சர்வதேச தரத்தை எட்டுகிறதா?
தமிழ்நாடு சார்ந்த அரசியலைப் புனைவுகளில் சொல்வதென்பது கொஞ்சம் கடினமான காரியம். ஏதேனும் ஒரு கட்சியை, தலைவரை, அவரைச் சார்ந்தவர்களை, அவர்கள் சார்ந்த சம்பவங்களை லேசாகப் பிரதிபலித்தால் கூட எதிர்விமர்சனங்கள் அம்புகளாகத் துளைக்கும். எதிர் தரப்பைக் காட்டுவதையும் அதில் சேர்க்க முடியும். அவற்றில் இருந்து முற்றிலுமாக விலகி நின்றாலோ பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற முடியாது. இந்தியா முழுக்கவே இவையிரண்டும் உண்டு என்றாலும், இதர இடங்களில் ஒன்றின் சாயலை இன்னொன்றின் மீது சாத்திவிட முடியும். பல விஷயங்களில் தனித்துவமிக்கதாக விளங்குவதால், தமிழில் அப்படிப்பட்ட படைப்புகளைத் தருவதில் கூர்மையான கவனிப்பைச் செலுத்த வேண்டும்.
ராடான் நிறுவன தயாரிப்பில், வசந்தபாலன் எழுதி இயக்கியுள்ள ‘தலைமை செயலகம்’ வெப்சீரிஸ் தற்போது ஜீ5 தளத்தில் காணக் கிடைக்கிறது. இதன் டைட்டிலே இக்கதை எதனை வலம் வருகிறது என்பதைச் சொல்லிவிடும்.
’தலைமை செயலகம்’ பார்த்தபிறகு நாம் உணர்வது என்ன?
தொடர்ச்சியாகப் பல கதைகள்!
ஒரு வெப்சீரிஸில் மிகச்சிறிய பாத்திரத்தைக் கூட தனித்துவமானதாகப் படைத்தாலே போதும்; தேவைப்படுகிற பட்சத்தில், மிகச்சில பாத்திரங்களை மையமாகக் கொண்டு ஒரு சீசனை தந்துவிட முடியும். அதற்கான சாத்தியங்களைக் கொண்ட மூலக்கதையைத் தேடத்தான் மூளையைக் கழுவிக் காய வைக்க வேண்டியிருக்கும்.
‘தலைமை செயலகம்’ அதற்கான வாய்ப்புகளை ஆங்காங்கே தனக்குள் நிரப்பிக் கொண்டுள்ளது.
அ.இ.எ.மு.க. கட்சியின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கிறார் அருணாசலம் (கிஷோர்). கட்சியிலும் ஆட்சியிலும் சிறிதும் தனது கைகளை விட்டு நழுவிவிடாத வகையில் கவனமாக ஒவ்வொரு நொடியையும் எதிர்கொண்டு வருகிறார். அவரது ஆருயிர் நண்பர் செல்வ புவியரசன் (சந்தான பாரதி). அவரே அக்கட்சியின் பொதுச்செயலாளர்.
மனைவி, இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள் என்று வாழும் அருணாசலத்தை ஒரேயொரு கவலை மட்டும் வாட்டி வதைக்கிறது. அது, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு.
அது சாதகமாக இருக்குமா, பாதகமாக இருக்குமா என்ற குழப்பம் எதிர்க்கட்சியினரை மட்டுமல்லாமல் அவரது கட்சியில் இருக்கும் சிலரிடமே நிலவுகிறது. அதன் நீட்சியாகப் பொறாமையும் பூசலும் பகையும் அருணாசலத்தை வந்து சேர்கிறது.
அருணாசலத்தின் மூத்த மகள் அமுதவல்லியும் (ரம்யா நம்பீசன்) இளைய மருமகன் ஹரியும் (நிரூப் நந்தகுமார்) அருணாசலத்தின் அரசில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர். அவருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவதில் இருவருக்குள்ளும் போட்டி நிலவுகிறது.
அமுதவல்லியின் கணவர் பிரகதீஷ் (சித்தார்த் விபின்) குடும்பத்தினருக்கு நேரடி அரசியலில் தொடர்பில்லை. ஆனாலும், மருமகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று அந்தக் குடும்பம் நினைக்கிறது. ஹரியின் மனைவிக்கோ, தனது தந்தையின் பெயரைக் கணவர் எந்தவிதத்திலும் கெடுத்துவிடக் கூடாது என்பதே ஒரே கவலை.
இவர்கள் போக அருணாசலத்தின் மச்சினர் ஒருவரும் (கவிதா பாரதி) அதே வீட்டில் குடும்பத்துடன் வாழ்கிறார். அவரும் கட்சி, ஆட்சியில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து, அவற்றில் பங்காற்றி வருகிறார்.
அருணாசலத்தின் குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிற ஒரு நபராக இருக்கிறார் கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி). பத்திரிகையாளராக இருந்த அவரைக் கட்சியில் ஆலோசனை உறுப்பினராகச் செயலாற்ற வைக்கிறார் அருணாச்சலம்.
கொற்றவையின் சிந்தனைகளும் முடிவுகளும் அருணாசலத்திற்குப் பல நேரங்களில் பக்கபலமாக இருக்கின்றன. அதனால் அவரைக் கேட்டே ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கிறார். இதுவே, இருவருக்குமான உறவை மோசமானதாகப் பிறர் கண்களுக்குத் தெரிய வைக்கிறது. கொற்றவையின் மகள் மாயா (சாரா பிளாக்), இந்த விஷயத்தால் சொந்த வாழ்வில் பல அவமானங்களை எதிர்கொள்கிறார். அதன் காரணமாகத் தாயை வெறுக்கிறார்.
இந்த நிலையில், அருணாசலத்திற்கு எதிரான வழக்கில் நிச்சயம் தீர்ப்பு எதிராக இருக்கும் என்ற யூகம் கிளம்புகிறது.
வழக்கறிஞர் ரங்கராஜன் (ஒய்.ஜி.மகேந்திரன்), அரசியல் களத்தில் தரகராகச் செயல்படும் கிருஷ்ணமூர்த்தி (ஷாஜி) இருவரும் இச்சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு ஒரு தேசியக் கட்சியின் பிடிக்குள் அருணாசலத்தின் கட்சியினரைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
இதற்கிடையே, கொற்றவையின் தோழி துர்கா (கனி குஸ்ருதி) ‘சென்னை துறைமுகத்தில் மாட்டிய ஒரு கண்டெய்னரை வெளியே கொண்டுவர உதவி வேண்டும்’ என்று கேட்கிறார். ‘அதனைச் செய்யாவிட்டால் ‘நீ யார்’ என்று சொல்ல வேண்டியிருக்கும்’ என கொற்றவையை மிரட்டுகிறார். அந்த கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்பது நம்மைச் சுண்டியிழுக்கும் கேள்வி.
ஒரு தொழிலதிபரிடம் புதிதாக ஒரு புராஜக்டை முடித்து தருகிறேன் என்று முந்நூறு கோடி ரூபாய் வாங்குகிறார் ஹரி. பங்குச்சந்தையில் அவர் கொட்டிய அந்தப் பணம் ‘பணால்’ ஆகிறது. அருணாசலத்திடம் சொல்லி அத்திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கவும் அவரால் இயலவில்லை. அதனால், அந்த தொழிலதிபர் ‘கெடு’ விதிக்கிறார். அதற்குள் பணத்தைத் திருப்பித் தராவிட்டாலோ அல்லது அத்திட்டத்தைச் செயல்படுத்தாவிட்டாலோ கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறார்.
இந்த நிலையில், கொற்றவையைச் சந்திக்கத் துர்காவோடு வந்த நபர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றவர் துர்கா.
அந்த நபரின் கை மட்டும் தனியே ஓரிடத்தில் கண்டெடுக்கப்படுகிறது. கைரேகைகளைக் கொண்டு அவர் ஒரு உளவுப் பிரிவு அதிகாரி என்று அறிகிறது காவல்துறை; அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கின் பின்னணியை முழுதாக வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறார் டெபுடி கமிஷனர் மணிகண்டன் (பரத்). தன் குழுவின் துணையோடு அந்த வழக்கின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்கிறார்.
வெவ்வேறு திசைகளில் நிகழும் இந்தப் பயணங்கள் அனைத்தும், இறுதியாக அருணாசலத்தின் அரசியல் அந்தஸ்து என்னவாகும் என்ற கேள்வியில் வந்து முடிகின்றன.
அதனோடு மேலும் சில கேள்விகளும் சேர்கின்றன. ஊழல் வழக்கில் என்ன தீர்ப்பு வெளியானது? துர்கா – கொற்றவை இடையே இருக்கும் ரகசியம் என்ன? கொற்றவையை எதிர்கொள்ள அருணாச்சலத்தின் உறவினர்கள் என்ன செய்தனர் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘தலைமை செயலகம்’.
இதன் திரைக்கதை சில இடங்களில் விறுவிறுப்பாகவும், சில பகுதிகளில் மிக மந்தமாகவும் நகர்கிறது.
இதில் அருணாசலத்தின் உறவினர்கள், அவர்களது குடும்பத்தினர், கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் என்று பல பாத்திரங்கள் காட்டப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு எம்.பி.யையும் எம்.எல்.ஏ.வையும் ஒரு பெண் நக்சலைட் கொலை செய்வதையும் தொடக்கத்திலேயே காட்டுகிறது ‘தலைமை செயலகம்’ திரைக்கதை. அதனால், அந்தப் பெண் யார் என்ற திசையிலும் அது பயணிக்கிறது.
இவ்வாறு பல கிளைக்கதைகள் இருப்பதால், அவற்றில் சொல்லாமல் விடப்பட்ட அல்லது மறக்கப்பட்ட விஷயங்கள் அடுத்தடுத்த பாகங்களில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட விரவிக் கிடக்கின்றன. அதுவே, இக்கதைக்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை உருவாக்கித் தருகிறது.
அதே நேரத்தில், அதனைத் தக்கவைக்கும் நோக்கில் நேர்த்தியான காட்சியாக்கம் சில இடங்களில் நிகழவில்லை. அது, அந்த ‘கிளாசிக்’தனத்தை எட்டுவதற்கான முயற்சிகளைக் கீழிறக்கி விட்டிருக்கிறது.
நிறைய பாத்திரங்கள்!
கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, பரத், ஆதித்ய மேனன், கனி குஸ்ருதி ஆகியோர் இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வீரியமாகத் தெரிய மெனக்கெட்டிருக்கின்றனர்.
குறிப்பாக முதலமைச்சர் அருணாச்சலமாக நடித்துள்ள கிஷோர், அந்த பாத்திரத்தில் தனிப்பட்ட முறையில் எந்தவொரு நபரின் சாயலும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதே நேரத்தில் கதையின் போக்கையும் பாத்திரத்தின் மனவோட்டத்தையும் பிரதிபலிக்கிற நடிப்பைத் தந்திருக்கிறார்.
நடுத்தர வயதில் இருக்கிற, நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்திருக்கிற, மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிற ஒரு பெண்மணி என்பதனைத் தனது உடல்மொழியால் வெளிக்காட்டியிருக்கிறார் ஸ்ரேயா. இறுதி எபிசோடில் மட்டும் அவரது நடிப்பு அதிருப்தியைத் தருகிறது.
இவர்களை அடுத்து ஒய்.ஜி.மகேந்திரன், ஷாஜி, சந்தான பாரதி, நமோ நாராயணா, பரத், ஆதித்ய மேனன், சித்தார்த் விபின், கவிதா பாரதி, தர்ஷா குப்தா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
அமுதவல்லியாக வரும் ரம்யா நம்பீசனும், ஹரியாக வரும் நிரூப் நந்தகுமாரும் ‘தனித்துவத்துடன்’ திரையில் தெரிகின்றனர்.
சாரா பிளாக்கின் தோற்றம், நடிப்பு ஓகே ரகம் என்றபோதும், அவர் சார்ந்த இதர பாத்திரங்களின் நடிப்போடு அது பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது.
சர்வதேச அளவில் கவனம் ஈட்டிவரும் நடிகை கனி குஸ்ருதிக்கு இதில் பெரிய பாத்திரம் இல்லை. அவரது பங்கு திரைக்கதையில் முழுமையாகக் காட்டப்படவும் இல்லை.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரன் பங்களிப்பு, சின்னத்திரையில் ஒரு பெரிய திரை அனுபவத்தைத் தருகிறது.
படத்தொகுப்பாளர் ரவிகுமார், இசையமைப்பாளர் கிப்ரான் மற்றும் சைமன் கிங், சண்டைப்பயிற்சியாளர் டான் அசோக் தொடங்கி இதில் தொழில்நுட்பரீதியில் பங்களித்திருக்கிற பல கலைஞர்கள், இயக்குனர் வசந்தபாலனின் எண்ணவோட்டத்திற்கு உருவம் தர முயன்றிருக்கின்றனர்.
ஜெயமோகனும் இயக்குனர் வசந்தபாலனும் இதன் கதை, திரைக்கதையை வடிவமைக்க எஸ்.கே.ஜீவா, பரணி கிரி, புதிய பரிதி ஆகியோர் வசனம் எழுதியிருக்கின்றனர்.
அரசியல்வாதிகள் இடையிலான உரையாடல், கவிதைத்தனமான பேச்சு நம் கவனத்தைத் துண்டித்தாலும், சாதாரண மனிதர்களின் இயல்பான பேச்சு இதில் வீரியத்துடன் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே இதனைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.
வழக்கமாக, வெப்சீரிஸ்களில் சாதாரண காட்சிகளும் ‘ஜெட்’ வேகத்தில் நகர்வதாகக் காட்சிப்படுத்தப்படும் அல்லது அதனுள் ஒரு சஸ்பென்ஸ் புதைந்திருக்கும் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படும். இதில் அந்த நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதனால், ‘தலைமை செயலகம்’ சில இடங்களில் விறுவிறுப்பாகவும் சில இடங்களில் தொய்வாகவும் நகர்வதாகத் தோன்றுகிறது.
