சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க இன்று(அக்டோபர் 3) மறுத்துள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் போன்றோர் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
அதில் ரஜினிகாந்த் ரவுடிகளை ‘என்கவுன்ட்டர்’ செய்யும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் அது தொடர்பான வசனங்களை நீக்க அல்லது முடக்க வேண்டும். அதுவரை படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த பழனிவேலு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு, இந்த மனு சம்பந்தமாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் ‘வேட்டையன்’ படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இவ்வழக்கை ஒத்திவைத்தது.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிற ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்குச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நடிகை சமந்தா குறித்து ஆந்திர அமைச்சர் பேசியது என்ன? கொந்தளிக்கும் திரையுலகம்
மகாவிஷ்ணுவிற்கு ஜாமீன் வழங்கிய முதன்மை நீதிமன்றம்!
ரஜினி படம் முதன் முதலாக ஒரு நாட்டில் வெளியாகிறது… எந்த நாடு தெரியுமா?