கோமாளி படத்தின் வெற்றிக்குப் பின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் பேசியபோது அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடினார்கள். இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள தனி அலுவலகம் போட்டு முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்மையில் நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டு அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
அதனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிப்பு விரைவில் வருமென்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், அதில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது
முன் தயாரிப்புப் பணிகளின் போதே ராஜ்கமல் நிறுவனத்துடன் விக்னேஷ் சிவனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். அந்நிறுவனத்திற்கு படம் இயக்குவதில் இருந்து விலகி கொண்டதுடன், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க போவதாக அவருக்கு உறுதிகொடுத்திருக்கிறார்.
இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அந்தப்படத்தை மாஸ்டர், கோப்ரா, லியோ படங்களை தயாரித்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். ஏற்கெனவே அந்த நிறுவனத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா,சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ்சிவன். அதனால் இப்படம் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறது.
விக்னேஷ்சிவன் இயக்கம் பிரதீப் நடிப்பு ஆகியவற்றோடு, நிதிப்பிரச்சினை இல்லாத தயாரிப்பு நிறுவனம் என்பதுடன் படத்தின் புரமோஷன், வெளியீட்டில் திட்டமிட்டு பணியாற்றும் முதல் தரமான தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோ. படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். முக்கியவேடத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பிரதீப், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகிய மூவருமே இரட்டைஅர்த்த வசனங்களை பேசுவதில் புகழ்பெற்றவர்கள். இந்த மூவரும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!