சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும்!
இந்தியில் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், அக்ஷய் குமார் காலத்தைத் தாண்டி அடுத்த தலைமுறை கோலோச்சும் காலம் இது. ரன்பீர் கபூர், ஆதித்யராய் கபூர், வருண் தவான், டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் போன்ற வாரிசு நடிகர்களுக்கு நடுவே ரன்வீர் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குரானா, தில்ஜித் தோசன்ஜ், விக்கி கௌஷல், கார்த்திக் ஆர்யன் போன்றவர்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படங்களைத் தந்து வருகின்றனர்.
அவர்களில் வித்தியாசமான நடிகராக, சிறப்பான கமர்ஷியல் படங்களைத் தருகிற நட்சத்திரமாக விளங்குகிறார் ராஜ்குமார் ராவ். சமீபத்தில் இவர் நடித்த ‘ஸ்திரீ 2’ இந்தியாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறது.
இந்த நிலையில், ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்த ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ’ட்ரீம் கேர்ள்’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் தந்த ராஜ் சாண்டில்யா இதனை எழுதி இயக்கியிருக்கிறார். ‘அனிமல்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற ட்ரிப்தி டிம்ரி இதில் நாயகியாக நடித்திருக்கிறார்.
சரி, இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
நகைச்சுவைப் படம்!
’விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’ என்ற டைட்டிலை கேட்டவுடன், இந்தி தெரியாதவர்களும் கூட ‘இது ஒரு வீடியோ கிளிப் சம்பந்தப்பட்ட படம்’ என்று சொல்லிவிடுவார்கள்.
’voyeurism’ என்ற வார்த்தையானது இன்னொருவரின் அல்லது சில நபர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பது என்று அர்த்தப்படுத்துகிறது. அப்படி அந்தரங்கமாகப் படம்பிடிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் பொதுவெளியில் கசிகிறபோது ‘வைரல்’ ஆகின்றன.
குறிப்பிட்ட ஊர் பெயரோடு காதலர்கள், தம்பதிகள், மாணவர்கள், ஒன்றாகப் பணியாற்றுபவர்கள் அல்லது குறிப்பிட்ட பணியிடத்தைச் சேர்ந்தவர்கள் என்ற டைட்டிலோடு வெளியாகும் வீடியோக்கள் பல இணையதளங்களில் பிரதியெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் மனதையும் உயிரையும் குலைக்கிற ‘கண்ணிவெடி’களாக இருக்கின்றன.
இந்தப் படம் அப்படிப்பட்ட பிரச்சனையை ‘சீரியசாக’ பேசவில்லை. ஆனால், அப்படியொரு பிரச்சனைக்குள் சிக்கிக் கொண்டவர்களின் மனநிலையைக் காட்டுகிறது.
விக்கியும் (ராஜ்குமார் ராவ்) வித்யாவும் (ட்ரிப்தி டிம்ரி) புதிதாகத் திருமணமானவர்கள். மணப்பெண்ணுக்கு மெஹந்தி இடும் பணியினைச் செய்து வருகிறார் விக்கி. மருத்துவராக இருக்கிறார் வித்யா.
காதலர்களாக இருந்து திருமணம் செய்துகொண்ட காரணத்தால், இருவருக்கும் இடையிலான பந்தம் இறுக்கமானதாக உள்ளது.
வித்யாவின் பெற்றோர் வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்வதற்கான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, அவர்களிடம் ‘சரி’ என்று தம்பதிகள் இருவரும் சொல்கின்றனர். ஆனால், அங்கு செல்லாமல் ‘தேனிலவு’ கொண்டாட கோவாவுக்குப் பறக்கின்றனர்.
ஹோட்டல் அறையில், ‘நமது முதலிரவை கேமிராவில் படம்பிடித்தால் என்ன’ என்று கேட்கிறார் விக்கி. முதலில் கோபப்பட்டாலும், ‘அது நமது அன்னியோன்யத்தை இனிவரும் நாட்களில் அதிகப்படுத்த உதவும்’ என்று அவர் சொல்வதை ஏற்கிறார் வித்யா. அந்த வீடியோவை கண்டதும் சச்சரவுகளை மறந்து காதல் பெருகும் என்ற விக்கியின் வார்த்தைகளுக்குத் தன்னை ஒப்படைக்கிறார். அந்த வீடியோவும் பதிவாகிறது.
அதனை ஒரு சிடியில் பிரதியெடுத்து, தனது வீட்டிலுள்ள சிடி பிளேயர் அருகே வைக்கிறார் விக்கி. தேனிலவில் இருந்து திரும்பிய தினம், அதனை இருவரும் காண்கின்றனர். அப்போது, விக்கியின் தாத்தா அங்கு வந்துவிடுகிறார். அவர் பார்த்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பில், சிடி பிளேயரின் ‘ஸ்விட்சை’ ஆஃப் செய்கிறார் விக்கி.
அடுத்த நாள் காலையில் பொழுது விடிகிறது. வீட்டில் இருக்கும் சில பொருட்கள் காணாமல் போனதைக் கண்டு, ‘திருடன்.. திருடன்..’ என்று கத்துகிறார் தாத்தா. அதனைக் கேட்டதும், ஓடிச் சென்று அவரைச் சமாதானப்படுத்துகிறார் விக்கி.
’முக்கியமான பொருட்கள் எல்லாவற்றையும் திருடிவிட்டான் திருடன்’ என்று கூறிவிட்டு, தனது குடும்பத்தின் பரம்பரை வாள் பறிபோனதாகக் கதறுகிறார் தாத்தா. அப்போதுதான், அறையில் இருந்த சிடி பிளேயர் நினைவு விக்கிக்கு வருகிறது.
ஓடிச் சென்று, அறைக்குள் நுழைகிறார் விக்கி. அங்கு, சிடி பிளேயர் இருந்த இடம் காலியாக இருக்கிறது. அதனைக் கண்டு அதிர்கிறார்.
சிடி திருடுபோன விஷயம் வித்யாவுக்குத் தெரிந்ததா? அது யார் வசம் இருக்கிறது? அது தொடர்பாக வித்யா, விக்கி தம்பதி மிரட்டலை எதிர்கொண்டதா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
சீரியசான விஷயத்தைக் கொண்டு கதை அமைத்திருந்தாலும், முழுமையானதொரு நகைச்சுவைப் படமாக இதனைத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜ் சாண்டில்யா. அதனால், கதைக்கருவின் தீவிரம் புரியாமல் சிரிப்பதிலேயே நமது கவனம் செல்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிவதற்கு முன்பாக ரிஷிகேஷில் இந்தக் கதை நடப்பதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ப, 1997இல் இக்கதை நிகழ்வதாகக் கூறியிருக்கிறார்.
அந்தச் சித்தரிப்பே, முழுப்படமும் அந்த காலகட்டத்தில் வெளியானது போன்ற தோற்றத்தைப் பூசிக்கொள்ளக் காரணமாகிறது. அதுவே இப்படத்தின் முக்கியச் சிறப்பு.
ட்ரிப்தியின் நடிப்பு!
நாயகனாக வரும் ராஜ்குமார் ராவ், சின்னச் சின்ன அசைவுகளின் மூலமாகச் சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்தவராக இருக்கிறார். சிடி காணாமல்போன பிறகு, அவர் கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் அனைத்திலும் சிடியின் உருவத்தைக் காண்பதாகக் காட்டப்படும் காட்சியில் அவரது உடல்மொழி அபாரம்.
காதலியாக, மனைவியாக, ஒரு சராசரிப் பெண்ணாக இதில் நம் கண்களுக்குத் தென்படுகிறார் ட்ரிப்தி டிம்ரி. ஒரு பாடலில், போட்டோஷுட்டில் தோன்றுவதற்கும், ஒரு படத்தின் காட்சியில் நடிப்பதற்குமான வித்தியாசத்தை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
’காக்கி சட்டை’, இந்தி ‘ரன்’ உள்ளிட்ட படங்களின் வழியாக நமக்கு அறிமுகமானவர் விஜய் ராஸ். காமெடி படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் கொடூர வில்லனாகவும் நடிக்கத் தெரிந்தவர். இப்படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கிறார்.
அதிலும், மல்லிகா ஷெராவத்தை கண்டவுடன் பழைய இந்திப் பட பாடல்கள் அவரது பின்னணியில் ஒலிக்கிற காட்சியமைப்பில் ‘வெடிச்சிரிப்பை’ வரவழைக்கிறார்.
வெறுமனே ‘கவர்ச்சிப் பதுமை’யாகத் தோன்றாமல், கொஞ்சமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.
’போக்கிரி’யில் இன்ஸ்பெக்டராக வந்த முகேஷ் திவாரி இதில் வில்லனாக வருகிறார். இன்னும் அர்ச்சனா புரன் சிங், மஸ்த் அலி, அஸ்வினி கல்சேகர் உட்படப் பலர் இதில் உண்டு.
தியேட்டரில் காணும் திரைப்படங்களில் ‘லொள்ளு சபா’ பாணியில் ‘ஸ்பூஃப்’ நகைச்சுவையைக் காண்பது சில நேரங்களில் போரடிக்கும். ஆனால், இதில் அதனைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
நடிகர் சுனில் ஷெட்டியின் மேனரிசங்களை கிண்டலடித்து இரு பாத்திரங்களை அவர் திரையில் காட்டியிருக்கும் விதம் அதற்கொரு உதாரணம். இது போக சஞ்சய் தத் – பூஜா பட் ஜோடியைக் கிண்டலடித்து ஒரு பாடலையும் காட்டியிருக்கிறார். அதற்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
மேற்சொன்னதைப் படித்ததும், இந்திப்படங்கள் பல பார்த்தவர்களுக்குத்தான் இந்தப் படம் பிடிக்கும் என்றெண்ண வேண்டாம். இதில் வரும் சில நகைச்சுவைக் காட்சிகள் அந்த எண்ணத்தைச் சுக்குநூறாக்குகின்றன.
‘ஸ்திரீ 2’வை ‘ஸ்ஃபூப்’ செய்து மயானமொன்றில் நடப்பதாகக் காட்டப்படும் காட்சியில் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது இப்படம்.
இயக்குனர் ராஜ் சாண்டில்யா இப்படத்தின் கதையை யூசுஃப் அலி கான் உடன் இணைந்து எழுதியுள்ளார். இஷ்ரத் ஆர்.கான், ராஜன் அகர்வால் உடன் இணைந்து இந்த இணை திரைக்கதையை ஆக்கியிருக்கிறது.
ஒரு நகைச்சுவைப் படத்தை உருவாக்குவதில் பலரது பங்களிப்பு தேவை என்பதையே இது உணர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் அசீம் மிஸ்ராவின் கேமிரா பார்வை, சினிமாத்தனம் மிக்க ஒரு நகைச்சுவைப் படம் பார்த்த உணர்வை உருவாக்குகிறது.
27 ஆண்டுகளுக்கு முந்தைய ஊர் மணத்தைக் காட்டுவதில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்ட ரஜத் பொடார் – பரிஜத் பொடார் இணை முக்கியப் பங்காற்றி இருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரகாஷ் சந்திர சாஹு, ரொம்பவே நேர்த்தியாகத் திரையில் கதை சொல்ல உதவியாக இருந்திருக்கிறார்.
ஹித்தேஷ் சோனிக்கின் பின்னணி இசையே, காட்சியில் அடுத்தடுத்து சிரிப்பதற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்தும் பணியைச் செய்துவிடுகிறது.
சச்சின் ஜிகர் இணை மற்றும் வொயிட் நாய்ஸ் கலெக்டிவ்ஸ் இதன் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றனர். அவர்களது பங்களிப்பில் பெரும்பாலான பாடல்கள் துள்ளலை விதைக்கின்றன. இரண்டொரு பாடல்கள் ‘மெலடியாக’ நம்மை வருடுகின்றன.
பிரச்சார நெடி கிடையாது!
நகைச்சுவைப் படங்களுக்கு என்று ஒரு வலிமை உண்டு. அவை எளிதில் ரசிகர்களை ஈர்க்கும். கதையில் சொல்ல வந்த விஷயத்தைக் கடத்திவிடும்.
அந்த வகையில், யாரோ சிலரது அந்தரங்கத்தை ரசிப்பது தவறு என்று பாடம் எடுக்கிறது இந்த ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’. அதனைப் பிரச்சார நெடி இல்லாமல், பாதிக்கப்பட்டோரின் வலியையும் வேதனையையும் நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கிறது இப்படம்.
லாஜிக் சார்ந்து இக்கதையில் குறைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஆனால், தியேட்டரில் நம்மைச் சிரிக்க வைக்கிற காரணத்தால் அத்திசை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை உருவாகவே இல்லை.
இதே கதையை ‘சீரியசாக’ அணுகியிருந்தால், இப்போது இதனை ரசிப்பவர்களில் பத்தில் ஒரு பங்கு பேர் தியேட்டருக்கு வருவதே அபூர்வம் என்றாகியிருக்கும். காரணம், அதனை அணுகுவதில் நமக்கிருக்கும் மனச்சிக்கல்.
‘அந்த நிலையில் நாம் இருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது’ என்கிற மனப்பாங்கு.
அதேநேரத்தில், ரகசியமாக அப்படிப்பட்ட வீடியோ பதிவுகளைப் பார்க்க விரும்புகிற மனநிலை. இரண்டையும் ஒருசேரக் கேள்விக்குட்படுத்திய வகையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது இந்தப் படம். அது தேவையா என்று சிந்திக்கவும் வைக்கிறது.
கசப்பு மருந்தை இனிப்பில் தோய்த்து தர வேண்டும் என்பது குழந்தைகளுக்குச் சிகிச்சை தருகிற மருத்துவரின் சாமர்த்தியம். இந்தப் படத்தில் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ராஜ் சாண்டில்யா. அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பது அவரவர் விருப்பங்களைப் பொறுத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… அரசின் நடவடிக்கைகள் என்ன?: உதயநிதி விளக்கம்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் முறைகேடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!