அது ஒரு ‘கஷ்ட’ காலம்!
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். என்னதான் கதை சொல்லும் விதம் படத்திற்குப் படம் வேறுபட்டாலும், அந்த தனித்தன்மை மாறாது. அப்படித்தான் ஒரு ரசிகனின் நம்பிக்கை இருக்கும். அது சிதைந்து போகாமல் காக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் கடமை. இந்த பில்டப்புக்கு காரணம், வெங்கட்பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ பார்த்ததுதான்.
சென்னை 28 தொடங்கி மாநாடு வரை, வெங்கட்பிரபுவின் படங்களுக்கென்று ஒரு அடையாளம் உண்டு. வேறொன்றுமில்லை, அவர் எழுதும் திரைக்கதையில் எள்ளலும் சுயஎள்ளலும் ஜாஸ்தியாக இருக்கும். அந்த அம்சம் அதிகமாக இருக்கும் படங்களே பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், அவரது காட்சியாக்கம் புத்துணர்வைத் தரும் வகையில் அந்த நகைச்சுவையில் இயல்புத்தன்மை மேலோங்கியிருக்கும். ஆனால், தன் வழக்கத்தில் இருந்து மாறி ‘கஸ்டடி’யில் கதை சொல்லக் கஷ்டப்பட்டிருப்பதாக பட புரோமோஷன்களில் பேசியிருந்தார் வெங்கட்பிரபு.
அதன்பிறகும் சுதாரித்துக் கொள்ளாமல் ‘கஸ்டடி’ பார்க்கப் போனது நம்ம ’கஷ்ட’ காலம்!
கான்ஸ்டபிளும் கைதியும்..!
காவல் துறை உயரதிகாரிகளே கைது செய்யத் தயங்குகிற அளவுக்கு அதீத செல்வாக்கு கொண்ட ஒரு ரவுடி. அவரைப் பலநாட்களாகக் கண்காணித்துவரும் சிபிஐ அதிகாரிகள் ரகசியமாகக் கைது நடவடிக்கையை அரங்கேற்றுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார் அந்த ரவுடி. அந்த களேபரத்தின்போது, அவரது கார் நாயகன் வரும் பைக் மீது மோதுகிறது.
அப்புறம் என்னாச்சு என்ற கேள்வி தோன்றுமே? அதற்காகத்தான், முதலிலேயே நாயகன் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறார் இயக்குனர்.
நாயகன் ஒரு கான்ஸ்டபிள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவரது பெற்றோரோ, வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கின்றனர். திருப்பதியில் ரகசியமாகத் திருமணத்தை நடத்தவும் திட்டமிடுகின்றனர். அதற்காக, நாயகியை வீட்டுச்சிறையில் வைக்கின்றனர். நாயகியைக் காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் செல்ல முயலும்போதுதான், நாயகன் மீது அந்த ரவுடியின் கார் மோதுகிறது.
அப்போது, ரவுடியுடன் இன்னொரு நபரும் இருக்கிறார். அவரொரு சிபிஐ அதிகாரி. அவர் சொன்னபிறகே, அடுத்தநாளே பெங்களூரு சிபிஐ நீதிமன்றத்தில் அந்த ரவுடியை ஆஜர்படுத்த வேண்டுமென்பது தெரிய வருகிறது. அவர் நிகழ்த்திய குற்றங்களில், நாயகன் ஊரில் நிகழ்ந்த ஒரு வாயுக்கசிவு விபத்தும் சேர்த்தி. அதைக் கேட்டதும், நாயகனின் முகம் மாறுகிறது.
ஒருபக்கம் நாயகிக்கு வேறொருவருடன் திருமணம்; இன்னொரு பக்கம் ஒரு மாபெரும் ரவுடியின் மீதான சட்ட நடவடிக்கை. ஒரு கடமை உணர்வுமிக்க நாயகன் என்ன செய்வார்? அதையே ‘கஸ்டடி’ நாயகனும் செய்கிறார். ஆனால், அதற்கு அவர் சார்ந்த காவல் துறையே எதிராக நிற்கிறது. உயரதிகாரிகள் பலர் அந்த ரவுடியையும் சிபிஐ அதிகாரியையும் கொல்லத் துடிக்கின்றனர்.
