‘கோட்’ டிக்கெட் 1000 ரூபாயா? தவிக்கும் விஜய் ரசிகர்கள்!

Published On:

| By Selvam

கோட் படத்தின் டிக்கெட் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுவதாக திரையரங்க வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68-வது படமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) நாளை (செப்டம்பர் 5) வெளியாக உள்ளது. காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஐந்து காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோட் படத்தை திரையிடும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் 76 கோடி ரூபாய்க்கு மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கியுள்ளது.

76 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க 100 கோடி ரூபாய் டிக்கெட் விற்பனை மூலம் மொத்த வசூல் ஆக வேண்டும். இதனை முதல் நான்கு நாட்களில் வசூல் மூலம் எடுத்து விட வேண்டும் என்கிற திட்டத்துடன் தமிழ்நாட்டில் அதிகமான திரையரங்குகளில் கோட் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், சினிமா ரசிகர்கள் விரும்பி படம் பார்க்க போகும் மால் தியேட்டர்களில் கோட் படம் திரையிடுவதற்கான ஒப்பந்தங்கள் இதுவரை முழுமையடையாமல் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது.

இதற்கு காரணம், டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் அதிக சதவீதம் விநியோகஸ்தருக்கான பங்கு தொகையாக கேட்பதால், திரையரங்குகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தாமதம் செய்து வருகின்றனர் என்று திரையரங்க வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இதனால் மால் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கவில்லை. கோட் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் நேரடி டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர் மன்றம், தமிழக வெற்றி கழக கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள், முதல் நாள் டிக்கெட் முழுவதையும் வாங்கி வெளி மார்க்கெட்டில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சாமான்ய மக்கள், விஜய் ரசிகர்கள், கோட் பட டிக்கெட் வாங்க முடியாமல் தடுமாறி வருகின்றனர் என்கிறார்கள் திரையரங்க வட்டாரத்தில்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை வந்ததும் நேராக மாமல்லபுரம் சென்ற மகன் பலி : கதறும் தந்தை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share