நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, இன்று (ஜூன் 22) அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விஜய்க்கு அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை இன்று பதிவிட்ட வாழ்த்து செய்தியில், “இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.
கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து
நடிகர் விஜய்க்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 22) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் விஜய்க்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் விஜய் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என வாழ்த்தி உள்ளார்.
திருமாவளவன் வாழ்த்து
“இன்று பிறந்தநாள் காணும் அன்பு இளவல் – தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய்க்கு எமது இனிய வாழ்த்துகள்.
நலமொடு வளமொடு நீடு வாழ்க! அய்யன் வள்ளுவரின் வாக்கொப்ப “எண்ணிய எண்ணியயாங்கு எய்துப”!” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
சீமான் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்து அறிக்கையில், “தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!” என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்று (ஜூன் 22) பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் , “அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு வாழ்த்து
நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் “தி கோட்” திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “LOVE U விஜய் அண்ணா..! மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துகள். அன்பு, சிரிப்பு, சந்தோஷம், நம்பிக்கை, நினைவுகள் என அனைத்துக்கும் நன்றி. கடந்த ஓராண்டிற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா வாழ்த்து
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தி கோட் விஜய்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனிருத் வாழ்த்து
இசையமைப்பாளர் அனிருத், “என் அன்பு விஜய் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வருடமும் உங்களுக்கு சிறந்ததாக அமையும். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபுதேவா வாழ்த்து
நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, விஜய்க்கு “எனது அன்பு விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…