ற ‘சரவணவேலு’ என்ற நாயக பாத்திரத்தின் குணாதிசயங்கள் தமிழில் முழுமையாக மாற்றப்பட்டிருந்தது.
நண்பர்களிடம் கிண்டல், தங்கையிடம் சீண்டல், காதலிக்கும் பெண்ணிடம் கண்ணியம் என்று சக மனிதர்களை அப்பாத்திரம் எதிர்கொள்ளும் விதத்தை வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் இயக்குனர் தரணி.
ஒருவேளை ‘ஒக்கடு’ அளவுக்கு ‘கில்லி’ வெற்றி பெறாமல் போயிருந்தால், தரணி செய்த மாற்றங்களே அவரைப் பலரும் கேள்விகளால் துளைத்தெடுக்கக் காரணமாகியிருக்கும். அதனைக் குறிப்பிட்டு, ஒருமுறை இயக்குனர் கே.பாக்யராஜ் தரணியைப் பாராட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு ‘அபாயகரமான’ மாற்றம் அது.
ஆனால், ரசிகர்கள் அந்தக் காட்சிகளை வெகுவாக ரசித்தனர். குறிப்பாக, தந்தையையும் தங்கையையும் ஏமாற்றி பூரிகளை எடுத்துவரும் வேலு, தனலட்சுமிக்கு விக்கல் எடுத்ததும் தண்ணீர் எடுத்துவர மீண்டும் ஹாலுக்கு வரும் காட்சி வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. கூடவே, நாயகியை அக்குடும்பத்தினர் பார்த்துவிடுவார்களோ என்றும் பதைபதைக்க வைத்தது.
மின்னம்பலம் சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?
சிரிப்புடன் பரபரப்பை ஊட்டிய அந்தக் காட்சி போலவே, ‘கில்லி’யில் பெரும்பாலான காட்சிகள் இருந்தன. அதனாலேயே, சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ரசிகர்களை இப்படம் இருக்கையோடு கட்டிப் போட்டது.
நாயகன், நாயகி குடும்பத்தினர் குறித்த சித்திரங்கள் நம் மனதில் பதியும் வண்ணம் இரண்டொரு காட்சிகளில் அவர்களது இயல்பு, நடக்கும் நிகழ்வு என அனைத்தையும் விளக்கும்விதமாகக் காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் தரணி.
உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் சகிதம் ஒவ்வொரு பிரேமையும் ’இன்ச் பை இன்ச்’ விவாதிக்கும் அவரது செயல்பாடும் அதற்குப் பக்கபலமாக இருந்தது. அவ்வளவு ஏன், ’கில்லி’யில் வில்லனாக வந்த பிரகாஷ்ராஜின் தந்தையாக தணிகல பரணியும், தாயாக டி.கே.கலாவும் நடித்திருந்தனர்.
நாயகியின் குடும்பம் கண்கலங்கி நிற்கும்போது, கலா பாத்திரம் வந்து பேசும் காட்சியே அதன் கரிசனம் எப்படிப்பட்டது என்பதை நமக்குப் புரியவைக்கும். பல படங்களில், அதனை வசனமாக்கி நம்மைக் குதறி எடுத்திருப்பார்கள். அதுவே ‘கில்லி’யின் உள்ளடக்கத்தில் நாம் உணரும் வித்தியாசம்.
தெறி வெற்றி
‘எல்லாமே அமையறதுதான்’ என்ற வார்த்தையைத் திரையுலகத்தில் உதிர்க்காதவர்கள் மிகக்குறைவு. நாள், இடம், மனிதர்கள் என்று அனைத்தும் மாற்றத்திற்குள்ளாகிற ஒரு திரைப்பட உருவாக்கத்தில் இயக்குனரும் தயாரிப்பாளரும் இதர கலைஞர்களும் திட்டமிடுவதற்கு ஏற்ற பலன் திரையில் காணக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
சில நேரங்களில், அந்த எதிர்பார்ப்பை மீறிய ஒன்று நமக்குக் கிடைக்கும். அதுவே, ஒரு சினிமா செய்யும் மாயாஜாலம். ‘கில்லி’யைப் பொறுத்தவரை, அந்த படத்தின் நாயக பாத்திரத்திற்கான பரிசீலனையில் விக்ரம், அஜித் போன்ற நட்சத்திரங்கள் இருந்திருக்கின்றனர் என்பதே ஆச்சர்யம் தரும் விஷயம் தான்.
மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?
