உதயசங்கரன் பாடகலிங்கம்
நீட் தேர்வு குறித்த விமர்சனம்!
திரையரங்கு வரை சென்றும், அப்படத்தைக் காண முடியாத நிலைக்குப் பின்னே பல காரணங்கள் இருக்கும். ‘மூவி கேன்சல்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கேட்க வேண்டியிருக்கும். ’அப்படிப் போதிய பார்வையாளர்கள் வராத காரணத்தால் படம் கேன்சல் செய்யப்பட்டது’ என்ற வார்த்தைகளைக் கடந்த ஒருவார காலத்தில் இரண்டு முறை கேட்க வைத்தது ‘அஞ்சாமை’ திரைப்படம்.
’சரி, அந்த அளவுக்குப் படம் மொக்கையாக இருக்கிறதா’ என்று கஷ்டப்பட்டு சென்று ‘அஞ்சாமை’யைப் பார்க்க நேர்ந்தால், நம்மை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருசேர வந்தடைகிறது. இஷ்டப்பட்டு உழைத்த கலைஞர்கள் பலரது கூட்டு முயற்சியாக உருவாகியிருக்கிறது இப்படம்.
‘அஞ்சாமை’ தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டது?
நீட் தேர்வுக்கு எதிரான கதை!
‘அஞ்சாமை’ படமானது இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கிறது. அதேநேரத்தில், கொஞ்சம் கூடப் பிரச்சாரத் தொனியின்றித் திரையில் கதை சொல்லல் நிகழ்கிறது என்பதே இப்படத்தின் சிறப்பு.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சர்கார் (விதார்த்), தனது மகன் அருந்தவத்தை (கிருதிக் மோகன்) ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறார் அருந்தவம். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவர் ஆக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அந்த காலகட்டத்தில், தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான ‘நீட்’ அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்காகச் சிறப்பான பயிற்சிகளைப் பெற வேண்டும் என்று ஒரு கல்வி மையத்தில் மகனைச் சேர்க்கிறார் சர்கார். தனது நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கட்டுகிறார்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் அதற்குத் தயாராவது வரை பல கஷ்டங்களை அந்த குடும்பம் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தேர்வெழுதத் தமிழ்நாட்டுக்குள் ஒரு மையத்தை ஒதுக்காமல், அருந்தவம் போன்று பல மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது.
அந்த வகையில், ஜெய்ப்பூருக்குத் தந்தை அருந்தவத்துடன் தேர்வு எழுதச் செல்கிறார் அருந்தவம். பசி, தூக்கம் தொலைத்து மகன் தேர்வு எழுத வேண்டுமே என்று பல முறை பதற்றத்திற்கு உள்ளான சர்கார், சென்ற இடத்தில் மாரடைப்பினால் மரணமடைகிறார்.
அதையடுத்து, தனது தந்தையின் மரணத்திற்குக் காரணம் அரசுதான் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார் அருந்தவம். பல யோசனைகளுக்குப் பிறகு, அவரது புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார் ஆய்வாளர் மாணிக்கம் (ரஹ்மான்).
அதன்பிறகு, அருந்தவம் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுக்கிறார் மாணிக்கம். அந்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதா? அதன்பிறகு என்னவானது? சர்கார் மரணத்திற்கு நீதி கிடைத்ததா என்று சொல்கிறது இப்படம்.
நீட் தேர்வுக்கு எதிரான படைப்பு என்றபோதும், இப்படத்தில் அந்த வார்த்தை சில இடங்களில் ‘ம்யூட்’ செய்யப்பட்டுள்ளது. ‘நாடு’ உட்படச் சில படங்களில் அத்தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருப்பதற்கும், ‘அஞ்சாமை’யில் அது அமைந்திருக்கும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன் அந்த வகையில் ஒரு விவாதத்தினை நமக்குள் தோற்றுவிக்கிறார். ‘பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேரப் போதுமா’ என்று தேசியத் தகுதித் தேர்வினை ஏந்திப் பிடிப்பவர்களை நோக்கி, ‘தேசிய அளவில் ஒரேமாதிரியான கல்விமுறையும், ஒரே தரத்திலான ஆசிரியர்களையும் கொண்டுசேர்த்த பிறகுதானே அத்தேர்வினைக் கொண்டு வந்திருக்க வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.
