அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.
‘ராஜா ராணி’ படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான இயக்குநர் அட்லி அதன் பிறகு ‘தெறி’, ‘பிகில்’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இப்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ அடுத்த வருடம் ஜூன் மாதம் திரையரங்குகளில்வெளியாக இருக்கிறது.
நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மும்பையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. திருமணம், தேனிலவு முடித்து இந்த மாத தொடக்கத்தில் நடிகை நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்தார். இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் வர இருக்கிறார் என முன்பு செய்தி வெளியானது. அது தற்பொழுது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் அட்லி மற்றும் ஷாருக்கான் நட்பிற்காக நடிகர் விஜய் சம்பளம் எதுவும் வாங்காமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். மும்பையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததும் செப்டம்பர் மாதத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் தான் நடிகர் விஜய்க்கும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய்யின் ஒரு நாள் கால்ஷீட் மட்டும் பேசி வாங்கி இருக்கிறார்கள்.
அதேபோல நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து விஜய் சேதுபதி தரப்போ படக்குழு தரப்போ இன்னும் உறுதி செய்யவில்லை. இதனை அடுத்து செப்டம்பர் மாதத்தில் நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆதிரா