பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா?
நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது.
இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா?

தகவல்களின் அடிப்படையில்..!
தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது.
பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது.
அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது.
இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர்.
செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள்.
முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர்.
பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார்.
அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது.
இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி.
தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.

அபார உழைப்பு!
ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன்.
அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது.
பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது.
இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன.
மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை.
இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை.
இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம்.
இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று.
‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர்.
ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம்.
முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார்.
’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது.
சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன.

அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன.
இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம்.
முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.
’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும்.
அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது.
‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது.
என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது.
நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது.
ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை.
ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதியில் முக்கிய மாற்றம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
’ஜாகீர்… அத பாத்தியா?’ : சிறுமியின் பெளலிங்கை கண்டு வியந்த சச்சின் – வீடியோ உள்ளே!
Comments are closed.