நடிகர் விஜய்க்கு கதை தயார் செய்துள்ளதாகவும், விரைவில் அவரை வைத்துப் படம் இயக்க உள்ளதாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். 2007-ஆம் ஆண்டு வெளியான சென்னை-28 படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, தொடர்ந்து கோவா, மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார்.
கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.
இதனை தொடர்ந்து, வெங்கட் பிரபு தனது 11-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார்.
படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், இளைய தளபதி விஜயுடன் எப்பொழுது இணைந்து பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “விஜய் சாருடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளேன். விஜய் சாருக்கு பிடிக்கிற மாதிரி கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில், அவரைப் பார்த்து கதை சொல்லி, படம் இயக்குவேன்.
பீஸ்ட் படத்தின் பாடல்களில் அவர் மிக அழகாக இருக்கிறார். ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ள ரசிகர்களை கொண்டிருக்கிற விஜய் சார் நடிப்பிற்கு தீனி போடுகிற மாதிரியும், அவருடைய ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் ஒரு புதிய கதை தயார் செய்துள்ளேன்.” என்றார்.
இதனால் வெங்கட்பிரபு – விஜய் கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், மகேஷ்பாபு ரசிகர்கள்!