பா.ரா. தலைப்பை, ‘கவர்ந்த’ வெற்றிமாறன்?

சினிமா

தமிழ் சினிமாவில் கதை திருட்டு, படத்திற்கு தலைப்பு வைப்பதில் பஞ்சாயத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் எழுத்தாளர்களிடம் கதைகளின் உரிமை வாங்கி திரைப்படங்களை இயக்கிவருகிறார். சினிமாவில் இயக்குநராக ஆசைப்படுபவர்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை தொடர வேண்டும் என்றும் கூறி வருபவர்.

இயக்குநர் அமீர் நடிக்க அவர் இயக்கும் வலைத்தள தொடருக்கு ‘நிலமெல்லாம் ரத்தம்’ என பெயர் வைத்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை, அது தொடர்பான இடைவிடாத யுத்தத்தை பற்றி எழுத்தாளர் பா.ராகவன் வாரமிருமுறை வரும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் தொடராக எழுதி, பின்னர் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

Vetrimaran film title in controversy

யுத்தம் சம்பந்தமாக தமிழில் வெளிவந்திருக்கும் புத்தகங்களில் முக்கியமான புத்தகம் ‘நிலமெல்லாம் ரத்தம்’.

அதுசம்பந்தமாக பா.ராகவன் தனது முகநூல் பக்கத்தில், “இயக்குநர் வெற்றிமாறன், ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் அல்லது படம் தயாரிப்பதாகவும் இயக்குநர் அமீர் அதில் நடிப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. 

நெடு நாள்களுக்கு முன்னரே இச்செய்தி வந்திருக்க வேண்டும். நான் கவனிக்கவில்லை. நேற்று தற்செயலாக கண்ணன் பிரபு என்ற வாசக நண்பர் இதனைச் சுட்டிக்காட்டி, உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பதில் சொன்னேன். ஃபேஸ்புக்கில் இதனை ஒரு குறிப்பாக எழுதி வைத்தேன்.

இன்று புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்திருந்தது. பிறகு அதே எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்தது. தன் பெயர் பாலா என்றும் இயக்குநர் வெற்றிமாறனின் அசோசியேட் என்றும் சொல்லி, பேச வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அழைத்தேன்.

‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வந்திருப்பதே தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார். தாங்களே யோசித்து உருவாக்கிய தலைப்பு அது என்றார்.

Vetrimaran film title in controversy

இட்லி, தோசை என்கிற பொதுவான பெயர்களை யார் வேண்டுமானாலும் ‘யோசித்து’ வைக்கலாம். ‘நிலமெல்லாம் ரத்தம்‘ என்பதை அப்படிச் செய்ய முடியுமா?

இருப்பினும் பிரபல இயக்குநர். பெரிய படிப்பாளி என்பார்கள். ஆனால் சினிமாக்காரர்களுடன் மல்லுக்கட்டி எழுத்தாளன் வென்றதாகச் சரித்திரம் இல்லாத தேசம் இது. இருதுறை காப்பிரைட் மற்றும் ஒழுக்க நடைமுறைகளும் வேறு வேறு.

நல்லது, இதனை என் பதிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் ராம்ஜி நரசிம்மன் அவர்களுடன் பேசியபோது என்னிடம் சொன்னதையேதான் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியொரு புத்தகம் வந்திருப்பதே தங்களுக்குத் தெரியாது.

2004ம் ஆண்டு யாசிர் அர்ஃபாத் காலமான தருணத்தில் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக அதனை எழுத ஆரம்பித்தேன். ஓராண்டுக் காலம் அது வெளிவந்தது.

வெளியானபோதே பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் பாராட்டுகளை வாரம்தோறும் பெற்றது. பிறகு புத்தகமானது. முதல் பதிப்பு கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்தது (2007). அநேகமாக ஆண்டுதோறும் ஒரு பதிப்பு அதற்கு வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம், எழுத்து பிரசுரம் வெளியீடாக இன்றுவரை விற்றுக்கொண்டிருக்கும் புத்தகம். அச்சுப் பிரதியாக மட்டுமல்லாமல் அமேசான் கிண்டில் மின்நூலாகவும் ஸ்டோரிடெல் ஆப்பில் ஒலி நூலாகவும் கிடைக்கிறது.

தீவிரமான வாசகர் என்று திரையுலகமே கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறனின் கண்களில் அது இன்றுவரை படாமல் போனது துயரம்தான். கூகுளில் எத்தனை விதமாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து அந்தப் பெயரை அடித்தாலும் குறைந்தது பத்து பக்கங்களுக்கு என் புத்தக விவரங்கள் வந்து விழும். அவர்கள் அதையாவது செய்து பார்த்திருக்கலாம்.

நல்லது. ராம்ஜி அவர்களிடம் சொன்னது இதுதான். ‘இதுவரை நீங்கள் கேள்விப்படாதிருந்திருக்கலாம். இப்போது தெரிந்துவிட்டதல்லவா? ஆசிரியரிடம் இப்போது ஒரு வார்த்தை சொல்லி அனுமதி கேட்கலாம் அல்லவா?’

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் தலைப்பை மாற்றிவிடுகிறோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் இதே தலைப்பைப் பயன்படுத்தினாலும் சரி; வேறு தலைப்பு மாற்றினாலும் சரி. என்னையோ, என் பதிப்பாளரையோ அது பாதிக்கப் போவதில்லை. தவிர, இந்த அற்பச் சுள்ளியைக் கொளுத்திக் குளிர் காயும் விருப்பமோ அவசியமோ எனக்கில்லை.

Vetrimaran film title in controversy

அறிவு ஜீவியாக அறியப்படுவோராயினும் தமிழ் சினிமாக்காரர்கள் என்றால் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சி. அவ்வளவுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி படத்தின் கதை சம்பந்தமான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நிலமெல்லாம் ரத்தம் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராமானுஜம்

ரூ. 14,000 கோடி கூட்டுறவு பயிர் கடன்!

பலா – கறிவேப்பிலை- முருங்கை: அறிவிப்புகள் என்னென்ன? 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *