சட்டமீறலில் விக்னேஷ் சிவன்… நீதிமன்றம் செல்லும் தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் படத்தலைப்பிற்கான பஞ்சாயத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
சாமானிய தயாரிப்பாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்புகளை பெரிய நிறுவனங்கள், அல்லது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு தலைப்பாகவே அறிவித்துவிடுவார்கள். அதனைக் கண்டு தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பவர் அலறி அடித்து ஓடி வருவார்.
தலைப்பை விட்டுக் கொடுக்க பண பேரம்பேசப்படும். சிலர் கிடைத்தவரை லாபம் என வாங்கிகொண்டு NOC கொடுத்துவிடுவார்கள்.
பண பேரத்துக்கு படியவில்லையென்றால் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்பிற்கு முன்பாக வேறு பெயரை பயன்படுத்தி தலைப்பிற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரிய நிறுவனம் ஒப்புதல் வாங்கிவிடும். வல்லான் வகுத்ததே நீதி என்பதற்கு இணையாக சங்க நிர்வாகமும் கண்டும் காணாமல் ஒதுங்கிவிடும்.
போராடும் பலம் இருப்பவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். முடியாதவர்கள் முடங்கிப் போவது உண்டு.
இது போன்ற நிலை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரெங்கநாதன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான தலைப்பு பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.
விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்துக்கு எல்.ஐ.சி. (Love Insurance Corporation) என பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்தப் படத்தில் லவ் டுடே பிரதீப் ரெங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மேலும் யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்புக்கான பூஜை கடந்த 14ஆம் தேதி போடப்பட்ட நிலையில் அந்த புதிய படத்தின் தலைப்பு பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.
இசையமைப்பாளரும் , இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் இதே எல்.ஐ.சி. என்னும் தலைப்பினை தான் பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடக நண்பர்களுக்கு வணக்கம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன்.
காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில் வாகனன் மூலம் என்னை அணுகினார்.
ஆனால் L.I.C. என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச் சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக, இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.
அப்படி இருந்தும் இந்தத் தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க, முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.
LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல கட்ட அறிவிப்புக்கு பிறகு இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் பூஜைப்போட்ட நிலையில், அதற்கு மறுநாளே எழுந்துள்ள தலைப்பு பிரச்சனை தற்போது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டில், மெத்தை, இறைச்சி… ED அதிகாரி அங்கித் திவாரிக்கு வழங்க உத்தரவு!
ரோகித் பதவி பறிப்பு எதிரொலி: மும்பையை வீழ்த்தி சாதித்த சி.எஸ்.கே!
மனம் எப்படி கர்மவினையை உண்டாக்குகிறது?!