அவர்களை நாயகன் எதிர்த்தாரா? அந்த ரவுடியின் பின்னிருக்கும் மர்மங்களைக் கண்டறிந்தாரா என்பதுதான் ‘கஸ்டடி’யின் கதை. இவ்விரண்டு முடிச்சுகளுக்கும் ‘இதுதான் பதில்’ என்று உடனடியாகச் சொல்லிவிடுகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. அது மட்டுமல்லாமல், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லியே பழக்கப்பட்டவர் இக்கதையை சீரியசாக சொல்ல முற்பட்டிருக்கிறார். விளைவு, படம் பார்த்த தருணங்களை ‘அது ஒரு கஷ்ட காலம்’ என்றே எண்ணத் தோன்றுகிறது.
புதுமுகமாக நாகசைதன்யா!
குறிப்பிடத்தக்க அளவில் தெலுங்கில் வெற்றிப் படங்கள் தந்தவர் நாகசைதன்யா. நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன். ‘கஸ்டடி’ வழியே தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். வாயை விரித்து, பற்களைக் கடித்து, ஒரு புதுமுகம் போல அவர் தமிழ் வசனம் பேசுவதைப் பார்க்க, நமக்கு ‘கஷ்டமாக’ இருக்கிறது.
‘புல்லட்’ பாடல் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கிரிதி ஷெட்டி, இதில் நாயகியாக வருகிறார். அவரது இளமைத் துள்ளலைத் திரையில் வெளிப்படுத்த இடம் தரப்படவில்லை. ஆனால், அவர் படம் முழுக்க ஒரு ‘ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்’ போல வருகிறார்.
கிரிதியை ஒருதலையாகக் காதலிக்கும் மாப்பிள்ளையாக வருகிறார் பிரேம்ஜி. ஆனால், அவரது ‘ட்ரேட்மார்க்’கான இயல்புத்தன்மை இதில் சுத்தமாக இல்லை. அதனால், கொஞ்சம்கூட சிரிப்பும் வரவில்லை.
நாகசைதன்யாவுக்கு இணையான பாத்திரம் அரவிந்த் சாமிக்கு என்று சொல்லவே ஆசை. ஆனால், அது நடக்கவில்லையே? ‘என்னய்யா எல்லாரும் நேர்மையா இருக்குறீங்க, பேடு வைப்ரேஷன்’ என்று முன்பாதியில் புலம்பும்போது ‘ஸ்கோர்’ செய்கிறார். அது போன்றதொரு இடம் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், படமே முடிந்துவிடுகிறது.
இக்கதையில் முதலமைச்சராக வருகிறார் பிரியா மணி. நடை உடை பாவனைகளில் கம்பீரத்தை இழைய விட்டிருக்கிறார். ஆனாலும், அவரை அப்பதவியோடு பொருத்திப் பார்க்கக் கஷ்டப்படுகிறது மனது.
‘கஸ்டடி’ தரும் பெரிய ஆச்சர்யம், சரத்குமார் ஏற்றிருக்கும் நடராஜ் பாத்திரம். இதுவரை ஹீரோயிசம் காட்டி வந்தவர், இதில் தனது கம்பீரத்தை வில்லத்தனம் காட்டப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது இருப்பு ‘வெல்டன்’ என்று சொல்லும்விதமாக உள்ளது.
ஒய்.ஜி.மகேந்திரன், சம்பத், ராம்கி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட தமிழ் திரை முகங்களோடு சூர்யா, ரவிபிரகாஷ், அன்னபூர்ணா உட்படச் சில தெலுங்கு கலைஞர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். நாகசைதன்யாவின் தந்தையாக வரும் கோபராஜு ரமணா, நம்மூர் ஜனகராஜை நினைவூட்டுகிறார். இவர்கள் தவிர்த்து, ‘பிளாஷ்பேக்’ காட்சிகளில் ஜீவாவும் ஆனந்தியும் தோன்றியுள்ளனர். இருவரும் அளவாக நடித்தும், அக்காட்சிகள் நம் மனதுக்கு நெருக்கமானதாக மாறவில்லை.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு வெவ்வேறுவிதமான இடங்களைத் திரையில் இயல்பாகக் காட்டுகிறது. அதேநேரத்தில், சண்டைக்காட்சிகளில் உற்சாகம் கூட்டவும் உதவுகிறது. வழக்கமாக, வெங்கட்பிரபுவின் படங்களில் ஒரு கலர்ஃபுல் வீடியோ பார்க்கும் உணர்வைத் தரும் படத்தொகுப்பு. இதில் வெங்கட்ராஜனின் உழைப்பு அதனைச் செயல்படுத்தவில்லை. ஆனால், சில காட்சிகளில் ‘ஹரி’ பட பாணியில் பரபரப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது.
சத்யநாராயணாவின் கலை வடிவமைப்பு தொண்ணூறுகளின் பின்பாதியைத் திரையில் காட்ட உதவியிருக்கிறது. ஆனாலும், அது பிரமிப்பைத் தரவில்லை.
இளையராஜா & யுவன்சங்கர் ராஜா இருவரும் காட்சிகளைப் பங்கு பிரித்து பின்னணி இசை அமைத்திருப்பது அவற்றின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக உள்ளது. அதேநேரத்தில், மிகக்குறைவான வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்திருக்கும் இடங்கள் ‘இது இளையராஜாவின் கைவண்ணம்தான்’ என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன.
வழக்கமாக, வெங்கபிரபுவின் படங்களில் யுவன் தரும் பாடல்கள் தியேட்டரில் கொண்டாட்டத்தை உருவாக்கும். இதில் அது நிகழவே இல்லை.
ஏன் தெலுங்கு வாசனை?
இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் ‘டப்’ செய்து வெளியிடப்படும் படங்களில் கூட பேனர்கள், பலகைகளில் இருக்கும் எழுத்துருக்கள் அழிக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் உதவியோடு தமிழ் வார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆனால், ‘கஸ்டடி’யில் கதாபாத்திரங்கள் அனைத்தும் தெளிவாகத் தமிழை உச்சரிக்கின்றன.
அதாவது, முழுக்கவே தமிழில் வசனங்களைப் படம்பிடித்திருக்கின்றனர். ஆனால் கதாபாத்திரங்கள், இடங்கள், பயன்படுத்தும் எழுத்துரு அனைத்துமே தெலுங்குமயமாக இருக்கின்றன. அது ஏன் என்றே புரியவில்லை.
ஹைதராபாத் சார்மினாரை காட்டிவிட்டு, கூசாமல் சென்னை ராயப்பேட்டை என்று சொல்வதே திரையுலகின் வழக்கம். அப்படியிருக்க, ஒரு தெலுங்குப் படத்தை ஏன் தமிழ்படுத்த வேண்டும்? அதற்காக, முழுக்கவே தமிழில் படப்பிடிப்பை நடத்த வேண்டும். இந்த கேள்விதான், ஒட்டுமொத்தமாகவே ‘கஸ்டடி’ தரும் திரை அனுபவத்தைக் கஷ்டத்தில் தள்ளியிருக்கிறது.
ரவுடிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளை ஒன்றாகப் பிணைத்துக் காட்டியது அதற்கான காரணமாகத் தெரியவில்லை. ஏனென்றால், கமர்ஷியல் படங்களில் இப்படிப்பட்ட சித்தரிப்புகள் நெடுநாட்களாகத் தொடர்ந்து வருகின்றன. அதுதான் காரணம் என்றால், இப்படியொரு கதையையே படமாக்கத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது. போலவே, தொண்ணூறுகளில் கதை நிகழ்வதாகக் காட்டியதும் கூடப் பெரியளவில் வியப்பைத் தரவில்லை.
மலையாளத்தில் வெளியான ‘நாயாட்டு’ படத்தைப் பார்த்தபிறகே ‘கஸ்டடி’யை உருவாக்க முனைந்ததாகச் சமீபத்தில் கூறியிருந்தார் வெங்கட்பிரபு. இரண்டுக்குமான வித்தியாசத்தைக் கண்டபிறகு, ‘இனி உங்கள் பாணியிலேயே படமெடுங்கள்’ என்றே அவரிடம் சொல்லத் தோன்றுகிறது.
’இது தனது படம்’ என்று உரக்கச் சொல்லும் இயக்குனர்களுக்கு மத்தியில், இது வெங்கட்பிரபுவின் விளையாட்டு, வெங்கட்பிரபுவின் விடுமுறை என்று தன் படங்களைக் குறிப்பிடுவது வெ.பி.வின் வழக்கம். இதிலும் ‘வெங்கட்பிரபுவின் வேட்டை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். படம் பார்த்தபிறகு, இரையானது நாம்தான் என்று தெரிய வருகிறது.
உதய் பாடகலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைந்த முதல்வர்
கள்ளச்சாராய விற்பனை: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது!