ட்ரிப்தி டிம்ரி நாயகியாக நடித்துள்ள படம்!
இந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராகத் திகழ்பவர் விக்கி கௌஷல். இவரது தந்தை ஷாம் கௌஷல் ஒரு சண்டைப்பயிற்சி இயக்குனர். தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றியவர். ’மசான்’, ‘மன்மர்ஸியான்’, ‘யுரி’, ’சாம் பகதூர்’, ‘டன்கி’ படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற விக்கி கௌஷல், தற்போது ‘பேட் நியூஸ்’ படத்தில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார்.
இதில் நாயகியாக நடித்திருப்பவர் டிரிப்தி டிம்ரி. ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் மீது ஒருதலைக்காதல் கொள்பவராக நடித்தவர் இவரே. ’ட்ரிப்தி சோலோ ஹீரோயினாக நடித்த படம் எது’ என்று ரசிகர்கள் இணையத்தில் தேடிய நிலையில், அதற்கான பதிலாக அமைந்திருக்கிறது ‘பேட் நியூஸ்’. இந்தப் படத்தில் அவரது பாத்திரமே பிரதானம். இதில் இன்னொரு நாயகனாக அம்மி விர்க் நடித்திருக்கிறார். இவர் பஞ்சாபி திரையுலகில் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் விளங்குபவர்.
இப்படி இளைய தலைமுறையினர் மத்தியில் புகழ் பெற்றிருக்கும் மூன்று பிரபலங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பேட் நியூஸ்’ஸை தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோகர் தயாரித்துள்ளார்; இந்தப் படத்தினை ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார்.
இரண்டு நாயகர்கள், ஒரு நாயகி என்றவுடன், ‘இதுவும் வழக்கமானதொரு காதல் கதை தானே’ என உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு இப்படத்தின் திரைக்கதை என்ன பதில் சொல்கிறது?
அரிதான வகை கர்ப்பம்!
டெல்லியில் ஒரு ஹோட்டலில் செஃப் ஆக இருக்கும் சலோனி பாகாவை (ட்ரிப்தி டிம்ரி) நேரில் சந்திக்கிறார் நடிகை அனன்யா பாண்டே. ‘உங்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாராகும் படத்தில் நானே நாயகியாக நடிக்கிறேன்’ என்று அவரிடத்தில் சொல்கிறார். அதனைக் கேட்டு ஆச்சர்யம் கொள்ளும் சலோனி, அனன்யா தன்னைத் தேடி வந்ததற்கான காரணம் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார்.
உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் முதன்முறையாக அகில் சத்தாவை (விக்கி கௌஷல்) பார்க்கிறார் சலோனி. பார்த்த முதல் நொடியிலேயே, அவர் மீது காதல் கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
’மெரகி செஃப்’ எனப்படும் விருதினைப் பெறுவதே சலோனியின் லட்சியம். அதற்காகவே, குறிப்பிட்ட ஹோட்டலில் அவர் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அகில் காட்டும் அதிகப்படியான ‘பொசஸிவ்னெஸ்’ அவருக்குப் பலவகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதுவும் போதாதென்று, அகில் தனது தாய் (ஷீபா சத்தா) மீது காட்டும் அளவு கடந்த பாசம் சலோனியை எரிச்சல்படுத்துகிறது.
ஒருநாள் அகிலின் அதிகப்பிரசங்கித்தனத்தால் அவரது வேலை பறிபோகிறது. அதையடுத்து, அகில் உடனும் அவரது தாய் உடனும் சண்டையிடுகிறார். பிறகு தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறார்.
மணமக்களைச் சமரசம் செய்ய இரு குடும்பத்தினரும் முயற்சி செய்கின்றனர். ஆனால், சலோனியோ ‘எனக்கு டைவர்ஸ் வேண்டும்’ என்கிறார். அதனைக் கேட்டு ஆத்திரம் கொள்ளும் அகில், உடனே அதற்குச் சம்மதிக்கிறார்.
அதையடுத்து, முசோரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பணியாற்றச் செல்கிறார் சலோனி. அங்கு, அதன் உரிமையாளர் குர்பீர் பன்னுவை (அம்மி விர்க்) சந்திக்கிறார்.
எல்லா விஷயங்களிலும் அகிலுக்கு நேரெதிராக இருப்பவர் குர்பீர் பன்னு. அதுவே, அவர் மீது சலோனிக்கு ஈர்ப்பை உண்டுபண்ணுகிறது.