கொஞ்சம் கூட பிரச்சார வாடை இல்லாமல், திரையில் விரியும் கதையில் கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் அதனைச் செய்திருக்கிறது ‘அஞ்சாமை’. அதனாலேயே, இதில் இருக்கக் கூடிய லாஜிக் சார்ந்த மீறல்களையும் இன்னபிற குறைகளையும் ஒரு ரசிகரால் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியும்.
அபார உழைப்பு!
உழைத்துக் களைத்த தோற்றத்தினை மட்டுமல்லாமல், உடல் சோர்வினால் அயர்வுற்று இருப்பதையும் மிகச்சீரிய முறையில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விதார்த்.
அவர் மட்டுமல்லாமல் வாணி போஜன், ரஹ்மான், அருந்தவம் ஆக நடித்துள்ள கிருதிக் மோகன் அனைவருமே திரையில் வெறுமனே பாத்திரங்களாகத் தென்படுகின்றனர். கிருதிக் மோகன் சில காட்சிகளில் திரையை ஆக்கிரமிக்க, அப்படிப்பட்ட மெனக்கெடல்கள் இல்லாமல் நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார் அவரது தங்கையாக வரும் ரேகா சிவன்.
நீதிபதி சுந்தரம் ஆகத் தோன்றியிருக்கும் பாலச்சந்திரன், நிஜமாகவே அப்படியொருவரை நேரில் பார்க்கும் உணர்வை உருவாக்கியிருக்கிறார். கேபிஒய் ராமர், சஞ்சனா, ரேகா நாயர் உட்படப் பலர் இதில் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக், படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன், கலை இயக்குனர் ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பாளர் சிவபாலன், ஒலி வடிவமைப்பாளர் டி.உதயகுமார் என்று பலரது பங்களிப்பு ஒன்றுசேர்ந்து, இப்படத்தின் காட்சியாக்கத்தில் நேர்த்தியைப் பெருக்கியிருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படத்தைக் காணும்போது திரையில் எவ்வாறு நாடகத்தனம் நம் கண்களுக்குத் தென்படாதோ, அதேவிதமான காட்சியாக்கத்தை ‘அஞ்சாமை’யில் காண முடியும். நிச்சயமாக, அது ஒரு பெருஞ்சிறப்பு.
ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள பாடல்கள் ஓகே ரகத்தில் இருக்கின்றன. பின்னணி இசை அமைத்துள்ள கலாசரண் காட்சிகளுக்குப் பொருத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ள இப்படத்தினை எஸ்.பி.சுப்புராமன் இயக்கியிருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதனைக் கொஞ்சமும் நினைவூட்டாமல் மிகச்செறிவான உள்ளடக்கம் வெளிப்படும் வகையில் ‘அஞ்சாமை’யைத் தந்திருக்கிறார்.
’நீட் தேர்வு தேவையில்லை’ என்று இப்படத்தில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில், ஏற்கனவே இருந்த கல்விமுறை மூலமாகச் சிறப்புமிக்க மருத்துவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்களே என்று கேள்வி எழுப்புகிறது இப்படம். கூடவே, சமமான கல்விமுறையைச் செயல்படுத்தாமல் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைப்பது நியாயமா என்றும் கேட்கிறது.
’அஞ்சாமை’ முன்வைக்கும் விமர்சனங்கள் சரியா, தவறா என்பதனை நிச்சயம் ரசிகர்கள் தீர்மானிப்பார்கள். திரையரங்குகளில் பெரிதாகக் கவன ஈர்ப்பை நிகழ்த்தாத இந்த திரைப்படம், நிச்சயமாக ஓடிடி வெளியீட்டில் அதனை நிகழ்த்தக்கூடும்.
யதார்த்தமும் சினிமாத்தனமும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள ‘அஞ்சாமை’யின் உள்ளடக்கம் ஏதேனும் ஒரு வகையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். நிச்சயமாக, அந்த தகுதி இப்படத்திற்கு இருக்கிறது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆக்கிரமிப்பு… ஆக்ஷனில் இறங்கிய ஆணையர்!
2 இந்திய வீரர்களை வீட்டிற்கு கிளம்ப சொன்ன பிசிசிஐ!
2024 குரோதி வருட ஆனிமாத (15.6.2024-16.7.2024) நட்சத்திர பலன்கள்-மூலம் முதல் ரேவதி வரை
2024 குரோதி வருட ஆனிமாத (15.6.2024-16.7.2024) நட்சத்திர பலன்கள்! மகம் முதல் கேட்டை வரை!
2024 குரோதி வருட ஆனிமாத (15.6.2024-16.7.2024) நட்சத்திர பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை