பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விஜய், த்ரிஷா நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் நாளை (அக்டோபர் 19) வெளியாகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (அக்டோபர் 18) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை வரத்தான் செய்கிறது. ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு கெட்ட வார்த்தை சர்ச்சையானது. இதற்கு நான் தான் முழு பொறுப்பு என்று கூறினேன். விமர்சனம் வந்த பிறகு அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்தக் கெட்ட வார்த்தையை படத்தில் வைத்தோம்.
குழந்தைகள் நிறைய பேர் பார்க்கிறார்கள் என்று சொன்ன பிறகு மியூட் செய்துவிட்டோம். தியேட்டரிலும் நிச்சயம் அந்த வார்த்தை மியூட்டில் தான் இருக்கும்.
ஒருவேளை இந்த பிரச்சினை இல்லை என்றால் வேறு பிரச்சினை வரத்தான் செய்யும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “’மாஸ்டர்’ படத்தின் முதல் பாதியில் விஜய் குடிகாரராகக் காட்டியிருப்போம். இரண்டாம் பாதியில் குடிப்பழக்கத்திற்கு எதிராக நடித்திருப்பார்.
18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்ல தியேட்டர் முன் நிற்கும் போது, எந்தவொரு ஒயின்ஸ் ஷாப்பிலும் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாரும் நிற்பதில்லை. இதைத்தான் மாஸ்டர் படத்தில் சொல்லியிருப்போம்.
அதேசமயம் படம் முழுக்க பாடமாக எடுத்தாலும் நன்றாக இருக்காது. படத்தை படமாகத்தான் எடுக்க வேண்டும். அதோடு, எனது தயாரிப்பாளருக்கு பணத்தை வசூலித்து தர வேண்டிய கட்டாயமும் உண்டு” என்றும் கூறினார்.
பெரிய ஹீரோக்களுடன் படம் எடுப்பதால் எனக்கு அழுத்தமும் இல்லை, எனது படத்தில் எல்லா ஹீரோக்களும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பார்கள் என்று தெரிவித்த லோகேஷ் கனகராஜ், “அடுத்து தலைவர் படம் எடுக்க போகிறேன். அது வேறு ஜானரில் இருக்கும். ‘இரும்புக் கை மாயாவி’ படமும் வேறு ஜானரில் இருக்கும்” என கூறினார்.
தியேட்டர்கள் பிரச்சினை தொடர்பாக பேசிய அவர், “படம் எடுப்பது என் கையில் இருக்கிறது. விநியோகம், பிசினஸ் எல்லாம் ப்ரொடியூசரின் கையில் தான் இருக்கிறது.
தியேட்டர் இல்லாமல் படம் எடுக்க முடியாது. அதுபோன்று நாங்கள் இல்லாமல் வெறும் தியேட்டரை ஓட்ட முடியாது. எனவே ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்வார்கள். இன்று 7 மணிக்குள் எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும் என நினைக்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆடியோ லான்ஞ் நடக்காததற்கு காரணம், எங்களுக்கான டிக்கெட் தேவையே 12000 அளவுக்கு இருந்தது. ஆனால் 6,000 சீட்டுதான் இருந்தது. அதன்பிறகு 70,000 முதல் 80,000 பேர் கூடுவார்கள் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்தது. இதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் பிரச்சினை ஏற்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சி முக்கியமா, படம் வெளியிடுவது முக்கியமா என பார்த்த போது படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாவதுதான் முக்கியம் என எனக்குப்பட்டது” என தெரிவித்தார்.
“நாளை காலை 9 மணிக்கு படம் வெளியாகும். இப்படம் எல்.சி.யு (லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்) என உதயநிதி ட்வீட் செய்திருந்தார். அதன் பக்கத்தில் ஒரு கண்ணடிக்கும் எமோஜியும் போட்டிருந்தார். அது சஸ்பென்ஸ். படத்தை பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்” எனவும் குறிப்பிட்டார் லோகேஷ் கனகராஜ்.
பிரியா
மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்