கமர்ஷியல் திரைப்படங்கள் தரும் நட்சத்திர நாயகர்கள் எவ்வாறு ஆராதிக்கப்படுகிறார்களோ, அதற்கிணையான பாராட்டுகளை இயக்குனர்களும் அள்ளுவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு வரவேற்புக்குரிய இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார் வெற்றிமாறன். அவர் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அந்த எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு ‘விடுதலை பாகம் 1’ அமைந்திருக்கிறதா? படம் பார்த்து வெளியே வரும்போது, இக்கேள்விக்கு மாறுபட்ட பதிலொன்றைத் தர முடிகிறது.
பிளாஷ்பேக் சம்பவங்கள்!

அருமபுரி மாவட்டத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி). அங்கு அமையவிருக்கும் சுரங்க முதலீட்டுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் மக்கள் படையைச் சேர்ந்த தலைவர்கள்; அவர்களைப் பிடிப்பதற்காக, ஒரு தனிப்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொறுப்பாளராக போலீஸ் அதிகாரி ராகவேந்தர் (சேத்தன்) உள்ளார். தான் சொல்வதை மட்டுமே முகாமில் இருக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கும் மனிதர் அவர்.
அவரது ஜீப் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார் குமரேசன்.ஆனால், வந்த முதல் நாளே அதிகாரியின் உத்தரவை மீறி உடல்நலமில்லாத ஒரு மூதாட்டியை ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார் குமரேசன். அது ராகவேந்தரை ஆத்திரப்படுத்துகிறது. அதனால், வாரம் முழுக்க இரவு பகலாகப் பல்வேறு வேலைகளைச் செய்யும் கொடுமைக்கு ஆளாகிறார். அது, அந்த மூதாட்டியின் பேத்தியான தமிழரசிக்குத் (பவானிஸ்ரீ) தெரிய வருகிறது.
நாள்பட தமிழரசிக்கும் குமரேசனுக்கும் இடையே ஒரு நட்பு மலர்கிறது; மெல்ல காதலாக மாறுகிறது. அருமபுரி மலைப்பகுதிகளில் சுரங்கம் அமைக்கும் பணி தொடர்பாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.
அந்தச் சூழலில், மக்கள் படையினரால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறது காவல் துறை. அப்போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரது உறவினர்கள் முகாமின் அருகிலுள்ள கிராமத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.
தமிழரசியின் உறவினரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்தச் சூழலில், மக்கள் படையின் தலைவர் பெருமாள் எனும் வாத்தியாரை (விஜய் சேதுபதி) தான் பார்த்ததாக ரைட்டர் சந்திரனிடம் சொல்கிறார் குமரேசன்.
அவர் மட்டுமல்ல, யாரும் அதனைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல்போய், அதனால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் பதைபதைக்கும்போது, தமிழரசியின் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆண்களும் பெண்களும் தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் நிர்வாணப் படுத்தப்படுகின்றனர். அந்த அவமானம் தமிழரசிக்கு நிகழ்ந்துவிடக் கூடாது எனும் நினைப்பில், பெருமாள் இருக்குமிடத்தைத் தன் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க ஓடுகிறார் குமரேசன்.
அவர் சொல் அம்பலம் ஏறியதா இல்லையா? பெருமாள் பிடிபட்டாரா என்பதோடு படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமையும் புட்டு புட்டு வைத்தாலும், படத்தைப் பார்க்க அமர்ந்தால் தன்னை மறந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு, திரையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறது வெற்றி மாறன் குழு. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது போல திரைக்கதை வடிவமைக்கப்படிருப்பதால், பிளாஷ்பேக் சம்பவங்களாகவே மொத்த படமும் நகர்கிறது.
அரியலூர் ரயில் பாலம் தகர்ப்பு, வாச்சாத்தி கொடுமை உட்படத் தமிழ்நாட்டு சமூக அரசியல் பரப்பில் கிளர்ச்சியை உண்டாக்கிய பல விஷயங்கள் திரைக்கதையில் செருகப்பட்டிருக்கின்றன.
பரோட்டா முதல் போலீஸ் வரை!
எத்தனையோ படங்களில் துணைநடிகராகத் தலைகாட்டியிருந்தாலும், ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் வரும் பரோட்டா சூரியாகத்தான் ரசிகர்கள் பலருக்கும் அவர் அறிமுகம். அப்படிப்பட்டவர் முழுக்கவே சீரியசான பாத்திரமொன்றில் நடிக்கும்போது, நிச்சயம் சிரிப்பு வந்துவிடக் கூடாது. அதற்கேற்றவாறு குமரேசன் பாத்திரத்தைத் தந்திருக்கிறார் வெற்றி மாறன்.
இத்தனைக்கும் காதல் காட்சிகளில் ‘சுப்பிரமணியபுரம்’ ஜெய் போல தன் பற்கள் தெரியச் சிரிக்கிறார் சூரி; ஆனால், நமக்கு கொஞ்சம் கூட கிண்டலடிக்கத் தோன்றுவதில்லை. காரணம், கனமான கதைக்களம். நிச்சயமாக, ஒரு நாயகனாக அறிமுகமாகச் சிறப்பான படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் சூரி.
தனிப்படை முகாமில் கடைசி நபராகக் கருதப்படும் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரைக் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்க முயல்வதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.
விஜய் சேதுபதிக்குக் காட்சிகள் குறைவென்றாலும், ‘விக்ரம்’ பாணியில் அனைவருமே அவரது பாத்திரம் பற்றியே படம் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, ஐம்பதுகளை தாண்டிய ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றும்போதும் நம்மையும் அறியாமல் ஒரு சூப்பர் ஹீரோ’ போல கொண்டாடத் தோன்றுகிறது.

