தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குவதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ நடிப்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியான ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தெலுங்கில் வெளியிட உள்ளனர்.
அதனையொட்டி தெலுங்கு மொழி விடுதலை – 1ன் சிறப்புக்காட்சி பத்திரிகையாளர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் கேள்வி கேட்க செய்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால் தெலுங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.
அப்போது ஜூனியர் என்டிஆருடன் இணைய உள்ளது குறித்து வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆடுகளம் படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனைச் சந்திப்பதற்காக நான் இங்கு வந்தேன். அதன்பிறகு அவர் என்னைச் சென்னையில் சந்தித்தார்.
தமிழ் திரையுலகில் நுழைய அவர் ஆர்வமாக இருந்தார்; அதனால், தனக்கான கதை ஏதும் நீங்கள் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்.
அப்போது ‘வடசென்னை’ படத்தில், அவருக்காக வைத்திருந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் குறித்து அவரிடம் விளக்கினேன்.
ஆனால், ஒருசில காரணங்களால் அது சரியாக அமையவில்லை. அதனால் மீண்டும் ‘வடசென்னை’ கதையை எழுதி எடுத்தேன்.
தற்போது உள்ள ‘வட சென்னை’ படம், அல்லு அர்ஜுனிடம் சொன்ன கதையல்ல. முற்றிலும் வேறுபட்டு எடுக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். ஆனால் அதுவும் எனக்கு செட்டாகவில்லை ” என்றார்.
மேலும், “அசுரன் படத்திற்குப் பிறகு, பொது முடக்கம் விலக்கிகொள்ளப்பட்ட சமயத்தில் ஜூனியர் என்டிஆரைச் சந்தித்துப் பேசினேன். படம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நிச்சயம் ஒரு படம் சேர்ந்து செய்வோம். ஆனால், அந்தப் படம் திரைக்கு வர காலதாமதம் ஆகும். ஏனெனில், திரைப்படங்களை எடுக்க அதிக நேரங்களை எடுத்துக்கொள்கிறேன்.
ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்குச் செல்ல எனக்கு நிறைய நேரம் எடுக்கும். அதுதான் பிரச்சனையே” என்று அவர் கூறினார்.
“கதைக்காகத்தான் நட்சத்திரங்களை தேர்வு செய்வேன். ஸ்டார் வேல்யூக்காக கதை எழுதவோ, படம் இயக்கவோ மாட்டேன். என்னிடம் உள்ள ஒரு கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் அதுசம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தார் வெற்றிமாறன்.
இராமானுஜம்
தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடியில் விடிய விடிய போராட்டம்!
கொரோனா : தமிழகத்தில் மூன்றாவது நாளாக உயிர்பலி!