விவாகரத்துக்கு விண்ணப்பித்தபிறகு அகில் வேறு சில பெண்களுடன் ஊர் சுற்றுவதாக அறிகிறார் சலோனி. மொபைலில் அந்த தகவலைக் கேட்டறிந்த கணத்தில், அவர் கண் முன்னே குர்பீர் பன்னு தென்படுகிறார். அடுத்த நொடியே, அவர் மீது வேட்கை கொள்கிறார். அதனை அதிகப்படுத்தும் வேலையை, அவர் உண்ட மதுவே செய்துவிடுகிறது.
குர்பீரை அவரது அறைக்கு அழைத்துச் செல்கிறார் சலோனி. அவரது எண்ணம் என்னவென்று அறிந்ததும், அதற்கு குர்பீர் மறுப்பு தெரிவிக்கிறார். ’எதிலும் வேகம்’ என்ற நிலைப்பாடு தனக்கு ஒத்துவராது என்கிறார். ஆனாலும், நிலைமை கைமீறிப் போகிறது.
குர்பீர் பன்னுவின் அறையில் இருந்து வெளிவரும் சலோனி, நேராகத் தனது அறைக்குச் செல்கிறார். அதற்கடுத்த நாள் தனது பிறந்தநாள் என்பது அவரது நினைவில் இல்லை. ஆனால், அறையைத் திறந்தவுடன் கையில் பூங்கொத்துடன் நிற்கும் அகில், அதனை நினைவூட்டுகிறார்.
பூட்டியிருக்கும் அறைக்குள் அகில் நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடையும் சலோனி, ஒருவாறாகத் தனது நிலைமையை உணர்ந்து ‘ஏன் இங்க வந்த’ என்று கேட்கிறார். அப்போது, ‘எத்தனை பெண்களைக் கண்டாலும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை’ என்கிறார் அகில். அவ்வளவுதான். அந்த நொடியில் தன்னிலை மறக்கிறார் சலோனி. அன்றிரவு, மீண்டும் அவர்களுக்கு முதலிரவாக மாறுகிறது.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஆண்கள் உடன் சலோனி படுக்கையைப் பகிர்ந்ததற்கான எதிர்வினை சில வாரங்கள் கழித்து தெரிய வருகிறது. சலோனி தான் கர்ப்பமுற்றதை அறிகிறார். மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றபிறகு, இரட்டைகருக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிந்துகொள்கிறார். ஆனால், அந்த குழந்தைகளுக்கு யார் தகப்பன் என்பதை அவரால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.
மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில் ‘அகிலின் விந்தணுவால் ஒரு குழந்தையையும், குர்பீரின் விந்தணுவால் ஒரு குழந்தையையும்’ சலோனி சுமப்பது தெரிய வருகிறது.
அதாகப்பட்டது, ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களின் கருவைச் சுமக்கிறார் ஒரு பெண். அறிவியலில் இது ஒரு அதிசய நிகழ்வு.
வெளியுலகுக்குத் தெரியாமல், தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் அந்தக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குச் சம்பந்தப்பட்ட மூவருமே ஆளாகின்றனர்.
மூவராலும் அதனைச் செயல்படுத்த முடிந்ததா என்பதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.
ஒரு பெண் இரண்டு ஆண்களோடு உறவு கொண்டு, அவர்களது கருவை ஒரேநேரத்தில் சுமக்கிறார் என்பதுவே இந்தக் கதையின் யுஎஸ்பி. அதனை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு, ‘பேட் நியூஸ்’ திரைப்படம் படுபயங்கரமான அபத்தமாகத் தென்படும். சிலர் அருவெருப்பானதாகவும் கருதலாம்.
சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!
இஷிதா மொயித்ரா, தருண் துடேஜா இருவரும் ‘பேட் நியூஸ்’ எழுத்தாக்கத்தினைக் கையாண்டுள்ளனர். மருத்துவ உலகில் நிகழும் வினோதமான ஒரு நிகழ்வைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி ஒரு கதையைப் பின்னியிருக்கின்றனர். ஆனால், அதற்கான திரைக்கதையை மட்டும் ரொம்பவே வழக்கமானதாக யோசித்திருக்கின்றனர். அதுவே இப்படத்தின் பலவீனம்.
அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட கதையைத் திரையில் சொல்வதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறது இப்படக்குழு. இயக்குனர் ஆனந்த் திவாரி அந்த விஷயத்தை மிகத்தெளிவாகச் செயல்படுத்தியிருக்கிறார்.
தேபோஜித் ரேயின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகுறப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சிகளில் அழகு மிளிர்வதைப் போல, இதர காட்சிகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
ஷான் முகம்மது இதில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். முதன்மை பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் மனினி மிஸ்ரா, ஒவ்வொரு பிரேமும் ‘ரிச்’சாக திரையில் தெரிய வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட்டிருக்கிறார்.
ரோசக் கோஹ்லி, விஷால் மிஸ்ரா, பிரேம் -ஹர்தீப், கரண் அவுஜ்லா, அபிஜித் ஸ்ரீவஸ்தவா, லிஜோ ஜார்ஜ் – டிஜே சேடாஸ் இப்படத்தில் பாடல்களைத் தந்துள்ளனர். நகைச்சுவை, பரபரப்பு, காதல் வேட்கையைச் சொல்லும் காட்சிகளைத் தனது பின்னணி இசையால் தாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் அமர் மொஹிலே.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செம்மையாக நிகழ்ந்திருப்பதால், இப்படத்தின் காட்சியாக்கம் நம்மைத் திரையுடன் பிணைப்பதாக உள்ளது.
அதேநேரத்தில், சாதாரண ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற ஒரு ‘ஒருவரிக் கதையை’ எடுத்துக்கொண்டு, மிக ‘கூலாக’ படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் திவாரி. அவரது அந்த தைரியம், திரைக்கதையைச் சில இடங்களில் தாங்கிப் பிடித்திருக்கிறது. சில இடங்களில் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அதையும் மீறி, ‘க்ளிஷே’வான பல காட்சிகளுடன் துணையோடு ‘ஒருமுறை பார்க்கலாம்.. சிரிக்கலாம்..’ என்ற எண்ணத்தைத் தூண்டும் வகையில் இப்படம் நகர்கிறது. அதற்கு நாயகர்களாக நடித்த விக்கி கௌஷலும் அம்மி விர்க்கும் காரணமாக விளங்குகின்றனர்.
துள்ளலும் உற்சாகமும் கொப்பளிக்கிற இளைஞராக, இதில் தோன்றியிருக்கிறார் விக்கி கௌஷல். பெரிதாகப் படிப்பறிவு இல்லாத, அதேநேரத்தில் பந்தாவுடன் திரிகிற மனிதராக, அவர் அசத்தியிருக்கிறார்.
ட்ரிப்தி டிம்ரியை ரசிப்பதற்காகவே படம் பார்க்க வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பிப் போகக் கூடாது என்று இதில் சில காட்சிகளைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் திவாரி. அதற்குத் திரையரங்குகளில் நல்ல பலனைக் காண முடிகிறது. அதேநேரத்தில், முக்கியமான தருணங்களில் ட்ரிப்தியின் முழியும் நடிப்பும் நம்மை முழுகையாக ஈர்க்கும் வகையில் இல்லை.
அம்மி விர்க் இதில் இன்னொரு நாயகனாகத் தோன்றினாலும், அவருக்கான முக்கியத்துவம் இதில் அதிகம்.
‘டி20 கிரிக்கெட்டை விட எனக்கு டெஸ்ட் ஆட்டம் தான் பிடிக்கும்’ என்று அவர் பேசும் காட்சியொன்றில் தியேட்டரே சிரிப்பலைகளால் நிரம்புகிறது.
இவர்களோடு நாயகியின் உறவினராக நேகா தூபியா, ஷீபா சத்தா, பைசல் ரஷீத், குனீத் சிங் சோதி, நேகா சர்மா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
2019இல் வெளியான ‘குட் நியூஸ்’ படத்தில் செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், இரண்டு பெண்கள் வேறொரு ஆணின் கருவைச் சுமப்பதைச் சொன்னது. அதில் கரு மாற்றத்திற்கு ஆளான பெண்களின் கணவன்மார்கள் தமது மனைவிக்கு முக்கியத்துவம் தருவதா, கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கியத்துவம் தருவதா என்று குழம்புவது காமெடியாக சொல்லப்பட்டிருக்கும்.
’பேட் நியூஸ்’ படமோ, ஒரு படி மேலேறிச் சென்று ஒரு பெண் இரண்டு ஆண்களோடு உறவு கொண்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பதைப் பேசுகிறது. இந்தப் படத்தில் அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண்களில் எவர் மீது காதல் அதிகம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
அதேநேரத்தில், கதையின் ஆதார மையத்தைத் திரைக்கதையில் விளக்குவதில் சுணக்கம் ஏதும் இல்லை. இப்படிச் சில ப்ளஸ், மைனஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும் ‘பேட் நியூஸ்’ திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இது வெற்றிப்படம் ஆகக்கூடும்!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? போட்டுடைத்த நத்தம், வேலுமணி
அங்கேயும் ஃபேக் ஐடியா? : அப்டேட் குமாரு
2026 தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு!