சூரி குமரேசனா மாறிய கதை!

சினிமா

தமிழ் சினிமாவில்1999 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா நகைச்சுவையை பேசி நடித்திருந்தார் சூரி.

2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சி, மற்றும் வெகுஜன தளத்தில் பரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சி தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பிடித்தது. 

அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார்,சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால் நல்லது என்று இயக்குநர்களும், நடிகர்களும் கூறும் அளவுக்கு முக்கியத்துவமிக்க நடிகராக வளர்ந்தார். அவருடைய தேதிகளுக்காக மற்ற நடிகர்களின் தேதிகள் மாற்றப்பட்டது.

அப்போதே அவரை கதாநாயகனாக நடிக்க கேட்டு பார்த்தார்கள். “நல்லாப் போய்கிட்டிருக்கு அதுல மண்ணப் போட்றாதீங்க” என்று வெளிப்படையாகச் சொல்லி கதாநாயகன் வாய்ப்பை தவிர்த்தார் சூரி.

அவர் உடன் இருப்பவர்களே, இவர் ஏன் இப்படிச் செய்கிறார்? என்று எரிச்சலைடையும் அளவுக்கு வந்த வாய்ப்புகளை நிராகரித்தார்.

அதேசமயம், அவருக்குள் கதாநாயகனாக நடிக்கும் ஆசை இருந்தது. காமெடியனில் இருந்து கதாநாயகனாக மாற்றம் காணும்போது தொடக்கப்படங்களிலேயே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளும்படியான படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவில் சூரி இருந்ததாக தெரிகிறது.

அதனால் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கு என்பது போல நல்ல இயக்குநர் சரியான கதை என்கிற இரைக்காகக் காத்திருந்தார் என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

இயக்குநர்வெற்றிமாறன்  முதலில் சொன்ன கதை அதன்பின் இப்போது எடுத்திருக்கும் விடுதலை கதை ஆகியன தமக்குப் பொருத்தமானது என்பதை உணர்ந்து ஏற்றார். பல படங்களைத் தவிர்த்துவிட்டு இந்தப்படத்துக்கு உழைப்பைச் செலுத்தினார்.

மார்ச் 31 ஆம் தேதிதான் படம் வெளியாகவிருக்கிறது. 

ஆனால் சூரி தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு விடுதலை படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்  என்பது இப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஆம், ஒரு மாதத்துக்கு முன்பு விடுதலை படத்தின் முதல்பாடல் காணொலி வெளியானது. ‘உன்னோட நடந்தா’ என்கிற அந்தப்பாடலை தனுஷ் பாடியிருந்தார். அந்தப்பாடலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைவிட சூரியின் தோற்றப் பொருத்தத்துக்கு நல்ல வரவேற்பு.

அதன்பின் வெளியான ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடலும் அவருக்கு மிகுந்த நற்பெயரைப் பெற்றுத்தந்தது.

இவற்றிற்குப் பின் வெளியான விடுதலை படத்தின் காட்சிகள், அவற்றில் சண்டைக்காட்சிகள் உட்பட எல்லாவற்றிலும் மிக இயல்பாக நடித்திருந்தது வெகுஜன பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது

சூரி கதைநாயகனாக நடிக்கும் முதல்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன், இசை இளையராஜா, உடன் கெளரவ வேடத்தில் விஜயசேதுபதி, அவருக்காகப் பாடிய தனுஷ், நான்கு கோடியில் தொடங்கி நாற்பது கோடியைத் தொட்டாலும் தயக்கம் இன்றி தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய எல்லாமே பிரம்மாண்டமாக  அமைந்திருக்கின்றன.

அவற்றோடு இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
இவை எல்லாம் ஒரு அழுத்தமான அடித்தளம் என்றால் இப்படத்தை அடுத்து அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் மற்றும் படங்கள் குறித்த தகவல்கள், விடுதலை என்கிற அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்படும் அடுக்கு மாளிகையை உணர்த்தும் வண்ணம் இருக்கிறது.

காமெடி கதாபாத்திரங்களில் இருந்து சூரி விடுதலையாகி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நிலைகொண்டு விடுவார் என தெரிகிறது.

