நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக வெற்றிமாறன் சிறப்புக் காணொளி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் இந்த மாதம் 23ம் தேதி வர இருக்கிறது. இதனை ஒட்டி இயக்குநர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்திலிருந்து சிறப்புக் காணொளி ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படம் முடிந்ததும் அடுத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது. இந்த இரண்டு படங்களை முடித்த பின்னரே வெற்றிமாறன் – சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த படத்தில் மாடு பிடி வீரராக நடிக்கும் சூர்யா இதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு மாடுகளை தன் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். மேலும் அதனுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, ஈசிஆர் பகுதியில் ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. மதுரை ஜல்லிக்கட்டு தளம் போன்று களம் அமைத்து நடிகர் சூர்யா, சூரி உள்ளிட்டோர் பங்கு கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த மேக்கிங் வீடியோவில் இருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகளைத் தான் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் நடிகர் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலா மற்றும் சிவா படங்களை முடித்து விட்டு சூர்யா, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஆதிரா