அறுவை சிகிச்சை செய்த தந்தையை சந்தித்த விஜய்

சினிமா

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன், அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ள தன் தந்தையை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ’தளபதி 68’ படத்திற்காக முதன்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் விஜய்.

இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் முதற்கட்ட பணிகளுக்காக கடந்த சில வாரங்களாக அமெரிக்காவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதுகுறித்த விஜய்யின் புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தடுத்து பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்.

வைரலான எஸ்.ஏ.சி ஆடியோ!

இதற்கிடையே இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் தனக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும், மருத்துவர் அறிவுரையின்படி ஸ்கேன் செய்து பிரச்னையை கண்டுபிடித்த நிலையில், தான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இப்போது நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர், ”நமக்கு பிரச்சனை வரும்போது இப்படி ஆயிற்றே என்று யோசிக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பது நல்ல விஷயம். அது நம் மனதை பாசிட்டிவ்வாக வைக்க உதவும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.  இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

பெற்றோருடன் விஜய்

இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தன் தந்தையை, அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் நேற்று சென்று சந்தித்துள்ளார்.

தனது தாயார் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சியுடன் கேசுவலாக அவர் எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய், அவரது பெற்றோரை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த படத்தில் அப்பா செண்டிமெண்ட் பேசும் விஜய் நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக அந்த நேரத்தில் அதிகம் விமர்சனங்கள் வந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அத்தகைய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் பணி!

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *