பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா?
குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி.
சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது.
அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய் ஆண்டனி ஒரு திரைக்கதையைச் செதுக்கியுள்ளார்.
தற்போது அப்படம் திரையரங்குகளை எட்டியுள்ளது. எப்படியிருக்கிறது ‘பிச்சைக்காரன் 2’? முதல் பாகம் போலவே நம் ஆழ்மனதிலுள்ள ஈவிரக்க உணர்வைத் தட்டி எழுப்புகிறதா இப்படம்?
பிச்சையெடுப்பவர்களின் உலகம்!
லட்சம் கோடிகளில் உழலும் ஒரு கோடீஸ்வரன், பணத்தைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் நபராக இருக்கிறார். அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இரு நண்பர்கள், குடும்ப மருத்துவர் ஆகியோர் ஒன்றுசேர்ந்து, அந்த நபரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புகின்றனர்; அவரது சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.
அதற்காக, மூளை மாற்று அறுவைச்சிகிச்சை செய்யும் ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்கின்றனர். அவரோ, எவ்விதப் பிரச்சனையும் எழாமல் இருக்க ஒரு சாதாரண நபரைக் கொண்டுவர வேண்டும் என்கிறார். அதற்கேற்ப, பிச்சைக்காரர்கள் மத்தியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நபரைக் கடத்தி வருகின்றனர். அந்த கோடீஸ்வரரின் தலையில் பிச்சைக்காரரின் மூளையைப் பொருத்துகிறார் மருத்துவர்.
உண்மையில், அந்த கோடீஸ்வரர் இறந்துவிட்டார்; அவரது உருவில் இருப்பது வேறொரு நபர். அவரைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று அந்த மூவர் கும்பல் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அதனால், அவரைக் கொல்ல முடிவெடுக்கின்றனர். எதிர்பாராதவிதமாக, அம்மூவரையும் அந்த நபர் கொன்றுவிடுகிறார்.
அதன்பிறகு, இருபதாண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன தனது தங்கையைத் தேடிச் செல்கிறார். அப்பெண்ணின் கையில் ‘சத்யா அண்ணன்’ என்று பச்சை குத்தப்பட்டிருக்கும். அவர் தன் தேடலைத் தொடர்கிறார். ஆனால், அவரது கோடீஸ்வர அடையாளமே அதற்குத் தடையாக இருக்கிறது.
அதன்பிறகு அந்த நபர் என்ன செய்தார்? பிச்சைக்காரனாக வாழ்ந்த அனுபவத்துடன், ஒரு கோடீஸ்வர வாழ்வை அவரால் மேற்கொள்ள முடிந்ததா என்று சொல்கிறது ’பிச்சைக்காரன் 2’.
ரொம்பவே எளிமையான திரைக்கதையுடன் ‘பிச்சைக்காரன்’ முதல் பாகம் இருந்ததைப் போல இப்படம் இல்லை என்பதே உண்மை. மலைப்பாதையில் செல்லும் ரயில் வண்டியைப் போல வளைந்து நெளிந்து செல்லும் ’பிச்சைக்காரன் 2’ திரைக்கதை நமது பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கிறது.
ஆனால், சாதாரண ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
சீரியசான முதல் பாதி!
ஒரு நடிகராக, நட்சத்திர நாயகனாகத் திரையில் தோன்றுவது எப்படி என்ற வித்தை விஜய் ஆண்டனிக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்தினாலும், தியேட்டருக்குள் எதிர்க்குரல் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிந்திருக்கிறது.
அவரே இயக்குனர் என்பதால், பல கோணங்களில் யோசித்து தனக்கான காட்சிகளை அமைத்திருக்கிறார். ஆக்ஷன் இருக்குமளவுக்கு சென்டிமெண்ட் இல்லை என்றாலும், கண்ணீர் உதிர்க்கும் காட்சிகளில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எடுத்தவுடனேயே, ’கள்ளூறும் பூவே’ பாடல் திரையில் ஒலிக்கிறது. அதில் விஜய் ஆண்டனியின் ரொமான்ஸை விட காவ்யா தாபரின் கவர்ச்சிகரமான தோற்றமே மனதை ஆக்கிரமிக்கிறது. ஆக்ஷன் நாயகி போன்று தோற்றம் தந்தாலும், படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவு தான்.
யோகிபாபுவின் காமெடிக்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றபோதும், அவ்வப்போது திரையில் தோன்றி சிரிக்க வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் நண்பர்களாக வரும் தேவ் கில், ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பேரடியின் வில்லத்தனத்தில் வித்தியாசமாக எதையும் காண முடியவில்லை. கிட்டி ஓரிரு காட்சிகளில் தலைகாட்டிவிட்டு காணாமல் போய்விடுகிறார். அரசியல்வாதியாக வரும் ராதாரவியும், போலீஸ் அதிகாரியாக வரும் மன்சூர் அலிகானும் பின்பாதி திரைக்கதையைப் பரபரப்பாக மாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர்த்து ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராம் போன்றோரும் இக்கதையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு இசை, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் எழுத்தாக்கத்திலும் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வழக்கம்போல ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் தாளகதியை பாடல்களில் நிறைத்திருக்கிறார்; பின்னணி இசையில் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறார். முன்பாதியில் சீரியசாக நகரும் திரைக்கதையைத் தாங்கிப் பிடிப்பது விஜய் ஆண்டனியின் பின்னணி இசையே.
கலை இயக்குனர் ஆறுசாமி, ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் இருவரும் ஒவ்வொரு பிரேமையும் ‘ரிச்’ ஆக காட்டக் கடுமையாக உழைத்திருக்கின்றனர். அதேநேரத்தில், எங்கெல்லாம் விஎஃப்எக்ஸ் தேவைப்படும் என்று திட்டவட்டமாக உணர்ந்து செயல்பட்டிருக்கின்றனர். அதையும் மீறி பட்ஜெட் குறைவால் கிராபிக்ஸ் சில இடங்களில் தனது அரைகுறை முகத்தைக் காட்டுகிறது.
ஒரு படத்தொகுப்பாளராக விஜய் ஆண்டனி மேற்கொண்டிருக்கும் பணி பாராட்டுக்குரியது. தான் ஏற்ற விஜய் குருமூர்த்தி, சத்யா எனும் இரு பாத்திரங்களின் பின்னணியை முழுமையாக விவரித்தபிறகே, தற்போது நடந்து வரும் நிகழ்வுகளுக்குத் தாவியிருக்கிறார். தேவ் கில்லின் பிளாஷ்பேக்கை ரத்தினச்சுருக்கமாகச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
கோடீஸ்வர அந்தஸ்து கிடைத்தபிறகும் நாயகன் மீண்டும் பிச்சை எடுக்கச் செல்வதற்கான விளக்கம் திரைக்கதையில் கிடைக்கப் பெறவில்லை. அதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்கை சென்டிமெண்ட் திரையில் வலுவாக இடம்பெற வேண்டிய இடமும் அதுவே.
எங்கே பேமிலி ஆடியன்ஸ்!
‘பிச்சைக்காரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘விஸ்வாசம்’, ‘நம்மவீட்டுப்பிள்ளை’, ‘பொன்னியின் செல்வன்’, ’வாரிசு’ போன்ற படங்களெல்லாம் கொத்துக்கொத்தாக பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவை. ஆனால், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை அந்த நோக்கத்தில் விஜய் ஆண்டனி உருவாக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.
ஏனென்றால், இதில் சென்டிமெண்ட் மட்டுமல்லாமல் காமெடி காட்சிகளும் குறைவாகவே உள்ளன. பிச்சை எடுப்பவர்களின் பின்னணியோ, அவர்களது துயரமான வாழ்வோ இதில் விரிவாகக் காட்டப்படவில்லை. அதேநேரத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகளில் பல கொடூரங்களுக்கு ஆளாகக் கூடும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.
அடிப்படைக் கதை, திரைக்கதை நகரும் விதம், காட்சியமைப்பில் வன்முறை மற்றும் ஆபாசம் போன்றவற்றைப் பொறுத்தவரை முதல் பாகத்தில் இருந்து பல வகையில் ‘பிச்சைக்காரன் 2’ வேறுபட்டுள்ளது. இந்த படத்திற்காக கே.பழனி, பால் ஆண்டனி உடன் இணைந்து விஜய் ஆண்டனி திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி ஜவ்வாக இழுத்தாலும், படத்தின் முடிவு ரசிகர்களைக் கண் கலங்க வைக்கும்.
‘ஆன்ட்டி பிகிலி’ எனும் வார்த்தையை உருவாக்கி, ஊழல் மற்றும் முறைகேடுகளில் புதையுண்டு போகாமல் அடித்தட்டு மக்கள் தங்கள் தேவைகளைப் பெறுவதற்கான ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அதைப் பார்க்கையில் ஷங்கரின் ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரமணா’ போன்ற படங்களைப் பார்த்த ‘எபெக்ட்’ கிடைக்கிறது. அக்காட்சிகளைப் பார்த்தபிறகு, ‘பிச்சைக்காரன் 2’ எனும் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது.
உண்மையில்,, அந்த டைட்டிலை மனதில் வைத்தே முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் பல குடும்பங்கள் தியேட்டர் வாசலில் திரண்டு நின்றன. இப்படம் அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு; ’பிச்சைக்காரன் 2’வின் மாபெரும் பலவீனம் அதுவே. அதனை வெற்றிகொண்டால், ஒரு பிரமாண்டப் பட இயக்குனருக்கான தகுதியை விஜய் ஆண்டனி எட்டுவார்!.
உதய் பாடகலிங்கம்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு பிரேக்: 12 மாவட்டங்களில் கனமழை!
கைத்தூக்கி ஒற்றுமையை காட்டிய தலைவர்கள்!
பிரசாந்த் நீல்-ஜூனியர் என்டிஆர் படத்தின் அப்டேட்!