விடுதலை ஷூட்டிங் : சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் சேதுபதி

சினிமா

விடுதலை திரைப்படம் மார்ச் 31 அன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை, விமர்சகர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மறுபக்கம் விடுதலை படத்தின் பெரும் பகுதி காட்சிகள்”சோளகர் தொட்டி” நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்கிற குற்றசாட்டும் சமூக வலைதளங்களில் வெற்றி மாறனை நோக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் விடுதலை படக்குழு பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. வெற்றிமாறன், கதை சம்பந்தமான விமர்சனங்களுக்கு பதில் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேள்விகளுக்கு இடமில்லை, ‘நன்றி நவிலல்’ மட்டுமே என கூறி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, தயாரிப்பாளர் எல்ரட் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், படத்தில் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறனுடன் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் சூரியுடனான தன் நட்பு என பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசினார்.

விடுதலை படம் ரிலீஸ் அன்னைக்கு காலையில வெற்றி சார் எனக்கு ஃபோன் பண்ணி, ‘சேது, எல்லா டார்ச்சரையும் பொறுத்துகிட்டு நடிச்சதுக்கு ரொம்ப நன்றி. 

படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்குனு செய்தி வந்துகிட்டே இருக்கு’ன்னு சொன்னார். இப்படி ஒரு ஃபோன்கால், கடைசியா எப்போ வந்துச்சுனு எனக்கு நினைவில்லை. 

‘எந்தப் படத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுக்கலாம், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மக்களுக்கு சொல்லலாம்.  ஆனால், பணம் போடுகிறவர்களுக்கு, அந்தப் பணம் திருப்பி கிடைக்கணும்’ என்ற மிகப்பெரிய பொறுப்போடுதான் வெற்றி சார் செயல்படுவார்.

 “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருந்தது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன்.

vetrimanaran viduthalai vijay sethupathy story

அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன். ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு முன்பு உணர்வுகள்தான் நம்மிடம் பேசும் மொழி.   இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது.

பொதுவாவே ஒரு இயக்குநரோட எனர்ஜிதான் எனக்கு ரிஃப்ளெக்ட் ஆகும். வாத்தியார் – சுனில் மேனன் கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளை படமாக்கும்போது, வெற்றி ரொம்ப பரபரப்பா இருந்தார். அந்த பரபரப்பு, எனக்கும் அப்படியே வந்துடுச்சு. 

அதனாலயே முதல்ல என்னால அந்த காட்சியை சரியா நடிச்சு கொடுக்க முடியலை. இதை அவர்கிட்டயே ‘சார் நீங்க ரொம்ப பரபரப்பா இருக்கீங்க, எனக்கும் அதுவே வருது’னு சொன்னேன்.

அவர் அதுக்குப்பிறகு கொஞ்சம் நிதானமா அந்த சூழலை ஹேண்டில் பண்ணார். அதனுடைய வெளிப்பாடுதான் அந்தக்காட்சி. அதேமாதிரிதான் போலீஸ் ஸ்டேஷன் காட்சியும். 

அந்த காட்சி எப்படி வர வேண்டும் என்பதை எனக்கு உணர்த்த, அதை வெற்றி சார் எனக்கு முதல்ல நடிச்சு காண்பிச்சார். அப்போ அவரோட அந்த நடிப்பைபார்த்து நான் பயந்துட்டேன். அதை அப்படியே என்னால கொண்டு வரமுடியல. இருந்தாலும், என் அளவுல என்னுடையதை நடித்துகொடுத்தேன்.

vetrimanaran viduthalai vijay sethupathy story

முதன்முதல்ல ஷூட் போனப்போ வெற்றி சார் எங்கிட்ட சொன்னது, ‘நான் நல்ல டைரக்டரானு தெரில, ஆனா நல்ல டெய்லர்… நல்லா தச்சு கொடுத்திடுவேன்’ என்பதுதான்.

யானைகள் பணிவா இருக்கும்போது எப்படி அழகா இருக்குமோ, அப்படித்தான் வெற்றி சாரின் நடவடிக்கைகள் எனக்கு பிரம்மாண்டமா இருந்துச்சு.

பொதுவாவே ஷூட்டிங்கில், லொகேஷனில் சில கஷ்டங்கள் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படி இருந்திருக்கு.

உதாரணத்துக்கு, ‘ஷூட்டிங் முடியும் முன்னாடி நம்மள நிச்சயம் பாம்பு கடிச்சிடும்’னு நினைச்சு நான் பல தடவை பயந்திருக்கேன். 

அதை வெற்றிகிட்டயே சொல்லிருக்கேன்,எப்படியோ தப்பிச்சிட்டேன். ஆனா இன்னொரு விஷயம் என்னன்னா, ஷூட்டிங் லொகேஷன் என்பது உண்மையில் ஒரு பிரச்னையே இல்ல. ஏன்னா, அது அந்தப் படம் கேட்கும் விஷயம். அதை ஏத்துக்க முடியலன்னா, 9 -5 வேலைக்கே போயிருக்கலாம்னு நினைப்பேன்.

அப்டினா எது கஷ்டம்னு கேட்டா, ஒரு நிலப்பரப்பை உருவாக்கி, அதன்மூலம் யாரோ ஒருவருக்கு ஒரு பொறியை கொடுப்பது, அதுவும் காலம் கடந்து, மொழி தாண்டி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதுதான். அது சாதாரண விஷயமில்லை.
அது இந்தப் படத்தில் நிகழ்ந்திருக்கு. 

வெற்றிமாறன் கிட்ட கேட்க எனக்கு அவ்வளவு கேள்விகள் இருக்கிறது, ஆச்சர்யங்கள் இருக்கிறது. ஒரு உணவை சமைச்சுகிட்டு இருக்கும்போதே, அதை எப்படி இருக்குனு ருசிச்சு பாருங்கனு கொடுக்குற தைரியம் எத்தனை பேருக்கு இருக்கும்ன்னு தெரில.

அப்படியொரு தைரியம், வெற்றி சாருக்கு இருந்தது. படத்துக்கு இடையிலயே வெற்றி சார் எங்கிட்ட ‘சொல்லுங்க சேது, உங்களுக்கு இந்தப் படத்துல என்ன வேணும், இதலாம் நாம செஞ்சிருக்கோம்… இதைப்பத்தி உங்க கருத்து என்ன’னு நிறைய கேட்டார். 

நானும் அவர்கிட்ட படத்தை பத்தி கேள்விகள் நிறையவே கேட்டேன்.என் இயக்குநர்களிடம் நான் கேட்கும் கேள்விகள் என்பது, நான் யாரென்பதை என் இயக்குநர் தெரிந்துகொள்வதற்காகத்தான். அப்போதுதான் அவர்களுக்கு நான் யார், ஆடா மாடா இல்ல வேற எதும் விலங்கா.. என்னை எப்படி மேய்க்கணும்னெல்லாம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

vetrimanaran viduthalai vijay sethupathy story

அது தெரிந்தாதானே அவங்க எங்கிட்ட சரியா வேலை வாங்க முடியும்.

அப்படி நான் வெற்றி சார் கிட்ட கேட்ட கேள்விகளுக்கு, அவரது பதில்களும், அதுக்கு அவரது வெளிப்பாடுகளும், அதன்வழியே நான் எடுத்துகிட்டதும்தான் வாத்தியார் கதாபாத்திரம். 

இந்தப் படத்தை பார்த்த பலரும், விஜய் சேதுபதியை தனியாவும், வாத்தியார் கதாபாத்திரத்தை தனியாவும் பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா,நான் வாத்தியார் இல்ல. எனக்கு அந்த அறிவு கிடையாது. 

அந்த வாத்தியாரென்பது, வெற்றிமாறன் தான். நான் வெற்றியின் மைக் மற்றும் ஸ்பீக்கர்தான். அந்த வகையில், அவருடைய சிந்தனையை வெளியே சொன்னதுதான் நான்.
சூரி பற்றி பேசாமல் இந்த மேடையை கடந்துபோக முடியாது. வெண்ணிலா கபடிக்குழு படம் நடிக்கும்போது, ரெண்டு பேரும் சைதாப்பேட்டை க்ரவுண்ட்ல நைட் 2 மணிக்கு பேசிக்கிட்டே நடந்திருக்கோம். 

அன்றிலிருந்து இப்போவரைக்கும் அந்த நட்பு தொடருது. 5 -6 வருடங்களுக்கு முன் ஒருமுறை சூரிகிட்ட ‘உனக்கு நம்ம ஊர் முகம் இருக்கு… இப்படியே தேங்கிடாத. உனக்குள்ள நிறைய இருக்கு. அதை வெளிகாட்டிட்டே இரு’னு சொன்னேன்.

வண்டிமாடும் விவசாய நிலமும் மாதிரி, மூளையை ஒரேமாதிரி சிந்திச்சு பழகிட்டே, அப்படியே இருந்துரும். அதிலிருந்து வெளியே வருவது பெரிய விஷயம், சாதாரணமில்ல அதை சூரி சிந்திச்சு, பல மனப்போராட்டங்களை கடந்து வந்து இந்தப் படத்துல வேலை செஞ்சிருக்கார்.

vetrimanaran viduthalai vijay sethupathy story

இந்த வெற்றி, சூரிக்கானது. சூரி… இந்த வெற்றி, வெற்றி சார் உனக்காக கொடுத்தது. 

இனி நீ  அடுத்தடுத்து பண்ணப்போற விஷயங்கள்ல ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா இப்போ இந்த வெற்றியை வச்சு, ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்வாங்க. அதுல எது தேவை, யார் சொல்றாங்க, என்ன எடுத்துகலாம், எது வேணாம்னெல்லாம் கவனமா இருக்கணும்.

க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர். விடுதலை 2 வரும்போது, உங்களுக்கு தெரியவரும்… ‘இந்த காடு வேல்ராஜின் கண்ட்ரோலில்தான் இருந்தது’ என்று.

அந்தக் காட்டின் அரசன் வேல்ராஜ், லவ் யூ வேல்ராஜ் .இந்தப் படம், கண்டிப்பா என் நியாபகத்தில் கல்வெட்டுல பொறித்த அனுபவமா இருக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”என்றார்.

இராமானுஜம்

மருத்துவமனையில் குஷ்பு

கவலையில் விராட்… தேற்றிய ஷாருக்கான்: இணையத்தில் வைரல்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *