உதயசங்கரன் பாடகலிங்கம்
இருபதாண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தால்..!
சலீம், பிச்சைக்காரன், சைத்தான், யமன், கொலைகாரன், திமிரு புடிச்சவன், கொலை, ரத்தம் என்று வித்தியாசமான பெயர்களைத் தன் படத்திற்கான ‘டைட்டில்’ ஆக வைக்கத் தயாராக இருப்பவர் விஜய் ஆண்டனி. அதன் மூலமாகப் பெரும் கவனிப்பைப் பெற்றாலும், அந்த டைட்டில்கள் அவரது படங்களின் உள்ளடக்கத்தோடு பொருந்துகிறதா என்பது தனி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் இன்னுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘ஹிட்லர்’.
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவமுள்ள தனா இதனை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இவர் தந்திருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையமைத்து இப்படத்தில் நாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், சரண் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் பிலிமோகிராஃபியில் வித்தியாசமானதொரு படமாக அமைந்திருக்கிறதா இந்த ‘ஹிட்லர்’?!
மின்சார ரயிலில் சில சம்பவங்கள்!
‘மதுரை அமெரிக்கன் காலேஜ்ல உன்னோட வாலிபால் விளையாடியிருக்கேன் தெரியுமா’ என்று சென்னையில் இருக்கும் கற்குவேலின் (ரெடின் கிங்ஸ்லி) வீட்டுக் கதவைத் தட்டுகிறார் செல்வா (விஜய் ஆண்டனி). ஒரு வேலைக்கான நேர்காணலுக்காக ஒரு மாதம் மட்டும் தங்க வேண்டும் என்று அவரிடம் கேட்கிறார். கற்குவேல் பதில் சொல்வதற்குள், அந்த அறையில் இன்னொரு உறுப்பினர் ஆகிறார்.
ரயில்நிலையத்தில் ஒரு இளம்பெண் மோதியதில் கீழே விழுகிறார் செல்வா. அந்தப் பெண்ணின் பெயர் சாரா. ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அன்றைய தினமே சாராவின் வேலை ‘பணால்’ ஆகிறது. மேலிடத்தில் ஆட்குறைப்பு செய்யச் சொன்னதாகச் சொல்லி, அவரை நீக்குகிறார் மேலாளர்.
அன்று மாலை மீண்டும் சாராவைச் சந்திக்கிறார் செல்வா. அப்போது, ‘நீ எனக்கு ராசி இல்லாதவன்’ என்கிறார் சாரா. பதிலுக்கு, ‘உங்களைப் பார்த்ததுமே என் வாழ்க்கையில சில நல்லது நடக்குது’ என்கிறார் செல்வா.
அன்றைய தினம் இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. அமைச்சர் ராஜவேலு (சரண்ராஜ்) சட்டமன்றத் தொகுதியில் தான் போட்டியிடும் தொகுதியில் வாக்காளர்களுக்குச் சட்டவிரோதமாகப் பணப் பட்டுவாடா செய்ய அனுப்பிய நூறு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்ற அவரது அடியாட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.
அந்த கொலைகள் குறித்து விசாரிக்கும் டெபுடி கமிஷனர் சக்தி (கௌதம் வாசுதேவ் மேனன்), மெல்ல ராஜவேலுவுக்கும் அந்த சம்பவத்திற்குமான தொடர்பு குறித்து அறிய முயல்கிறார். அதன் தொடர்ச்சியாக, வழக்கு பதியாமல் அதிகாரப்பூர்வமற்று அவரது பணம் குறித்து விசாரிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்.
இந்த நிலையில், சாரா – செல்வா இடையிலான மோதல் காதலாகிறது. ஒருநாள், ‘நான் எந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்கேன்னு தாம்பரம் போறதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டா உன்னை காதலிக்கிறேன்’ என்று சவால் விடுகிறார் சாரா. அதற்காக, அடுத்தடுத்த பெட்டிகளில் இருவரும் ஏறி இறங்கி, ஓடிப் பிடித்து விளையாடுகின்றனர்.
இதற்கிடையே, அந்த ரயிலில் ராஜவேலுவின் ஆட்கள் மீண்டும் நூறு கோடி சொச்ச ரூபாய் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அதனைச் செய்பவர்கள் யார்? இந்தக் கதையோடு செல்வாவும் சாராவும் எப்படிச் சம்பந்தப்படுகின்றனர்? இறுதியில் என்னவானது என்று சொல்கிறது ‘ஹிட்லர்’ படத்தின் மீதி.
ரொம்பவே மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஆக்ஷன் நாயகன் நடிக்கும் படமொன்றில், இந்தக் கதையின் அடுத்த பாதி எப்படியிருக்கும் என்று சொல்லத் தனியாக யோசிக்க வேண்டிய தேவையில்லை. இயக்குனர் தனாவும் அதையே நினைத்திருக்கிறார்.
ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’னை திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்த தாக்கத்தில் ‘ஹிட்லர்’ தந்திருக்கிறார்.
படத்தில் மின்சார ரயில் முக்கியப் பாத்திரமாக இருக்கிறது. அதில் நிகழும் சம்பவங்களே படத்தின் மையம். ஆனால், அதனைக் கொண்டாடத்தக்க வகையில் காட்டாமல் ‘தன் இஷ்டத்திற்கு’ பயணிக்கிறது திரைக்கதை.
பயன் எங்கே?
மலைப்பகுதியிலுள்ள மக்களில் சிலர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முயன்று உயிரை இழப்பது இக்கதையின் தொடக்கத்தில் இடம்பெறுகிறது. அது தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகளை ‘மிகக்குறைவான’ அளவில் பின்பாதியில் இடம்பெறச் செய்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால், ரொம்பவே குறைவான கால அளவில் அக்காட்சிகள் நறுக்கப்பட்டிருப்பது படத்தின் உள்ளடக்கத்தினைச் செறிவானதாக மாற்றவில்லை. இதனைச் சொல்வதால், இதில் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருப்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நவீன்குமார், படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன், கலை இயக்குனர் சி.உதயகுமார் உட்பட எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக அமைக்க இயக்குனருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
விவேக் – மெர்வின் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசையில் இருவரும் மிரட்டியிருக்கின்றனர். தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே ‘படு சூப்பரான’ கமர்ஷியல் படம் ஒன்றைப் பார்க்கிற எண்ணத்தை விதைக்கின்றன. ஆனாலும், அந்த ஆக்கம் எந்தவிதத்திலும் நம் மனதைத் தொடுவதாக இல்லை.
’நல்லா சமைச்சிருக்கீங்க, ஆனா சாப்பிடப் பிடிக்கலை’ என்று சொல்லும்விதமாகவே ‘ஹிட்லர்’ இருக்கிறது. ’அந்த உழைப்புக்குத் தக்க பயன் திரையில் எங்கே’ என்று கேள்வி எழுப்பும்விதமாகவே இப்படம் உள்ளது.
அதற்கு முழுமுதற் காரணம், இருபதாண்டுகளுக்கு முந்தைய கமர்ஷியல் படம் பார்த்தது போன்று அமைந்துள்ள இதன் எழுத்தாக்கம். இயக்குனர் தனா மட்டுமே அதற்குப் பொறுப்பு. முக்கியமாக, இரண்டாம் பாதிக் காட்சிகளில் எதுவுமே புதிதாகத் தெரியவில்லை. அதுவே, ‘ஏன் இப்படியொரு முயற்சி’ என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஒரு ‘ரொமாண்டிக்’ நாயகனாகத் தெரிய முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் மாட்டியிருக்கும் ‘விக்’ அதனைச் சிதறடித்திருக்கிறது.
ரியா சுமன் அழகுதான் என்றாலும், அது திரையில் அவர் தோன்றும்போது நம்மில் எழுவதே இல்லை.
சரண்ராஜ், தமிழ் ஆகியோர் வில்லன்களாக இதில் நடித்துள்ளனர். எவ்வித எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றாலும் கூட, அவர்களது இருப்பு நம்மைக் கவர்வதாக இல்லை.
இயக்குனர் கௌதம் இப்படியே போலீஸ் அதிகாரியாக நடித்து, அவர் வேறு பாத்திரங்களில் நடித்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனநிலையை நம்மில் உருவாக்கிவிடுவார் போல.
இவர்கள் தவிர்த்து ஸ்ரீரஞ்சனி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட சிலரும் இப்படத்தில் உண்டு.
இன்னும் சில நாட்கள் கழித்து, தொலைக்காட்சியில் அல்லது லேப்டாப்பில் இப்படத்தைப் பார்க்கையில் ‘ஓகேதான்’ என்று தோன்றலாம். அதற்கான தகுதிகள் இப்படத்தில் உண்டு. ஆனால், தியேட்டருக்கு சென்று ‘கூஸ்பம்ஸ்’ ஆகிற விஷயங்கள் இதில் இல்லை.
உண்மையைச் சொல்லப்போனால், அப்படி இயக்குனர் திரையில் காட்டியிருக்கிற விஷயங்கள் எல்லாமே அரதப்பழசாக இருக்கின்றன. அவை இருபதாண்டுகளுக்கு முந்தைய வெற்றித் திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. ’அப்போது வெளியாகியிருந்தால் இது வெற்றி பெற்றிருக்கும்’ என்று எண்ணத் தூண்டுகிறது ‘ஹிட்லர்’.
அதற்குப் பதிலாக, இன்றைய ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல ஒரு கதையை யோசித்திருக்கலாம் அல்லது வேறு கதாசிரியர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம். இயக்குனர் தனா அதனைச் செய்யாத காரணத்தால், இரண்டு மணி நேரத்தை நாம் ‘தியாகம்’ செய்ய வேண்டியிருக்கிறது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தம்பி சாப்பாட்டுக்கு என்ன செய்யுற? விஸ்வநாதன் ஆனந்த் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!
ஒசூர் டாடா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
லெபனான் பேஜர் வெடிப்பு… பின்னணியில் இருந்த இந்தியர் மாயமான பின்னணி!
காஞ்சி செல்கிறீர்களா? வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு!
வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு டிமாண்டா? போட்டி போடும் 3 நாடுகள்!