இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. J Baby Trailer Launch
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 4) சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.
கலைக்கு மொழி முக்கியமில்லை!
நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ”ரஞ்சித் என்னிடம் சென்னை 28-ல கூட இருந்தார். அந்த டீம்லதான் இந்த படத்தோட சுரேஷ் மாரியும் இருந்தார். ரஞ்சித் அதுக்கு முன்னாடியே சில படங்களில் அசிஸ்டண்டா ஒர்க் பண்ணினாலும் நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு டீமா, குடும்பமா சேர்ந்து ஒர்க் பண்ண படம்னா அது சென்னை 28-தான்.
அந்த காலகட்டத்திலேருந்தே ரஞ்சித்தோட வளர்ச்சியை, அவர் டீமோட வளர்ச்சியை நான் பாத்துக்கிட்டிருக்கேன். அப்போ ஆரம்பிச்சு இப்போவரை நாங்க எல்லாரும் குடும்பமாத்தான் இருக்கோம். எங்க டீம்ல இருந்து ஒவ்வொருத்தரும் படம் இயக்கி வெற்றி அடைவதை பார்க்கிறேன். அதுல பெருமையும் சந்தோஷமும் எனக்குத்தான் அதிகம்.
சுரேஷ் மாரியை பா.இரஞ்சித் அறிமுகப்படுத்துறது இன்னும் சந்தோஷமா இருக்கு. இந்த ஜெ பேபி படத்தை நான் இன்னும் பார்க்கலை. என் வீட்ல பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணிருக்காங்க. இப்போ ’மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை எல்லோரும் கொண்டாடிக்கிட்டிருக்காங்க. நம்ம தமிழ்நாட்ல அந்த படத்தை கொண்டாடுறதை பார்க்கிறப்போ கலைக்கு மொழி முக்கியமில்லை, கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது.
அதே மாதிரியான படம்தான் இது. ஆனா, இதை ரொம்ப நாள் முன்னாடியே எடுத்துட்டாங்க. ஊர்வசி மேடத்தை வெச்சு ஒரு படம் என்பதே ஸ்பெஷல்தான். அவங்க அவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட், அவ்ளோ பெரிய என்டர்டெயினர். நாம எல்லாருமே அவங்க ஃபேன்தான். படம் கண்டிப்பா ஃபன் ரைடாதான் இருக்கும்” என்று வெங்கட் பிரபு பேசினார்.
ஊர்வசி மேடம் கண்டிஷன் போட்டாங்க.. ஆனா!
இயக்குநர் சுரேஷ் மாரி பேசியபோது, ”நான் விஷ்ணு வர்தன் சார்கிட்ட அப்பரண்டிஸா சேர்ந்து, அந்த படம் ரிலீஸான பிறகு நடிகர் அரவிந்த் ஆகாஷ் மூலமா வெங்கட் பிரபு சாரை பார்க்க முடிஞ்சுது. அப்படித்தான் நான் அந்த கூட்டத்துல, குடும்பத்துல சேர்ந்தேன். அதுலேருந்து மங்காத்தா, சரோஜா, பிரியாணினு பல படங்கள்ல அவரோட டிராவல் பண்ணேன்.
நான் பொறுமையானவன்னு சொல்றாங்க. அந்த பொறுமை வெங்கட் பிரபுகிட்டேயிருந்து கத்துக்கிட்டது. அடுத்து ரஞ்சித்கூட இணைஞ்சேன். ரஞ்சித்கூட கபாலில ஒர்க் பண்றப்போதான் கவனிச்சேன். அவர்கிட்டே இருந்தவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஒருத்தர் கம்யூனிஸ்ட், ஒருத்தர் பெமினிஸ்ட், ஒருத்தர் சோஷியலிஸ்ட். நான் என்ன ரகம்னு புரியாமலே இருந்தேன். அப்படியெல்லாம் இருந்துதான் இப்போ தனியா படம் இயக்கிருக்கேன். அதுவும் அவரோட தயாரிப்பில்.
இந்த கதை என் குடும்பத்துலேருந்து, பெரியம்மாவோட வாழ்க்கையிலயிருந்து எடுத்த கதை. அம்மாங்கிறவங்க எவ்ளோ முக்கியம்கிறதை நிறையப் பேரு புரிஞ்சுக்காம ஓடிக்கிட்டேயிருக்கோம். அவங்களுக்கெல்லாம் அம்மாங்கிற உயிரோட மதிப்பை, அவங்கள எப்படி மதிக்கணும்கிறதை இந்த படம் புரிய வைக்கும். அழவைக்கும். அதே நேரம் பயங்கரமா சிரிக்கவும் வைக்கும். அதாவது வெங்கட் பிரபு பாதி, ரஞ்சித் படம் பாதி அப்படித்தான் இந்த படம் இருக்கும்.
தினேஷ் நல்ல நடிகர்னு ஏற்கனவே புரூப் பண்ணிட்டார். அவர்கிட்டே இந்த கதையை சொல்லி உடம்பு இப்படி இருக்கணும்னு சொன்னேன். அதுக்கேத்தமாதிரி வெய்ட் கூடி வந்தார். காமெடி நடிகரா இதுவரை பார்த்த மாறனை இதுல வேற மாதிரி பார்க்கலாம். திணேஷ், மாறன் ரெண்டு பேரோட நடிப்பையும் பார்த்து கண்கலங்கிட்டேன்.
