வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!

சினிமா

குழந்தைப்பேறை விரும்புபவர்களுக்கான பாலபாடம்!

சில திரைப்படங்கள் சிறப்பானதொரு காட்சியாக்கத்தின் வழியே புதுவிதமான அனுபவமொன்றை உணர வைக்கும். ஒரு படத்தின் டைட்டில், ட்ரெய்லர், படம் சம்பந்தப்பட்ட விழாக்கள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள் என்று எது வேண்டுமானாலும் அதனை நமக்கு முன்னுணர்த்தும். பிரபலமான கலைஞர்கள் இடம்பெறாதபோதும் அப்படியொரு எதிர்பார்ப்பு எழுந்தாலே, அப்படம் பாதி வெற்றியைப் பெற்றுவிட்டது என்று அர்த்தம்.

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ், இஸ்மத் பானு, ரமா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வெப்பம் குளிர் மழை’ படம் தொடர்பான தகவல்களும் அதன் ட்ரெய்லரும் அப்படியொரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின. அதற்கேற்ற திருப்தியை அத்திரைப்படம் தருகிறதா?

குழந்தைப்பேறு வேண்டுதல்!

சிவகங்கை வட்டாரத்திலுள்ள மாவிடுதிக்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள் (திரவ்). ஊரில் இருக்கும் பசுக்களுக்கு சினை பிடிக்க செயற்கை கருத்தரித்தல் ஊசியைச் செலுத்துவது அவரது தொழில். அவரது மனைவி பாண்டி (இஸ்மத் பானு).

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆனபிறகும் பெத்தபெருமாள் – பாண்டி தம்பதிக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது முதல் கருத்தரிப்புக்கு உகந்த நாட்களில் உறவு கொள்வது வரை, அத்தம்பதி தங்களுக்குத் தெரியவரும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அது ஊராரின் பார்வைகளும் பேச்சுகளும் அவர்கள் பக்கம் திரும்பக் காரணமாகிறது.

கோயில் கொடைவிழாவில் முதல் மரியாதை கிடைப்பது தொடர்பாகப் பெத்தபெருமாளுக்கும் அவரது உறவினர் காந்திக்கும் இடையே மோதல் முளைக்கிறது. அப்போது, பேச்சு பெத்தபெருமாளின் குழந்தைப் பேறு பக்கம் திரும்புகிறது. அது அவரை மனதளவில் காயப்படுத்துகிறது.

Veppam Kulir Mazhai Review

அதேநேரத்தில், கருவுறுதல் தொடர்பான மருத்துவ சிகிச்சையை நாடலாம் என்று மனைவி சொல்வதை ஏற்க மறுக்கிறார் பெத்தபெருமாள். இந்த நிலையில், சகோதரி மகளை மணக்குமாறு பெத்தபெருமாளைக் கட்டாயப்படுத்துகிறார் அவரது தாய். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

ஒருகட்டத்தில் பாண்டியின் சோகமான முகத்தைப் பார்க்கப் பொறுக்காமல், மதுரையிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்கிறார் பெத்தபெருமாள். தொடர்ச்சியாகச் சில நாட்கள் சிகிச்சை மேற்கொண்டபிறகு,  பாண்டிக்குக் குழந்தைப்பேறு கிட்டுகிறது.

ஆனால், செயற்கைக் கருத்தரித்தல் முறையில் வேறொருவரின் விந்தணு மூலம் அக்குழந்தையைப் பெற்றெடுக்கிறார் பாண்டி. குழந்தை பிறப்பினை ஆண்மைத்தனத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் பெத்தபெருமாள் அதனை ஏற்றாரா? அதன்பிறகு அந்த தம்பதியர் மனமொத்து வாழ்ந்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

நாயகனின் நம்பிக்கை!

நாயகன், தயாரிப்பாளர் என்ற பொறுப்புகள் இருப்பதால், திரையில் இந்தந்த விஷயங்கள் இடம்பெற்றால் போதும் என்று ‘கறாராக’ படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் திரவ். அதனால், கதையின் நகர்வில் நமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. அதேபோல அவரே இப்படத்தில் பாடல்களையும் எழுதியிருப்பது, கதையின் மீதிருக்கும் அவரது அபார நம்பிக்கையைக் காட்டுகிறது.

