Maharaja Movie Review

விமர்சனம் : மகாராஜா!

   உதயசங்கரன் பாடகலிங்கம்

விஜய்சேதுபதியின் 50வது படம் கொண்டாடத்தக்கதா?

விஜய் சேதுபதி நடித்த படங்கள் என்றால் வித்தியாசமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் உண்டு. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, இமைக்கா நொடிகள், 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், விடுதலை பாகம் 1, மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பல படங்களில் அவரது தனித்துவம் தெரியும். அவர் வில்லனாகத் தோன்றிய மாஸ்டர், விக்ரம், ஜவான் படங்களும் கூட அதில் விதிவிலக்கல்ல.

ஆனாலும், சமீபகாலத்தில் அவர் நாயகனாக நடித்த படங்கள் பெருவெற்றியை ஈட்டாதது பெருங்குறையாக இருந்து வந்தது. இப்படியொரு சூழலில் விஜய் சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு நாயகனாக, ரசிகர்கள் கொண்டாடத்தக்க ஒரு படைப்பில் அவர் இடம்பிடித்திருக்கிறாரா?

மகாராஜாவின் கதை!

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்று விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி பேசுகிற வசனம் ரொம்பவே பிரபலம். கிட்டத்தட்ட அதே தொனியில், ‘மகாராஜா’வில் ‘என்னோட லட்சுமிய காணோம் சார்’ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறது அவர் ஏற்ற மகாராஜா பாத்திரம். அதற்குக் காவல் நிலையத்தில் இருப்பவர்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது? அவர் அப்படியொரு புகாரைத் தெரிவிக்கக் காரணம் என்ன? யார் அந்த லட்சுமி? இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணும் விதமாக முதல் பாதி நகர்ந்தது.

பின்பாதியோ, அந்த மகாராஜா ஏன் காவல் நிலையத்தை விட்டு அகலாமல் இருக்கிறார் என்ற கேள்விக்குப் பதில் சொல்வதாக அமைகிறது. முகமூடி அணிந்த மூன்று பேர் தனது வீட்டுக்குக் கொள்ளையடிக்க வந்ததாக அவர் சொல்கிறார்.

ஒரு வரியில் சொல்ல முடிகிற இந்தக் கதையின் ஊடே, மகாராஜாவுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. அவரது பெயர் ஜோதி (சஜனா நமிதாஸ்). பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஓட்டப்பந்தய வீராங்கனையான அவர், தனது விளையாட்டு ஆசிரியர் ஆசிஃபா (மம்தா மோகன்தாஸ்), சக வீராங்கனைகளுடன் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார். அது ஒரு கிளைக்கதையாக விரிகிறது.

இன்னொரு புறம், செல்வம் (அனுராக் காஷ்யப்) எனும் நபர் மின்சாதனக் கடையொன்றை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில், தனது நண்பருடன் (வினோத் சாகர்) இணைந்து சில பணக்கார வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையடிக்கிறார்.

போலவே, கார் ரிப்பேர் கடையொன்றில் பணியாற்றும் தனம் (மணிகண்டன்) ஒரு பணக்கார அரசியல்வாதியின் காரை டெலிவரி தருவதாகச் சொல்லிவிட்டு, அடுத்த நாள் காலையில் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அதனால், அந்த நபருக்கும் தனத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

இப்படி வெவ்வேறு புள்ளிகளில் இருந்து இன்னொன்றை நோக்கி நகரும் காட்சிகள் அனைத்தும், மகாராஜாவின் ‘லட்சுமிய காணோம்’ என்ற புகாரில் ஒன்றிணைகிறது. யார் அந்த லட்சுமி என்று பார்த்தால், தகரத்திலான ஒரு குப்பைத்தொட்டியின் புகைப்படத்தைக் காட்டுகிறார் மகாராஜா.

‘இதற்குத்தானா இத்தனை அக்கப்போர்’ என்று நாம் நினைக்கும் வேளையில், தனம் காணாமல் போனதாக அவர் வேலை செய்யும் கடையின் மேலாளர் போலீசில் புகார் செய்ய வருகிறார். அதன்பிறகே, தனத்தைக் கொன்றது மகாராஜா என்பது நமக்குத் தெரிய வருகிறது.

