தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் பட செகண்ட் லுக் இன்று (ஜனவரி 26) வெளியாகி விவாதத்தை எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்து அரசியலில் களம் கண்ட நடிகர் விஜய், தனது 69வது படம் தான் கடைசி படம் என்று அறிவித்தார்.
இதனையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் ஆகியோருடன், தனது அரசியல் பயணங்களுக்கு இடையே தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே அப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது வேனின் மீது ஏறி நின்று விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவத்தை பிரபலிக்கும் விதமாக அதே சாயலில் ஜனநாயகன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாலை 4 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாட்டையை சுழற்றுவது போன்று விஜய் உற்சாகமாக நிற்பதும், அதில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான ’நான் ஆணையிட்டால்’ என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் எம்.ஜி.ஆர். பாணியிலேயே தனது அரசியலை விஜய் முன்னெடுக்க உள்ளதை குறிப்பிடும் விதமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளது.
அதே வேளையில், சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது விஜய் சாட்டையை தூக்கியுள்ளது அவரை விமர்சிக்கும் விதமாக உள்ளதாகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.