திரவ் நடிப்பும் குரலும் லேசாக ஜி.எம்.சுந்தரை நினைவூட்டுகிறது. என்னதான் தாடி, மீசை அடர்த்தியாக வளர்த்து முகத்தை மறைத்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

நாயகி இஸ்மத் பானு இதற்கு முன் எத்தனை படங்களில் நடித்தார் என்று தெரியவில்லை. இதில் அவரது குரலும் நடிப்பும் ஒரு முதிர்ச்சியான நடிகையைப் போன்றிருக்கிறது. சினிமா விருதுகளை வழங்குவோர் அவரை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ரமா, எம்.எஸ்.பாஸ்கர் இருவர் மட்டுமே இப்படத்தில் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள்.

தெக்கத்தி வட்டார மொழி பேச ரமா கொஞ்சமாய் சிரமப்பட்டிருக்கிறார். அதேநேரத்தில், மகன் – மருமகள் சண்டை பற்றி அறிந்ததும் அவர் கொடுக்கிற ரியாக்‌ஷன் அந்தக் காட்சியின் தன்மையைச் சுலபமாக உணர்த்திவிடுகிறது.

வம்பு பேசும் பெரியவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் இதில் கோமணம் கட்டியவாறு ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அதுவே, அவர் இப்படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டிவிடுகிறது.

Veppam Kulir Mazhai Review

காந்தியாக நடித்தவர், ஊர்க்காரர்கள் என்று சுமார் ஒரு டஜன் பேராவது நம் கவனத்தை ஈர்க்கின்றனர். நாயகனின் சகோதரி, மச்சானாக வருபவர்களும் அதில் அடக்கம்.

எளிமையான லொகேஷன்கள், குறைவான பாத்திரங்கள், பெரிதாகத் திருப்பமில்லாத காட்சிகள் என்றபோதும், ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் உணர்வு வெளிப்படுமாறு பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் பிருத்வி ராஜேந்திரன். முக்கியமாக, ஒளியின் மூலமாகப் பல வண்ணங்களை குழைத்தெடுத்த ஓவியம் போல பிரேம்களை வடிவமைத்த விதம் அழகு. கலரிஸ்ட் ஸ்ரீகாந்த் ரகுவின் பங்கும் அதில் உண்டு.

கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர் கைவண்ணத்தில் கோயில் கொடைவிழா காட்சிகள் கண்களைக் கவ்வுகின்றன. திரவ் – இஸ்மத் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சாதாரண வீடுகளின் இயல்புத்தன்மையை உணரச் செய்திருப்பது சிறப்பு.

படத்தில் இரண்டு சண்டைக்காட்சிகள் உண்டு. அவற்றை வெகு இயல்பாகக் காட்டியதோடு, கண்டினியூட்டி கெடாதவாறு படம்பிடித்த வகையில் ஸ்டன்னர் சாம் ஆச்சர்யப்படுத்துகிறார்.

சங்கர் ரங்கராஜன் இப்படத்தின் இசையமைப்பாளர். நாயகனுக்குத் தனது குழந்தை குறித்த உண்மையொன்று தெரிய வரும் காட்சியிலும், கிளைமேக்ஸில் நாயகன் நாயகி நேருக்கும் நேராகச் சந்திக்கும் இடத்திலும் அவரது பின்னணி இசை மாயாஜாலம் செய்திருக்கிறது.

பெரிதாகப் புதுமையோ, பரீட்சார்த்த முயற்சியோ இல்லை என்றபோதும், குறிப்பிட்ட காட்சியோடு அந்த இசை எளிதாகக் கலந்துவிடுகிறது. போலவே ’டமக்கு டமக்கா’, ‘எப்போ எப்போ’, ’ஊர் ஊரா நின்னு’, ’எங்க ஊரு இது’ பாடல்கள் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் எளிதாக விதைக்கின்றன; எண்பதுகளில் வெளிவந்த கிராமியப் படங்களை நினைவூட்டுகின்றன. ‘யாரை நானும் குத்தம் சொல்ல’ பாடல் சோகத்தை வெளிப்படுத்தும் மெலடியாக உள்ளது.

இப்படத்தில் சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கும் விதமே அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பினை உண்டுபண்ணியிருக்கிறது. இயக்குனர் பாஸ்கல் வேதமுத்துவுக்கு இது முதல் படம். அதனை ரசிகர்களுக்குச் சொல்லும்விதமாகப் படத்தின் முடிவில் தெனாவெட்டாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்லாமல், மிகக்கனமான ஒரு விஷயத்தை ஆங்காங்கே நகைச்சுவையைத் தூவி மிக சுவாரஸ்யமாகச் சொல்ல முனைந்திருக்கிறார்.

இலக்கணத்தை மீறிய திரைக்கதை!

கதை மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகம், முதல் திருப்பம் மற்றும் அதனால் விரியும் பிரச்சனைகள், தீர்வை நோக்கிச் செல்லுதல் என்று மூன்று பகுதிகளாக ஒரு கமர்ஷியல் திரைக்கதைக்கு இலக்கணம் வகுத்தால், அந்த வரையறைக்குள் ‘வெப்பம் குளிர் மழை’ அடங்காது.

அதேநேரத்தில் கதையின் மையப்பாத்திரங்களான பெத்தபெருமாள் – பாண்டியின் குழந்தைப்பேறு குறித்த வருத்தம் வெம்மையாகவும், குழந்தை பிறந்து வளர்வது குளிர்ச்சி தருவதாகவும், தம்பதிகளின் புரிதல் அதிகமானதா இல்லையா என்பதைச் சொல்லும் இறுதிப்பகுதி மழையாகவும் திரையில் விரிகின்றன.

பெரும்பாலான காட்சிகளில் நாயகன், நாயகி  மட்டுமே வருவதும், குழந்தைப்பேறு குறித்தே இருவரும் பேசுவதும் ரசிகர்களுக்கு ஒருகட்டத்தில் போரடிக்கலாம். ஆனால், ஒரு சாதாரண தம்பதியின் தினசரி வாழ்வு அது எனக் கொண்டால் இப்படம் வித்தியாசமானதொரு பார்வையை வழங்கும்.

Veppam Kulir Mazhai Review

ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இந்தப் படம் செயற்கைக் கருத்தரித்தலுக்கு எதிரானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அறிவியல் பேசுவோர்க்கு இப்படத்தின் முடிவு யதார்த்தமற்றதாகத் தெரியலாம். ஆனாலும், கலவியின் நோக்கம் குழந்தைப்பேறல்ல என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது இப்படம்.

கூடவே, காமத்தில் மனமொத்து ஒருகோட்டில் இரு மனங்களும் நின்றாலே குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும் என்றும் சொல்கிறது.  அது, காலம்காலமாக நம் முன்னோர் சொல்லி வந்த ஒன்றுதான். அந்த வகையில், குழந்தைப்பேற்றை விரும்புபவர்களுக்கு பாடமாகவும் அமைந்திருக்கிறது இப்படத்தின் முடிவு.

பசுவானாலும், மனிதர் ஆனாலும், செயற்கைக் கருத்தரித்தல் ஒன்றே வழி என்றாகிவிடக் கூடாது என்ற கவலையை வெளிப்படுத்திய வகையில் ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறது ‘வெப்பம் குளிர் மழை’. இதில் லாஜிக் குறைபாடுகளை ஒருவர் நிறையவே உணரலாம். அதையும் மீறி, மண் மணக்கும் இதன் திரைக்கதை நிச்சயம் நம் மனதை ஆட்கொள்ளும்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமலாக்கத்துறை எங்களால் உருவாக்கப்பட்டதா? – எதிர்க்கட்சிகளை சாடிய மோடி

ஆட்டோவில் சென்றதற்கு ரூ.7.66 கோடி கட்டணமா? – வைரல் வீடியோ!

என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லாதது வருத்தமில்லை: மோடி

தேர்தல் பத்திரம்: சட்டம் போட்டுச் செய்யப்பட்ட ஊழல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0