உண்மையில் மகாராஜா எப்படிப்பட்ட இயல்புடையவர்? காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்த அவர், ஏன் அங்கேயே தொடர்ந்து இருக்கிறார்? அவரது வீட்டில் என்ன தான் நடந்தது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கலக்கலான நடிப்பு!

விக், ஒட்டப்பட்ட தாடி, காதில் பேண்ட் எய்டு, வித்தியாசமான நடை என்று வேறுபட்ட தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார் விஜய் சேதுபதி. தொடக்கக் காட்சியிலும், பின்பாதியிலும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

தன் மகளுக்காகப் பிடிவாதத்தின் உச்சத்தைத் தொடும் ஒரு தந்தையாக இதில் தோன்றியிருக்கிறார். அந்த பாத்திரப் படைப்பு கனகச்சிதமாகத் திரையில் வெளிப்பட்டிருப்பதே படத்தின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்திவிடுகிறது.

இதில் நாயகி என்று தனியாக எவரையும் குறிப்பிட முடியவில்லை. அதேநேரத்தில் குறைவான காட்சிகளில் தலைகாட்டினாலும் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்யபாரதி, சஜனா நமிதாஸ் ஆகியோர் வலுவான பாத்திரப் படைப்பினைப் பெற்றுள்ளனர்.

வில்லன்களாக அனுராக் காஷ்யப், வினோத் சாகர், ‘பாய்ஸ்’ மணிகண்டன் ஆகியோர் வருகின்றனர். அவர்களின் இருப்பு நம்மை மிரட்சியடையச் செய்யும் வகையில் இருக்கிறது. இதுபோக ‘சர்ப்ரைஸ்’ ஆக ஒருவர் தனது வில்லன் முகத்தைக் காட்டியிருக்கிறார். அவர் யார் என்பதைப் படம் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

இவர்கள் தவிர்த்து நடராஜன் சுப்பிரமணியம், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாரதிராஜா, பி.எல்.தேனப்பன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மறைந்த பிரதீப் விஜயன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ கல்கி உட்படப் பலர் இதில் தலைகாட்டியுள்ளனர்.  அனைவரும் கலக்கலான நடிப்பைத் தந்திருப்பதே இப்படத்தைச் செறிவானதாக மாற்றியிருக்கிறது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பலம். காவல் நிலையம், நாயகனின் வீடு, பாழடைந்த பேக்டரி, மிகச்சிறிய சலூன் என்று எல்லா இடத்தையும் அக்காட்சியின் தன்மைக்குத் தகுந்தவாறு காட்டுகிறது. அதற்கேற்றவாறு கேமிராவின் நகர்வும் அமைக்கப்பட்டுள்ளது.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, முன்பாதியில் வேறுபட்ட களங்களைக் காட்ட உதவியிருக்கிறது. பின்பாதியில்தான் திரைக்கதை ‘நான் லீனியர்’ அமைப்பில் இருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அந்த இடங்களை நாம் உணருமிடங்களே, அவரது படத்தொகுப்பின் வெற்றிக்குச் சான்று.

பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையானது முன்பாதியில் பரபரப்பையும், பின்பாதியில் நமது மனதில் பதைபதைப்பையும் உண்டுபண்ணுகிறது. வி.செல்வகுமாரின் தயாரிப்பு வடிவமைப்பில் நாயகன் வீடு, காவல் நிலையம் ஆகியன ‘செட்’ என்று தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில், அவை நமது பார்வையில் அந்நியமாகவும் தென்படவில்லை.

படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களுக்குப் போதிய இடம் தரப்பட்டிருப்பதே அதன் தரத்தை உயர்த்திக் காட்ட உதவியிருக்கிறது. ஒரு இயக்குனராக நிதிலன் சாமிநாதன் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ‘குரங்கு பொம்மை’யை விட இதன் பட்ஜெட் அதிகம். அதேநேரத்தில், தான் எடுத்துக்கொண்ட கதைக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.

அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் உக்கிரம் அதிகம். அதனால், இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியும் சரி, இறுதிக் காட்சியும் சரி, ரத்தம் திரையில் தெறிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.
பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களைக் காட்டும் காட்சிகளும் இதிலுண்டு. ஆனால், அதில் வரம்பு மீறாமல் அக்காட்சியின் தன்மையை நமக்குக் கடத்தியிருப்பது இயக்குனர் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

கொண்டாடலாமா?

‘மகாராஜா’வின் கதையமைப்பிலோ, அடிப்படைக் கருவிலோ எந்தச் சிறப்பம்சமும் இல்லை. ஆனால், அதனைத் திரையில் இயக்குனர் சொல்லியிருக்கும் விதமும் காட்சிகளின் உள்ளடக்கமும் நிச்சயம் ‘ப்ரெஷ்’ ஆக ரசிகர்களை உணர வைக்கும். அது மட்டுமல்லாமல், ஒரு ‘உலக சினிமா’ பார்க்கும் உணர்வைத் தரும். அதேநேரத்தில், தமிழ் சினிமாவை மட்டுமே பார்ப்பவர்களை இப்படம் அந்நியமாக உணர வைக்காது. இந்த ஒரு அம்சமே ‘மகாராஜா’வை நாம் கொண்டாடக் காரணமாகிறது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், பார்வையாளர்களான நமக்குச் சில உண்மைகளை உணர்த்தியிருப்பார் இயக்குனர். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அக்கேள்விகளுக்கான பதில்கள்தான் முதலில் நமக்குத் தெரிய வேண்டும் என்பது புலனாகும். அது நிகழாதது, லாஜிக் சார்ந்து இத்திரைக்கதையில் பல கேள்விகளை எழுப்பக் காரணமாகிறது.

அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நோக்கினால், இந்தக் கதையில் இயக்குனர் சிறப்பாகச் சில விஷயங்களைக் கையாண்டிருப்பது தெரிய வரும். இந்தப் படத்தில் ஒரு குப்பைத் தொட்டியை ஒரு பாத்திரமாக உணர வைத்திருக்கிறார் இயக்குனர். அது வருமிடங்களை உற்று நோக்க வைத்திருக்கிறார். இதே பாணியில் அவர் தொடர்ந்து கதை சொல்ல முயன்றால், நிச்சயமாக அவருக்கென்று தமிழ் திரையில் தனியிடம் கிடைக்கும்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் வீடுகளிலும் பல பெண்கள் வாழத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை இந்தப் படத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அப்படியிருந்தும், அவர்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்வது எது என்ற கேள்வியைப் பார்வையாளர்களை நோக்கி எழுப்புகிறார். அதுவே ‘மகாராஜா’வின் சிறப்பம்சம்.

இப்படியொரு படத்தில் தலையை நிறைக்கும் கேசத்துடன் ராம்கியின் புகைப்படம் தாங்கிய சலூன் கடை பலகை காட்டப்படுவதும், ‘ஏ அசைந்தாடும் காற்றுக்கு’ பாடலைப் பாடியவாறு குணாலின் ரசிகராக ஒருவர் அலப்பறை செய்வதும், தமிழ் சினிமாவின் கடந்த காலப் பொக்கிஷங்கள் சிலவற்றை இக்காலத்து தலைமுறைக்கு குறிப்பால் உணர்த்துகிற விஷயங்கள். அது போன்ற சித்தரிப்புகளே ‘மகாராஜா’வை இரண்டாம் முறையும் ரசிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. ’மகாராஜா’வைத் தந்த நித்திலன் சாமிநாதன் மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த அக்கா – தம்பி பாசம் தாங்க முடியல… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: லெமன் டீ கொடுத்த தமிழிசை- ஸ்வீட் கொடுத்த அண்ணாமலை- சந்திப்பில் நடந்தது என்ன?

மேட்டூர் அணை திறப்பு தாமதம்: டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்!

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரம்: தமிழக அரசு விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts