’விடுதலை’ பட விவகாரம்: கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்!

சினிமா

”வெற்றிமாறனின் ‘விடுதலை ‘ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில்… மூலக் கதை யாருடையது என்று சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த திரைப்படம் எழுத்தாளர் ச.பாலமுருகனின் ’சோளகர் தொட்டி’ நாவலை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது என பலரும் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ’சோளகர் தொட்டி’ நாவலின் ஆசிரியர் ச.பாலமுருகன், “வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர். அவர் ஒரு படைப்பை அணுகும் போது அறிவு நாணயத்தோடு அணுகி இருக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ச.பாலமுருகன் சமூகவலைதள பக்கத்தில் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ள பதிவில்,”வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்த போது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னணி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என அய்யம் தெரிவித்தார்.

ஆனால் நான் வெற்றி மாறன் என்ற இயக்குனரை நேரில் அறிந்ததில்லை என்ற போதும், தொடர்ந்து நாவல்களின் மைய கதையை திரைப்படமாக்கும் இயக்குனராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராக இருப்பதாலும், மேலும் அந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெய மோகனின் கதையை அடிப்படையாக கொண்டது என்பதாலும் சில கடந்து போகும் காட்சிகளை தவிர்த்து சோளகர் தொட்டி தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.

திரைப்படம் வெளிவந்த தினத்திலிருந்து பல்வேறு நண்பர்கள் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர். நான் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விருவிருப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது.

திரைப்படத்தின் மையக் கருவும், கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின் புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது” என்று கூறியுள்ளார்.

viduthalai movie story issue

குறிப்பாக இத் திரைப்படத்தின் துவக்க காட்சியான ரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம் மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரணை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம். அங்கு பணி புரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர்.

சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர் சுபாஷ். கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு உயிருடன் ஜீப்பில் கொண்டு போய் அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும் போது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலீஸ்காரன். இந்த பாத்திரத்தின் நீட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமாக இத் திரைப்படத்தின் நாயகன் நிற்கின்றான்.

திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்கு பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களை கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன.

சோளகர் தொட்டி என்ற நாவலின் காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தியதாலும் நாவலின் ஆன்மா வேறானது. அது நியாயத்தின் குரலாகவும், மனிதநேயத்தின் நியதிகளை கோரிய படைப்பாகவும் இருக்கின்றது. அது ஒரு தொடர் செயல்பாட்டின் வெளிப்பாடு. வெகு காலம் அம்மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம் என்று ச.பாலமுருகன் கூறியுள்ளார்.

ஆனால் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அவர் ஒரு படைப்பை அணுகும் போது அறிவு நானயத்தோடு அணுகி இருக்க வேண்டும் என் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைதன்மையோடு உலகளாவிய அளவில் மனித நேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம் மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது என்று காட்டமாக கூறியுள்ளார் சோளகர் தொட்டி நாவலின் எழுத்தாளர் ச.பாலமுருகன்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதல்வர், முன்னாள் முதல்வருக்கு கொரோனா!

டிஜிட்டல் திண்ணை: ’கெத்து’ காட்டிய எடப்பாடியின் கூட்டங்கள் ரத்து பின்னணி!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *