தமிழ் சினிமாவில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இருக்கும்.
1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர், ஜனகராஜ், நிழல்கள் ரவி நடித்து ” நாயகன்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தின் திரைமொழியாக்கத்தை முறியடிக்க கூடிய வகையில் எந்தப் படமும் கடந்த 35 ஆண்டுகளில் வெளிவரவில்லை.
தமிழ்நாட்டின் கடைகோடி, கடலோர பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பிழைப்புக்காகவும், தொழில் செய்வதற்காகவும் தினந்தோறும் மும்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பவர்கள் இன்றும் உள்ளனர்.
அப்படி சென்று தாதாக்களின் தலைவனாக மாறுபவர்களும் உண்டு. இதில் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் நேர்மையாக தொழில் செய்து பொருள் சேர்த்து சொந்த ஊரில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், எனதொழில் செய்பவர்களும் உண்டு.
‘வெந்து தணிந்தது காடு’ படம் பிழைப்புக்காக மும்பை சென்ற இளம் வாலிபனின் கதை தான்.

வழக்கமான சிலம்பரசனாக இல்லாமல் இயக்குநரின் நடிகராக தன்னை முழுமையாக கௌதம்மேனனிடம் ஒப்படைத்திருக்கிறார். திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு 200% தனது உழைப்பைக் கொடுத்திருக்கிறார் சிலம்பரசன்.
முத்து என்கிற முத்துவீரன் ஆக மாறுபட்ட தோற்றத்தில் சிலம்பரசன் ஊர்ப் பையனாக ஒரு ஏழை இளைஞனாக அதற்கான உடல் மொழி, நடை, உடை, பாவனை என தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
எந்த காட்சியிலும் சிலம்பரசன் ஏற்கனவே நடித்து வெளியான முந்தைய படங்களின் நடிப்பு, கதாபாத்திரம் படம் பார்ப்பவர்களுக்கு நினைவுபடுத்தவில்லை. திருச்செந்தூர், திருநெல்வேலி பகுதியின் வட்டார வழக்குமொழி பேசுகிற முத்து என்கிற இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் சிலம்பரசன்.
இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் அதிலும் அவரது தனித்த நடிப்பால் பார்வையாளனை வசீகரிக்கின்றார்.
மும்பையில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என வாழும் ரவுடி தொழில் செய்பவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டிதான் படத்தின் மையக்கரு. ஒரு கூட்டம் தமிழர்கள், மற்றொரு கூட்டம் மலையாளிகள். அதில் தமிழர்கள் கூட்டத்திற்காக வேலை செய்பவராக மாறுகிறார் சிலம்பரசன்.
மலையாளிகள் கூட்டத்தின் தலைவனாக மலையாள நடிகர் சித்திக். சிலம்பரசன் காதலியாக சித்தி இத்னானி. இருவருக்கும் இடையில் அதிகமான காதல் காட்சிகள் இல்லையென்றாலும் ஒருசில காட்சிகளிலேயே காதலை அழுத்தமாக வெளிப்படுத்தும் காட்சிகளாக அமைந்துள்ளன.
மறக்குமா நெஞ்சம்…’ என மறக்க முடியாத பாடலைப் பதிவு செய்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். பின்னணி இசையிலும் வேறு ஒரு உலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு மும்பையை புதிதாகக் காட்டுகிறது.சில காட்சிகள் இப்படித்தான் அடுத்து நகரும் என யூகிக்க முடிவது பலவீனம்.
ஆனாலும், கௌதம் மேனனின் மேக்கிங் ஸ்டைலும், சிலம்பரசன் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இரண்டு குழுவுக்கு இடையேயான மோதலாக மாறும் இரண்டாம் பாதி, அதில் அழுத்தம் இல்லாத திரைக்கதை அமைப்பால் தடுமாறுகிறது. முத்துவீரனின் பாத்திரத்தை முன்னிலைப்படுத்த முயன்று, அவருக்கு நிகரான டான்களாக வரும் இருவரின் பாத்திர வடிவமைப்பில் அவர்களின் பலத்தைக் குறைத்துள்ளது கதையின் ஓட்டத்துக்கு தடையாக அமைந்துள்ளது.

நாயகன் போன்ற மும்பையின் கேங்ஸ்டர் படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படங்களாக அமைந்துள்ளன. அவற்றுக்கான அடித்தளம் கேங்ஸ்டர் ரோலுக்கான தெளிவான பார்வையும், அதற்கான அரசியலும், திரைக்கதையும்.
ஆனால், இங்கு இரண்டு கேங்ஸ்டர்கள்,அதிலும் மலையாள சினிமாவின் மூத்த நடிகர் சித்திக் போன்றோரை வைத்துக்கொண்டு அவருக்கான வலுவான திரைக்கதையை கொடுக்காமல் வீணடித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
நிலம் தான் இங்க பொண்ணு மாதிரி, நிலத்தை மீட்கிறது, பறிக்கிறது தான் இங்க நடக்கிற மோதல்’ என வசனங்கள் வைத்துவிட்டு, நில அரசியல் அங்கு யாருக்கு எதிராக செய்யப்படுகிறது என்பதை தெளிவில்லாமல், மலையாளம் மற்றும் தமிழ் பேசும் இரு குழுக்களுக்கு இடையேயான விரோதமாக சுருக்கியிருப்பது திரைப்படத்தை பலவீனமாக்குகிறது.
இயல்பாக சென்ற முதல் பாதி திரைக்கதைபோல், இரண்டாம் பாதியும் அழுத்தமாக இருந்திருந்தால் வெந்து தணிந்தது காடு’ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக இருந்திருக்கும்.
அப்படி இல்லை வெந்து தணிந்தது காடு மேற்கண்ட விமர்சனம் நமது பார்வை.
பாடம் பார்த்தவர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து என்ன?
தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 திரைகளில் வெந்து தணிந்தது காடு வெளியானது, வழக்கமாக சிலம்பரசன் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கான வரவேற்பு, ஆரவாரம், கட் அவுட், தோரணங்கள் பிரம்மாண்டமாக இருக்கும்.
ஆனால் இந்தப் படத்திற்கு குறைவாகவே இருந்தது. அதிகாலை 5 மணி சிறப்புக்காட்சி தமிழ்நாடு முழுவதும் 200 திரைகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 5 மணி காட்சிக்கு சிம்புவின் வெறி பிடித்த ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். பொதுவானவர்கள் வர மாட்டார்கள். அதிகாலை சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட திரையரங்குகளில் சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்தது. பிற நகரங்களில் இது போன்று எல்லா திரைகளும் ஹவுஸ்புல் ஆகவில்லை.
அதே போன்று வழக்கமாக திரையிடப்படும் காட்சிகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களிலேயே அரங்கம் நிறையவில்லை என்பதை முன்பதிவு தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்வந்துள்ள படம், கௌதம் மேனன், சிலம்பரசன், ஏ.ஆர்.ரஹ்மான் , வேல்ஸ் பிலிம்ஸ், ஜெயமோகன் என பிரம்மாண்டமானவர்கள் இணைந்துள்ள படம் பெரும் வரவேற்பும், வசூலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அது இல்லை என்பதுதான் முதல் நாள் இதுவரை திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை சொல்லும் தகவலாக உள்ளது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஆரவாரப்படுத்த வேண்டிய
” வெந்து தணிந்தது காடு” வெற்றிநடை போடுமா என்பது நாளை தெரிந்துவிடும் தற்போதைய நிலவரப்படி முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 கோடி ரூபாய் மொத்த வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராமானுஜம்
பொன்னியின் செல்வன் படம் வெளியாவதில் சிக்கலா?