இந்த கதையை உருவாக்கினப்போ என்னோட முதல் சாய்ஸா ஊர்வசியம்மாவ தான் நினைச்சிருந்தேன். நான் சின்ன வயசிலேருந்து அவங்க படங்களை பார்த்து ரசிச்சிருக்கேன். அவங்க கேரக்டர் எப்படின்னா சட்னு கோபப்படுவாங்க; சட்னு திட்டுவாங்க, அடிப்பாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, சட்னு காமெடியா எதையாச்சும் பண்ணுவாங்க. அவங்ககிட்டே இந்த கதையை சொன்னப்போ அவங்களுக்கு பிடிச்சுது. ஆனா, நான் பாட்டியா பண்ண மாட்டேன். என் பசங்கள்லாம் கேள்வி கேட்பாங்க அது இதுன்னு சில விஷயங்கள் சொன்னாங்க. அவங்களைத் தவிர யார் பண்ணாலும் சரியா இருக்காதுன்னு தொடர்ந்து கேட்டுக் கேட்டு சம்மதிக்க வெச்சேன்.
தமிழ்சினிமாவில் முதல் முறையாக இந்த படத்துல அம்மாவுக்குன்னு பயங்கர பில்டப், இன்ட்ரோ சாங் வெச்சிருக்கோம். நடிப்புன்னு பார்த்தா எங்க பெரியம்மாவை அப்படியே கண் முன்ன நிறுத்தினாங்க. அவங்க ஃபெர்பாமென்ஸ் என்னை பல தடவை கண் கலங்க வெச்சிது” என்று சுரேஷ் மாரி பேசினார்.
’நல்ல படத்தை தயாரிச்சிருக்கேன்னு அம்மா பாராட்டினாங்க!’
இயக்குநர் பா. இரஞ்சித் பேசியபோது, ”எங்க வெங்கட் பிரபு சார் வந்தது ரொம்ப மகிழ்ச்சி. அட்டகத்தி படத்துக்கு பெரிய ஆதரவு கொடுத்தவர். அவர் சுரேஷ் மாரியண்ணா பட நிகழ்ச்சிக்கு வரணும்னு நினைச்சேன். அது நடந்துச்சு.நான் முதன் முதலா தகப்பன்சாமின்னு ஒரு படத்துல அசிஸ்டண்டா ஒர்க் பண்ணேன். அது ஒரு அனுபவமா இருந்துச்சு. அடுத்து சென்னை 28-ல ஒர்க் பண்றப்போ அதுவரை எது சினிமான்னு நினைச்சுக்கிட்டிருந்தேனோ அதை அப்படியே மாத்துற மாதிரியான அனுபவத்தை அந்த படம் தந்துச்சு.
மக்கள் இதைத்தான் ரசிப்பாங்க; அதைத்தான் ரசிப்பாங்கன்னு ஒரு கருத்தை வெச்சிக்கிட்டு இருந்த சூழல்ல வித்தியாசமான கதைக்களத்துல உருவாகி வெற்றி பெற்ற படமா அது இருந்துச்சு. ஜாலியாவும் அமைதியாவும் ஒரு படத்தை எடுக்க முடியும்னு அந்த படம் கத்துக் கொடுத்துச்சு.
நாங்கள்லாம் சின்ன வயசுல சினிமாவுக்குள்ள வந்துட்டோம். சுரேஷ் மாரியண்ணா உள்ளே வர்றப்போவே அவருக்கு கல்யாணமாகி குழந்தை இருந்துச்சு. கல்யாணமாகி வந்தா சினிமாவுல சக்ஸஸ் பண்ண முடியாதுங்கிற சூழல் இங்கே உண்டு. அதையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கார்.
அவர் உறவுகளை மையமா வெச்சு, அம்மாவை முக்கிய கதாபாத்திரமா வெச்சு ஓரு படம் எடுத்திருக்கார்னா அதோட வேல்யூவை புரிஞ்சுக்கலாம். நான் படம் பார்த்தப்போ எனக்குள்ள என்ன உணர்வை தந்துச்சோ அதே மாதிரியான உணர்வை மக்களுக்கும் தரும்னு நம்பறேன்.
என்னோட அம்மாவுக்கும் எனக்கும் நிறைய எமோசனல் தொடர்பு இருக்கு. இந்த படத்தை அம்மா பார்த்துட்டு நல்ல படத்தை தயாரிச்சிருக்கேன்னு சொல்லி கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாங்க. அம்மா சந்தோஷப்படுற மாதிரி ஓரு படம் என் பேனர்ல வருதுங்கிறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு வரிசையா ரத்தம் தெறிக்கிற, அகோரித்தனமான படங்கள் வரிசையா வந்துகிட்டிருக்கிறப்போ, புளூ ஸ்டார், மஞ்சுமல் பாய்ஸ்னு எதார்த்தமான எளிமையான படைப்புகள மக்கள் கொண்டாடிக்கிட்டிருக்காங்க.
அதை வெச்சுப் பார்க்கிறப்போ மக்கள் இதைத்தான் ரசிப்பாங்க, அதைத்தான் ரசிப்பாங்கன்னு முன் முடிவோட அணுக முடியாதுங்கிற முடிவுக்கு வர வேண்டியிருக்கு.
ஜெ பேபியும் அதே மாதிரியான எதார்த்தமான எளிமையான படைப்பா வந்திருக்கு. நல்ல படங்களை கொடுத்தா மக்கள் கண்டிப்பா ரசிப்பாங்க. இதையும் கண்டிப்பா வரவேற்பாங்க” என்று பா.ரஞ்சித் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
பெங்களூரு குண்டுவெடிப்பு : சென்னை இளைஞர்களுக்கு தொடர்பா?
Video : சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை உடைத்த ஆர்.சி.பி வீராங்கனை!
வேலைவாய்ப்பு:. திருச்சி என் ஐ டி யில் பணி!
J Baby Trailer Launch