இந்தசூழலில் ‘விடுதலை’ படம் குறித்தும், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகர் சூரி பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

Viduthalai Movie - Actor Soori Press Meet

“முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு மிகப் பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதை நாம கண்டுபிடிப்பதற்கு முன்னாடியே இன்னொருத்தர் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம்.

அப்படி எனக்குள் இருந்த இந்த குமரேசனை கண்டு பிடித்ததற்கு வெற்றி மாறன் அண்ணாவிற்கு பெரிய நன்றி. இதற்கான தகுதியை ஏற்படுத்திய எனக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி மாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நான்கு காட்சிகளிலாவது அவர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று விரும்பினேன்.

எனது விருப்பத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சாரிடமும், இணை இயக்குநர் மணிமாறன் சாரிடமும் அடிக்கடி சொல்வேன். அவர்களும் வெற்றிமாறனிடம் நிச்சயம் கேட்டுச் சொல்வதாக சொல்வார்கள்.

அப்படியே தொடர்ந்து அவர்களிடம் கேட்டுக்கிட்டே இருந்தேன். அப்போதுதான் ஒரு முறை “வெற்றி சார் உங்களை சீக்கிரம் கூப்பிடுவாரு” என்று இணை இயக்குநர் ஒருவர் என்னிடம் கூறினார். அதனால் அவருடைய அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால், நாட்கள் கடந்து போனதே தவிர, அவரிடமிருந்து அழைப்பு வரவேயில்லை.

கடைசியில் நானே வெற்றிமாறன் சாரைத் தொடர்பு கொண்டேன். அப்போதுதான் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களில் நான் எதிர்பார்த்த வேடங்கள் எதுவும் இல்லை. “இதுல நான் என்ன வேடம் சார் செய்யப் போறேன்?” என்று கேட்டபோது, “நீங்கதான் ஹீரோ” என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அந்த செய்தியை உடனேயே சிவகார்த்திகேயன், என் மனைவி என்று அனைவரிடம் சொல்லி மகிழ்ந்தேன். ஆனால், அதற்குப் பிறகும் வெற்றிமாறன் சாரிடம் இருந்து அழைப்பே வரலை. சுமார் இரண்டாண்டுகள் ஆகியும் அவர் என்னை அழைக்காததால், நானே அவரை சென்று பார்த்தேன். அப்போது என்னிடம் சொன்ன அந்தப் படத்தை கை விட்டு விட்டதாக சொன்னார்.

உடனேயே  வேறொரு கதையை சொல்லி “நாம் இந்தப் படத்தை பண்ணலாம்” என்றார். துபாயை கதைக் களமாக கொண்ட அந்தப் படத்திற்காக போட்டோ ஷூட் எல்லாம் நடத்தினோம். ஆனால், கொரோனா பரவலால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.

பிறகு கடைசியா, இந்த ‘விடுதலை’ படத்தின் கதையைச் சொல்லி “இதை செய்யலாம்” என்றார். அப்படித்தான் இந்த ‘விடுதலை’ படத்தில் நான் நடிக்க தொடங்கினேன்.

இந்தப் படம் முதலில் சாதாரணமாகத்தான் தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி விஜய் சேதுபதி உள்ளே வந்த பிறகு, மிகப் பெரிய படமாக வளர்ந்துவிட்டது. படம் முடிய வருஷ கணக்காயிருச்சு. அதற்குக் காரணம் கதைக் களம்தான்.

படப்பிடிப்பு நடந்தது அடர்ந்த வனப்பகுதி மட்டும் அல்ல மிகவும் ஆபத்தான பகுதியும்கூட. படப்பிடிப்பு தளத்திற்கு போவதற்கே பல மணி நேரமாகும். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று மழை வந்துவிடும். 

அப்படி மழை வருவதுபோல் தெரிந்தாலே அங்கிருந்து கிளம்பி விடுவோம். பிறகு அங்கு ஈரப்பதம் குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு நடத்துவோம். மீண்டும் மழை வந்து படப்பிடிப்பு தடைபடும். இதனால்தான் காலதாமதம் ஆனது.

இந்தப் படத்தில் நடிக்கும்போது முதலில் எனது வழக்கமான பாணியில்தான் நடிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்த வெற்றிமாறன் சார், “நீங்க ‘சூரி’ என்பதையே மறந்துடுங்க. ‘குமரேசன்’ என்ற கதாபாத்திரத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நான் சொல்வதை மட்டும் செய்ங்க…” என்றார். 

அதன்படி இரண்டு நாட்கள் தடுமாறிய பிறகு, வெற்றி சார் சொன்னபடியே ‘சூரி’யை சுத்தமா ஓரம் கட்டி வச்சிட்டு ‘குமரேசனா’ மாறிட்டேன். படம் முழுவதும் முடிவடைந்த பிறகு என்னுடைய நடிப்பை பார்த்து வெற்றி சார் பாராட்டியதோடு, படத்தில் நடித்த கெளதம் மேனன் சாரும், ராஜீவ் மேனன் சாரும் எந்த இடத்திலும் ‘சூரி’ போல் இல்லாமல் புதிய நடிகர் போல் நான் தெரிவதாக பாராட்டினார்கள்.

டப்பிங் பேசும்போதுதான் என்னுடைய போர்ஷனை பார்த்தேன். ஒரு புதிய ‘சூரி’யை பார்த்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நிச்சயமாக சொல்றேன் இந்த ‘விடுதலை’ படத்தில் பழைய ‘சூரி’யை துளிகூட உங்களால் பார்க்க முடியாது.

இந்த ‘விடுதலை’ படத்திற்காக நான் நிறைய படங்களை விட்டுவிட்டேன். “இந்தப் படத்திற்காக எந்த படத்தையும் விட்டுவிடாதீர்கள்” என்று என்னிடம் வெற்றி மாறன் சார் சொன்னார். எதாவது பட வாய்ப்புகள் வந்தால் அவரிடம் சொல்வேன். அவர் உடனே “அதில் நடித்துவிட்டு வாங்க” என்று சொல்லிவிடுவார். அப்படித்தான் ரஜினி சார் படத்தில் நடித்தேன். ஆனால், சில படங்களை பற்றி நான் அவரிடம் சொல்ல மாட்டேன். காரணம், எனக்காக அவர் இந்த படத்தை தள்ளி வைத்துவிடுவாரோ என்ற பயம்தான். மற்றபடி ‘விடுதலை’ படத்திற்காக நானாகத்தான் சில படங்களில் நடிக்காமல் ஒதுங்கினேன்.

விடுதலை’ படத்தில் வெற்றிமாறன் சார் என்னை ஹீரோவாக்கியது ஏன்..?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். என் மனைவிகூட என்னிடம் இதை கேட்டார். என் மனதிலும் அந்த கேள்வி எழுந்தது. அதனால் நானே ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

அப்போது அவர் “உன் உடல் தோற்றம், முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம். இந்த இரண்டுக்காகத்தான் உன்னை இந்தப் படத்தில் ஹீரோவாக்கினேன்” என்று சொன்னார். மேலும், “உடல் தகுதியைகூட உடற் பயிற்சி மூலம் வரவைக்கலாம், ஆனால் அந்த அப்பாவித்தமான முகத்தை எந்த பயிற்சி செய்தும் வர வைக்க முடியாது, அது இயல்பாகவே உனக்கிருக்கு. அதனால்தான் உன்னை தேர்வு செஞ்சேன்”னு வெற்றி சார் சொன்னார்.

எனக்கு ஏற்கனவே ஹீரோவா நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், எல்லாமே காமெடி ஹீரோ கதையா இருந்தது. அதனால்தான் அந்தப் படங்களை நிராகரித்தேன். காமெடி வேடத்தை தாண்டிய ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் வெற்றி மாறன் படத்தில் நடிக்க முயற்சித்தேன்.

அவர் என்னை கதாநாயகனாகவே நடிக்க வைத்தது பெரும் மகிழ்ச்சி. அதற்காக தொடர்ந்து கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். இனிமேல் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன். 

ஆனால், இனிமேல் ஹீரோவா நடிக்கும் படங்களில் வழக்கமான காமெடி வேடத்தில் நடிக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். காமெடியை கடந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு ஏற்றவாறு சில கதைகளும் வந்திருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயனாக நடிக்கிறேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன், அந்தப் படங்களின் விவரங்களை சீக்கிரமா சொல்றேன்” என்றார் நடிகர் சூரி.

மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மாலையில் ’ஸ்நாக்ஸ்’

அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *