விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். அந்த 2 கதாபாத்திரங்களுக்கு ஜோடிகளாக சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், ஜெய்ராம், மோகன், பிரேம்ஜி, யோகி பாபு, லைலா, வைபவ், யுகேந்திரன் என மிகப்பெரிய திரை பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
அதுமட்டுமின்றி, விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் கேமியோக்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன.
மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியில், தோனி களமிறங்கி சிக்ஸ்களை பறக்கவிடும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தன.
இப்படி படத்தில் பல திருப்பங்கள் நிறைந்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. மறுபுறத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசை விமர்சனத்தை பெற்றிருந்தது. இருந்தபோதும், இந்த படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், இப்படம் முதல் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘தி கோட்’ படம் முதல் 4 நாட்களில் ரூ.288 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தின் வசூலை இரண்டே நாட்களில் கடந்த ‘தி கோட்’, 2024-இல் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ‘ராயன்’ திரைப்படம் உலக அளவில் ரூ.154 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.137 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழில் மட்டும் ரூ.121.05 கோடி கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்தி மற்றும் தெலுங்கு காட்சிகள் மூலம், முறையே ரூ.8.3 கோடி மற்றும் ரூ.7.85 கோடி வசூலை பெற்றுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, வட அமெரிக்காவில் அதிகப்படியாக ரூ.25 கோடி வசூலை ‘தி கோட்’ படம் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து, பிரிட்டனில் ரூ.7.5 கோடி வசூலையும், ஆஸ்திரேலியாவில் ரூ.3 கோடி வசூலையும் இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் வசூலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிலாது நபி… செப்டம்பர் 17-ஆம் தேதி அரசு விடுமுறை!
ஓடிடி நிறுவனங்களுக்கு செக் வைத்த அமீர்கான்