விஜய் நடித்துள்ள GOAT படத்தின் ட்ரெய்லர் அப்டேட் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தங்கலான், டிமாண்டி காலணி 2, ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. எனினும் கடந்த சில நாட்களாக GOAT படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் குறித்த பேச்சு தான் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள GOAT திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தெதி வெளியாக உள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ட்ரெய்லரை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி GOAT பட ட்ரெய்லர் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், கடந்த 12ஆம் தேதி ட்விட் செய்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள். அதோடு எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, “டிரெய்லர் வெளியீட்டு தேதி நாளை (இன்று) மாலை 6:00 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று ட்வீட் செய்தார்.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்று அப்டேட்காக காத்திருந்த நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார் அர்ச்சனா.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என உறுதியளித்தேன். சிறந்த பதிப்பை உங்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம் ❤️” என தெரிவித்துள்ளார்.
அதாவது டிரெய்லர் இன்னும் தயாராகவில்லை என்றும், தற்போது ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஏமாற்றத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்காக GOAT படத்தின் நடிகர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜயுடன் படத்தில் நடிக்கும் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், ஜெயராம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் டிரெய்லர் அப்டேட் குறித்து எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், ’யானைப்பசிக்கு சோளப்பொறியா’ என்ற ரீதியில் தங்களுடைய ஏமாற்றத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் விரக்தியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பினராயி விஜயன்