அதே போல, த்ரிஷா பாத்திரத்தில் ஜோதிகாவும் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் பிரச்சினைகளால் அது கைகூடவில்லை. என்றாலும் அது போன்ற தகவல்கள் மறந்துபோகும் அளவுக்கு, ‘எவர்க்ரீன் ஜோடி’யாக விஜய்யும், த்ரிஷாவும் படத்தில் தோன்றியிருப்பார்கள்.
‘ஷா லாலா’’ பாடலில் வரும் த்ரிஷாவையும், ’கொக்கரக்கோ’ பாடலில் வரும் விஜய்யையும் பிரதியெடுத்து ‘இன்ஸ்டாரீல்ஸில்’ வெளியிட அடுத்த தலைமுறையும் ஆர்வமாக இருக்கிறது. அதுவே, இருவரையும் இன்றும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
விஜய்யின் நண்பர்களாக வரும் நாகேந்திரபிரசாத், தாமு, சாப்ளின் பாலுவோடு விமல் போன்றவர்களையும் காட்டியிருப்பார் இயக்குனர் தரணி. ‘கூத்துப்பட்டறை’ போன்ற நாடகக்குழுக்களில் பணியாற்றிய நடிகர்களைப் பயன்படுத்துவதில் அவர் காட்டிய ஆர்வத்தை இப்படத்தில் உணர முடியும்.
அது மட்டுமல்லாமல் விக்ரமின் தந்தை வினோத், டான்ஸ்ட் மாஸ்டர் சுஜாதாவை த்ரிஷாவின் பெற்றோராக நடிக்க வைத்திருப்பார். போலவே, கான்ஸ்டபிளாக வரும் பாண்டுவைக் கொண்டு நம்மைச் சிரிக்க வைத்திருப்பார். அந்த ‘காஸ்ட்டிங்’ தான் ‘கில்லி’யின் பெரும்பலம்.
2௦ ஆண்டுகள்
கோபிநாத்தின் ஒளிப்பதிவு, வித்யாசாகரின் பரபரப்பூட்டும் இசை, வி.டி.விஜயனின் செறிவூட்டும் படத்தொகுப்பு என்று பலரது உழைப்பை ஒன்று சேர்த்தது ‘கில்லி’யின் உள்ளடக்கம். தியேட்டருக்குள் அமர்ந்திருக்கும்போது ‘லாஜிக்’ சேர்ந்து எந்தக் கேள்விகளும் எழாமல் பார்த்துக்கொண்டது அவர்களது பங்களிப்பு.
இந்தப் படம் வெளியாகி நாளையோடு (ஏப்ரல் 17) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்கான காரணங்களைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் நம்மோடு பகிர நேரலாம்.
அது மட்டுமல்லாமல், இந்த வாரம் மீண்டும் ‘கில்லி’ திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைக் காண ரசிகர்கள் வேட்கையுடன் இருப்பது, கனகச்சிதமான ஒரு கமர்ஷியல் படமொன்றை ரசிகர்கள் எந்த அளவுக்குக் கொண்டாடுவார்கள் என்பதற்கான உதாரணம்.
திட்டமிடல்களால் நிச்சயமாக அப்படியொரு வெற்றியை உருவாக்க முடியாது. அது தானாக அமைய வேண்டும். அப்படி அமைந்த ஒரு படம் ‘கில்லி’. ஒரு திரைப்படத்தைக் காணும்போது ரசிகர்கள் தன்னிலை மறக்க வேண்டும்.
திரையில் இயக்குனர் காட்டும் உலகத்திற்குள் புக வேண்டும். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்று சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மீறி அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும் திரைப்படங்கள் அனைவராலும் கொண்டாடப்படும்.
அந்தச் சமநிலையை உருவாக்கும் ‘கில்லி’ போன்ற வெற்றிப்படங்களை எந்தக் காலத்திலும் கொண்டாடத்தானே வேண்டும். இப்படியொரு திரையனுபவத்தை வழங்கியதற்காக, மீண்டும் நாம் பெறப்போவதற்காகத் தரணி & குழுவினருக்குப் பாராட்டுகளுடன் நன்றிகளையும் சேர்த்துச் சொல்வதுதான் சரியாக இருக்கும்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“எங்களுக்கு இத்தனை வயது தான் வித்தியாசம்” – உண்மையை உடைத்த இந்திரஜா சங்கர்..!
மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க சதி: மோடியை சாடிய ஸ்டாலின்
மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?
நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!