வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள ’விடுதலை பாகம் 1’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இது அப்பட்டமான கதைத் திருட்டு என வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா.முருகவேள் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள பதிவில், ”விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன.
நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்.
தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87 இல் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.
ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 93 to 95, 96 வீரப்பன் வேட்டையின் போது.
இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ் நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது.
பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனுடன் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே.
மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், “ இந்த திருட்டில் ஜெயமோகனுக்கு பங்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னொருவர் கதைக்கு தான் பெயர் போடும் போது கூசி இருக்க வேண்டும்.
ஆனால் தனக்கும் இது பற்றியெல்லாம் தெரியும், படத்தில் வரும் இந்த விஷயங்களில் தனக்கும் பங்கு உண்டு என்பது போல பாசாங்கு செய்து அவர் பேட்டி கொடுத்து வருவது சுயமரியாதை அற்ற தன்மையை காட்டுகிறது.
தமிழ் நாட்டில் படித்த அரசியல் உணர்வுள்ள பார்வையாளர்கள் தங்கள் புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம் என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
அபத்தங்கள் போலிகளை புரிந்து கொள்வது அறிவுபூர்வமான ரசனையின் முக்கிய அம்சமாகும்” என்று எழுத்தாளர் இரா.முருகவேள் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்