இவர்கள் இருவரையும் தவிர்த்து தமிழரசியாக வரும் பவானிஸ்ரீ, அவரது பாட்டியாக வரும் அகவம்மா, தனிப்படை முகாம் அதிகாரியாக வரும் சேத்தன், தலைமைச்செயலாளர் சுப்பிரமணியமாக வரும் ராஜீவ் மேனன், புதிய அதிகாரியாக இடம்பிடிக்கும் கவுதம் மேனன், அமைச்சராக வரும் இளவரசு, மூணார் ரவி என்று பலரும் நம் மனதில் இடம்பிடிக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்துப் பலர் இப்படத்தில் முகம் காட்டியிருந்தாலும் ரைட்டர் சந்திரன் ஆக வருபவர் நம் கவனம் கவர்கிறார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கியத்துவம் என்று எதிர்பார்க்கலாம்.
‘விடுதலை’யின் முக்கிய பலம், மலைப்பாங்கான பிரதேசத்தை முதன்மைப்படுத்தும் கதைக்களம். அதனைக் கொஞ்சம் கூட அழகுறக் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
அதனாலேயே, அழகழகான இடங்கள் கூடக் காட்சிகளின் கனத்தினால் நம் எண்ணவோட்டத்தில் இருந்து விலகி நிற்கின்றன. அதேபோல, கண்கள் பதறும் அளவுக்கு குறைந்த நொடிகள் ஓடும் ஒரு ஷாட்டை கூடக் காண்பித்துவிடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.
கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியிலும் அதனைப் பின்பற்றியிருப்பது அருமை. போலவே பீட்டர் ஹெய்ன், ஸ்டன் சிவா குழுவினரின் உழைப்பும் அபாரம்.‘காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் ஏற்கனவே பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. அவை திரையில் இடம்பெறும்போது, எவரும் இருக்கையை விட்டு எழவில்லை.

டைட்டில் இசையில் ‘ஜெர்க்’ ஆக வைத்தாலும், படம் முழுக்கப் பாவி நிற்கும் பின்னணி இசை நம் கவனத்திற்குப் புலப்படாதவாறு காட்சிகளோடு கரைந்திருப்பது இன்னொரு அதிசயம்.ஊட்டி, கொடைக்கானல் என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் சில பகுதிகளையே பார்த்த கண்களுக்கு, அடர்ந்த காடு இப்படித்தான் இருக்கும் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன்.
பரீட்சார்த்தமாக அவர் படம்பிடித்தவை மட்டும் மிகச்சில இடங்களில் ஒட்டாமல் தனித்து தெரிகிறது. அவற்றைப் புறந்தள்ளினால் நமக்குக் கிடைப்பது ரத்தினம் போன்ற காட்சியாக்கம். அவற்றில் லாஜிக் மீறல்களைத் தேடினாலும் சுலபத்தில் கிடைப்பதாக இல்லை.
வெற்றிமாறனின் தனித்துவம்!
அருமபுரி என்ற பெயரைச் சொல்லும்போதே, இது எந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கதை என்பதை ஊகித்துவிட முடிகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்கள் சூப்பர்பாஸ், வாத்தியார் என்று உச்சரிப்பதெல்லாம் குறிப்பிட்ட தலைவரைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன், பெருமாள் வாத்தியார் எனும் பாத்திரம் கூட நக்சல்பாரி கொள்கையை முன்னிறுத்திய ஒரு தலைவரின் சாயலில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், அது போன்ற பல தகவல்களை திரையில் அழுத்தம் திருத்தமாகவோ, ஒருசார்பான பிரசாரத் தொனியிலோ வெற்றிமாறன் படமாக்கவில்லை. வெற்றிமாறனின் முந்தைய படங்கள் காவல்துறையின் அத்துமீறல்களைச் சொன்னது போலவே, இதில் தனிப்படையினரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், மக்களுக்குச் சேவையாற்றும் எண்ணத்தோடு இருப்பவர்களும் கணிசம் என்று காட்டுகிறது திரைக்கதை. வெறுமனே நாயகனை மட்டுமே நல்லவன் என்ற வார்ப்பில் அடக்கவில்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் காட்ட பாதுகாப்பான கோணங்களைத் தேர்ந்தெடுக்காமல், முழுக்க நிர்வாணமாகப் படம்பிடித்து படத்தொகுப்பில் அப்பிம்பங்களை ‘மங்கலாக்கிய’ எபெக்டிலேயே திரையில் ஓட விடுகிறார்.
ஒரு கோரத்தை அழகாகக் காட்சிப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறை அதன் பின்னிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும். ஒரு திரைப்படத்தின் இயக்குனருக்கும் அது பொருந்தும். ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவருக்கே சமநிலை வாய்க்கும். ஏதேனும் ஒருபக்கம் நில் எனும் எதிர்பார்ப்புக்கு மாறானது இது; கூட்டம் சேர்க்க வழிவகை செய்யாதது.
ஆனால், அதனை முன்வைக்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்கு மக்கள் திரளாகக் குவியக் காரணம், அவரது தனித்துவமான படைப்பாக்கமே. அதுவே, நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு வெளியானபோதும் ’அடுத்த பாகம் எப்போது’ என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்கவும் தூண்டுகிறது. அந்த வகையில், இது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறி வேறொரு உச்சத்தைத் தொட்ட படமாகவும் இருப்பது சிறப்பு.
உதய் பாடகலிங்கம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
விடுதலை படத்திற்கு அனுமதி மறுப்பா? காவல்துறையினருடன் வளர்மதி வாக்குவாதம்!