விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வாரிசு, லியோ என இரண்டு படங்கள் வெளியானது. அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாத நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல்பார்வை, இரண்டாம் பார்வை மற்றும் மூன்றாம் பார்வை ஆகியன வெளியிடப்பட்டன.
இந்தப் படத்தில் விஜய்க்கு மட்டுமே அதிகபட்ச சம்பளம் கொடுத்து விஜய் கால்ஷீட்டை வாங்கியுள்ளது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்.
இதனால் வணிக ரீதியாக லியோ படத்தை காட்டிலும் அதிக விலைக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை விற்பனை செய்து விட வேண்டும் என்கிற தீவிர முடிவில் உள்ளது. ஆனால் மூன்று முறை படத்தின் போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை விற்க முடியவில்லையாம்.
எந்த வியாபாரமும் முடியவில்லை!
முந்தைய படமான லியோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 80கோடி ரூபாய்க்கும், ஓடிடிஉரிமை 120 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளர் திட்டம். ஆனால் அந்த விலைக்கு வாங்க தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் விருப்பம் காட்ட முன்வராததால் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் உள்ளன.
அதேபோல், லியோ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. அப்படத்திற்கு மூச்சு திணறி உழைத்தும் முழுமையாக வசூலாகவில்லை. இந்நிலையில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை அதைவிட அதிக விலைக்கு எப்படி வாங்குவது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு தயாரிப்பு நிறுவனம் ’லியோ படத்தைவிட விஜய்க்கு அதிகச் சம்பளம் கொடுத்திருக்கிறோம்’ என கூற, ”உங்கள் பெருமைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுங்கள். ஆனால் விஜய் என்கிற நடிகருக்கு என்ன வணிக மதிப்பு இருக்கிறதோ அதை வைத்துதான் விலையை தீர்மானிக்க முடியும். விஜய் படம் வாங்கி விட்டேன் என்ற பெருமைக்காக பெரும் விலை கொடுத்து வாங்கி நட்டப்பட நாங்கள் தயாராக இல்லை. தங்க ஊசி என்பதற்காக கண்களில் குத்தி பார்வையை இழக்க முடியுமா?” என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இப்படிதான் GOAT படத்தின் வியாபாரங்கள் முடிவடையவில்லை என்கிறது விநியோக வட்டாரம்.
அதோடு, இந்தப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வைகள் பார்வையாளர்களை பெரிய அளவில் ஈர்க்கும் வகையில் இல்லை என்பது விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
இப்போது சூழல் மாறுகிறது!
இதுகுறித்து மூத்த விநியோகஸ்தர்கள், வியாபார ஆய்வாளர்களிடம் நாம் பேசியபோது. ”தனது சம்பளத்தை ரஜினிகாந்த்துக்கு இணையாக உயர்த்திக் கொள்வதற்காக ’மாஸ்டர்’ படத்தை தனது உறவினர் மூலம் தயாரித்தார் விஜய். அந்தப் படத்தின் வியாபாரத்தை தனது சாதூர்யத்தால் தயாரிப்பாளர் லலித்குமார் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
அதே போன்று 2023 பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான ’வாரிசு’ படத்தின் வியாபாரத்தை தயாரிப்பாளர் தில் ராஜீவால் நினைத்தபடி நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மாஸ்டர், வாரிசு படத்தை காட்டிலும் அதிக விலைக்கு வியாபாரம் செய்தார்.
ஆனால் இதுவரை விஜயை சுற்றி இருந்த சூழல் இப்போது இல்லை.
விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதுவரை அனைத்து கட்சியினரும் பாகுபாடின்றி விஜய் படங்களை பார்த்து வருகின்றனர். தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்குவதால் இதுவரை அவரது படங்களுக்கு நிரந்தரமாக இருந்து வரும் சினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள்.
அதனால் தமிழ்நாட்டில் அவரது படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் வசூல் முந்தையை படங்களை போன்று இருக்காது. இது சர்வதேச வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு நடிகரின் முந்தைய படங்களின் வசூல் கணக்கை அடிப்படையாக கொண்டு அதை காட்டிலும் குறைவாக சம்பளத்தை நிர்ணயித்து கால்ஷீட் வாங்க வேண்டும். அதை விடுத்து ஒரு நடிகர் நடிக்கும் படத்தை தயாரிப்பதையே வாழ்நாள் கெளரவமாக எண்ணி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கும் வரை இது போன்ற வியாபார சிக்கல்கள் தவிர்க்க முடியாதது” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்பலவாணன்
மோசடி புகார்: MYV3Ads நிறுவனத்திற்கு ஆதரவாக கூட்டம் திரண்டது எப்படி?