பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
ஸ்கூட்டர் போட் இயக்கும்போது அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் உடனடியாக நல்ல நிலைக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி.
சினிமாத்துறையை சேர்ந்த தனஞ்ஜெயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அவருடைய குடும்பத்தினர் மலேசியா சென்று விஜய் ஆண்டனியை சந்திக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க விஜய் ஆண்டனி மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்படுவார் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.
ஆனால், அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து அவர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று (ஜனவரி 20 )வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய் ஆண்டனி நலமாக இருப்பதாகவும், 2 நாட்களுக்கு முன்பே அவர் சென்னை வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
2 வாரங்கள் மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் சுசீந்திரன், விரைவில் ரசிகர்களுடன் வீடியோ காலில் விஜய் ஆண்டனி பேசுவார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், விஜய் ஆண்டனி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று வழி என்ன? : அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!