இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மகன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். படத்தின் நான்காம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் உள்ள சிறுமலையில் நடந்தது. இதற்காக, பிரம்மாண்டமான கிராமத்தை கலை இயக்குநர் ஜாக்கி செட் அமைத்து இருந்தார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஐந்தாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கதையில் பழங்குடியின சிறுவனாக நடிக்க இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. சூர்யா இதற்கு முன்பு ‘சிந்துபாத்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படக்குழு இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
விஜய்சேதுபதியின் கையில், ‘விடுதலை’ படத்தை தவிர ‘மும்பைக்கார்’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ஆதிரா