நடிகர் விஜய் – ரஷ்மிகா மந்தனா முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி 2023 ஜனவரி 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் அவரது ரசிகர்களைப் பெரியளவில் திருப்திப்படுத்தவில்லை. அதே வேளையில் வணிக அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக இருந்ததாக கூறப்பட்டது.
வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கடந்த பத்தாண்டுகளாகவே வெளியீட்டின் போது கதை திருட்டு குற்றசாட்டு, அரசியல், ஏற்கனவே வெளியான படத்தால் ஏற்பட்ட நஷ்டம் என ஏதேனும் ஒரு பிரச்சினை முன் வந்து பரபரப்பு ஏற்படும். வாரிசு திரைப்படத்திற்கு அது போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற நிலையில் படத்தை தயாரித்துள்ள தில் ராஜூவின் சொந்த மாநிலமான ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் இருந்து முதல் பிரச்சினை எழுந்தது.
அதாவது பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதனால் வாரிசு திரைப்படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இல்லை.
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தங்கள் மொழி திரைப்படங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் காலங்காலமாக கடைப்பிடித்து அதனை பின்பற்ற செய்துவரும் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்த் திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அதே போன்று நாம் தமிழர் கட்சி சீமான், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், அது சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் தயாரிப்பாளர் தில்ராஜு, படத்தின் நாயகன் விஜய் ஆகியோர் தெரிவிக்கவில்லை.
ஆனால் வாரிசு படத்தின் வியாபாரங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கான வேலைகளை தயாரிப்பாளர் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.
அதே போன்று அந்நிறுவனத்தின் தொழில்முறை கூட்டாளியான லைகா நிறுவனம் துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அஜித்குமார் – விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையான மோதலை தொடங்கியுள்ளனர்.
வாரிசு படத்தை காட்டிலும் அதிக விலைக்கு துணிவு படம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வெளிநாட்டில் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில் துணிவு படத்தின் விலையை காட்டிலும் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாரிசு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை விற்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. துணிவு 18 கோடி ரூபாய்க்கும், வாரிசு படம் 60 கோடி ரூபாய்க்கும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
இராமானுஜம்
சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1
இடதுசாரிகளும் இடஒதுக்கீட்டுக் கொள்கையும்