ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ வாழ்க்கை வரலாறு படம்!

Published On:

| By Monisha

velunachchiyar biography movie

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ எனும் தலைப்பில் திரைப்படம் உருவாகிறது.

டிரண்ட்ஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஜெ.எம். பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கிறார்.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தேவர் மஹாலில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ.எம்.பஷீர், “வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி,” என்றார்.

நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே ‘தேசிய தலைவர்’ மற்றும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் தெரிவித்தார்.

‘தேசிய தலைவர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து ‘வீரமங்கை வேலு நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார்.

வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார்.

பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

சென்னையில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு!

விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share