‘சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து’ : இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு!

சினிமா

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் இன்று (பிப்ரவரி 3) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.‘

கலா தபஸ்வி என அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் 19.2.1930ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார்.

இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

1965ம் ஆண்டில், இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்’ படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.

தொடர்ந்து அவர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான பல படங்கள் வெற்றி படங்களாகும், அவர் இயக்கிய 53 படங்களில், ‛சங்கராபரணம், சாகரசங்கமம், ஸ்ரீவெண்ணிலா, ஸ்வாதிமுத்யம், சூத்ரதாரலு, ஸ்வராபிஷேகம்’ போன்ற பல படங்கள், காலத்தை கடந்தும் சினிமா ரசிகர்களால் பாராட்டப்படுபவை.

தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய ‛சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து’ ஆகியவை, அவர் புகழ்பாடும் தமிழ் படங்களாகும். 53 படங்களை இவர் இயக்கி இருந்தாலும் நடிப்பிலும் கவனம் செலுத்தினார்.

2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட இயக்குநர் கே. விஸ்வநாத் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார், சிகிச்சை பலன் இன்றி, இன்று அதிகாலை காலமானார்.

இராமானுஜம்

தேர்தல் ஆணையம் பதில்: அதிமுக கண்டனம்!

எடப்பாடியையும், பன்னீரையும் இணைக்க முயற்சி: பாஜக!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.