நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று(செப்டம்பர் 20) காலை கீழ்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா (வயது 16) நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மீராவின் உடலை கைப்பற்றி சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது உடலானது ஆழ்வார் பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள விஜய் ஆண்டனி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பாரதிராஜா, கார்த்திக், பிரபுதேவா, அருண் விஜய், சித்தார்த், சிம்பு, பார்த்திபன், ஆர்த்தி, நடிகர் விஜயின் தாய் ஷோபா உள்ளிட்டோர் நேரில் சென்று மறைந்த சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விஜய் ஆண்டனிக்கும் ஆறுதல் கூறினர்.
இறந்த மீராவின், பள்ளி ஆசிரியர்களும், தோழிகளும் கண்ணீர் மல்க நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றது அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையே தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசியதும், பள்ளி நிகழ்வில் அவரது மகள் பங்கேற்ற வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சமூகவலைதளங்களில் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
12ம் வகுப்பு படிக்கும் மாணவியான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதில் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்தின் காரணமாக மீரா இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையின் போது மீரா கைப்பட எழுதியுள்ள ஒரு கடிதம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் “ நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும். எனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன். ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்” என நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று மாலையே கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்லறையில் இடம் கிடைக்க தாமதம் ஆனதால் இன்று காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
(தற்கொலை தடுப்பு கட்டணமில்லா உதவி எண் – 85265 65656)
கிறிஸ்டோபர் ஜெமா