நல்லதொரு உள்ளடக்கம்!
அதிகார பீடத்தின் உச்சத்தில் இருக்கிறவர்களை, அந்தப் பின்னணியை, அங்கு நடப்பவற்றைச் சொல்லும் கதைகள் உலகம் முழுக்கப் பிரபலம். அதுநாள்வரை செய்திகளில் தகவல்களாக கேட்டு, படித்து, பார்த்து தெரிந்து கொண்டவற்றை ஒரு வாழ்க்கையாக அறிய நேர்வது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் என்பதே அதற்கான காரணம்.
அந்த வகையில், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கிற, அவர்களது நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துகிற கட்சியின், அரசியல் களத்தின் அசைவுகளைச் சொல்கிற ஒரு படைப்பு எளிதாகக் கவன ஈர்ப்பைக் குவிப்பதில் எந்த வியப்பும் இல்லை.
உலகம் முழுக்க இது போன்ற சீரிஸ்களுக்கு எப்போதும் ‘மரியாதை’ உண்டு. ஆனால், அதனை அனைவரும் பார்க்கும்படியாகத் தருவதென்பது மிகப்பெரிய சவால். அதில் வெற்றி பெற்றிருக்கிறது ‘தலைமை செயலகம்’ குழு.
அதேநேரத்தில் இந்தக் கதையினை இன்னும் பிரமாண்டமாகத் திரையில் உணர வைத்திருக்க முடியும் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதனைச் செய்யத் தவறியிருக்கிறது இப்படைப்பு.
எளிய மக்களின் வாழ்வு சார்ந்த திரைப்படங்களை இயக்கி வந்த வசந்தபாலன், அதே மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கிற அரசியல் களத்தை இதில் காட்டியிருக்கிறார். நல்லதொரு உள்ளடக்கத்தைக் கேள்விகள் எழுப்பா வண்ணம் படமாக்கியிருக்கிறார்.
கொற்றவை, துர்கா பாத்திரங்களுக்கு இடையிலான பிணைப்பின் தொடக்கமே இக்கதையின் ஆதார மையம். அது போதுமான அளவுக்குக் காட்சிப்படுத்தப்படவில்லை. அதனை நோக்கிய தேடலுக்கும் திரைக்கதையில் போதிய இடம் தரப்படவில்லை. அதனை உரிய பில்டப் உடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் திரைக்கதையை இன்னும் செறிவானதாக ஆக்கியிருக்கலாம்.
போலவே, அதிகார வர்க்கத்தினரின் தினசரி வாழ்வையும் முக்கிய நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துவதில் கூடுதல் விவரங்களைச் சேர்த்திருக்கலாம். கிஷோரின் நாகர்கோவில் அல்லது நெல்லை வட்டாரப் பின்னணியைச் சொல்லும் வசனங்கள் ‘குடல் வால்’ போன்று இருக்கின்றன; எந்தப் பயனும் இல்லை.
இங்கு குறிப்பிடப்படும் விஷயங்களை இக்குழுவும் கூடப் பரிசீலனை செய்திருக்கலாம்; சில காரணங்களால் அவற்றைப் புகுத்த முடியாமல் போயிருக்கவும் வாய்ப்புண்டு. அதையும் மீறி, மிகச்சிலவற்றை கைக்கொண்டிருந்தால் இந்த சீரிஸ் உள்ளூர் விவகாரத்தைப் பேசும் உலகப் படைப்பாக மாறியிருக்கும்.
தமிழ்நாட்டு அரசியலோடு தொடர்புடைய சில ‘தனித்துவமான’ விஷயங்களை இது போன்ற படைப்புகளில் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதில் அந்த விஷயங்கள் ‘ஊறுகாய்’ போலவே காட்டப்பட்டிருக்கின்றன. போலவே, விபரீதங்களை எழுப்புகிற விவகாரங்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
‘ஒருமுறை பார்க்கலாம்’ என்ற வகையில் ‘தலைமை செயலகம்’ சீரிஸை தந்திருக்கிறார் வசந்தபாலன். அவர் நினைத்திருந்தால், மேற்சொன்ன சில விஷயங்களைச் சேர்த்திருந்தால், சர்வதேச தரத்திற்கு இதனைக் கொண்டு சென்றிருக்க முடியும். இப்போதைக்கு, அடுத்த சீசனில் அதற்கான வாய்ப்புகள் செயல்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருப்பது மட்டுமே இதன் வெற்றி!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
”நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும்” : சித்தராமையா
”ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினருக்கு தொடர்பு” : ஆதாரம் காட்டிய அண்ணாமலை