சினிமாவில் கதாநாயகன் வலிமைமிக்கவராக பார்வையாளர்களால் ரசிக்கப்படுவதற்கு வில்லன் வசீகரமும், வலிமைமிக்க தோற்றமுடையவராக இருக்க வேண்டும்.
பி.எஸ். வீரப்பா, எம்.என்.நம்பியார் இல்லாத எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது இல்லை. ரகுவரன் ரஜினிகாந்துக்கு இணையான வில்லனாகவும்,விஜயகாந்த், விஜய்க்கு இணையான வில்லன் நடிகராக பிரகாஷ்ராஜ் இருந்தார்.
சமகாலத்தில் ரஜினிகாந்த், விஜய்க்கு இணையான வில்லனாக பார்வையாளர்களால் விஜய்சேதுபதி ரசிக்கப்படுகிறார். அந்த வரிசையில் ஜவான் படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்
ஜவான் படம் சம்பந்தமான புதிய போஸ்டரில் ‘மரணத்தின் வியாபாரி’ என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி இடம் பெற்றுள்ளார். இதனை ட்விட்டரில் ஷேர் செய்து, ‘எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஷாருக்கான்.
ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான ‘ஜவான்” படத்தில் நடித்துள்ளவர்களின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது.
இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர சித்தரிப்பை காட்டுகிறது.
ஒவ்வொரு போஸ்டர் வெளியீட்டிலும் ‘ஜவான்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் வழுக்கை தோற்றம் முதல் நயன்தாராவின் தீவிரமான தோற்றம் வரை… ஒவ்வொரு போஸ்டரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.
கௌரவ் ஷர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இராமானுஜம்