உடம்பை வைத்து கிண்டல் பண்ணாதீங்க: சிம்பு

சினிமா

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதாக தயாரிப்பு  நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதனையொட்டி நேற்று மாலை சென்னை, தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகனாக சிலம்பரசன், இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் நீரஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சிலம்பரசன் பேசும்போது, “இந்தப் படம் இதுவரையிலும் வெளிவராத ஒரு பேட்டர்னில் தயாராகி வந்துள்ளது. அதனால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணமான இயக்குநர் கெளதமுக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும் இந்தப் படம் நல்ல படம்.. சிறந்த படம் என்று சொல்லி இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சிக்கும், என்னையும் தட்டிக் கொடுத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

இங்க தட்டி விடுறவங்கதான் அதிகம்.

ஆனால் மீடியாக்கள் அதைச் செய்யவில்லை. இந்தப் படத்தின் நிறைய விமர்சனங்களை நான் படிச்சேன். அதிகமானோர் இந்தப் படத்தைப் பாராட்டித்தான் எழுதியிருக்காங்க.

படத்துல நடிச்சவங்க எல்லாருமே சிறப்பா நடிச்சிருந்தாங்க. நீரஜ்கூட நல்லா நடிச்சிருந்தாரு. நானே திகைச்சுட்டேன். ஷூட்டிங்கப்ப லைட்டே இருக்காது. ஓகே.. லைட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுவாங்கன்னு உக்காரும்போது “சார்.. ஷாட் ரெடி”ன்னு சொல்வாங்க. “இன்னும் லைட்டே போடலையே?”ன்னு கேட்டா.. “அவ்ளோதான் சார் லைட்டு”ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ ஆச்சரியமா இருந்துச்சு.

ஆனால் இப்போ படத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் பிரமிப்பா இருக்கு. ஒளிப்பதிவாளருக்கு ஒரு நன்றி.

‘மல்லிப் பூ’ பாடல் காட்சியைப் படமாக்கும்போதே கவுதமிடம், “இந்தப் பாட்டுக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ் வரப் போகுது பாருங்க” என்று சொன்னேன்.

சொன்னது போலவே இப்போது இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடுறாங்க. இசையமைப்பாளர் ரஹ்மான் சாருக்கு நன்றி. அதோட படத்தை சரியான முறைல வெளியிட்டு உதவி செய்த ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மிக்க நன்றி.

இந்தப் படத்தோட இரண்டாம் பாகத்தோட கதை எப்படியிருக்கும்ன்னு தெரியல. ஆனால் கொஞ்சம் என்னோட பேன்ஸ் கொண்டாடுற மாதிரி, ஜனரஞ்சகமான கதையா தேர்வு செஞ்சு கவுதம் வைச்சா நல்லாயிருக்கும்.

ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரியிருக்கணும். இருக்கும்னு நம்புறேன்.

இந்தப் படத்துலதான் என் உடம்பை வைச்சு யாரும் கிண்டல் பண்ண முடியலைன்னு நினைக்குறேன். இனியும் பண்ணாதீங்க. எப்போதுமே ஒருத்தரோட உடம்பை வைச்சு கிண்டல் செய்வது தவறு” என்றார் சிலம்பரசன்.

இராமானுஜம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.